'எம்.ஜி.ஆரை இன ரீதியாக தமிழ்நாட்டில் தனிமைப்படுத்த பார்த்தார்கள், அப்போது கண்ணதா...
"கமிஷன் வரவில்லை; மணல் கொள்ளை நின்றுவிட்டது என அவர்களுக்குப் பொறுக்கவில்லை"- யாரைச் சொல்கிறார் வைகோ?
சென்னையில் நேற்று ஏபிஜே அப்துல் கலாம் தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மதிமுக தலைவர் வைகோ, ``பொறுக்கவில்லையே! ஆட்சி போய்விட்டதே, அதிகாரம் போய்விட்டதே, வரவேண்டிய கமிஷன் வரவில்லையே! வந்து கஜானாவில் குவிந்துகொண்டே இருக்குமே, அது நின்றுபோய்விட்டதே!
மணல் கொள்ளை நின்றுபோய்விட்டதே, டாஸ்மாக் கொள்ளை நின்றுபோய்விட்டதே, கதவைப் புறம்பாக அடைத்துவிட்டானே! இதற்கு என்ன வழி செய்வது? எப்படியாவது ஆட்சியைக்கவிழ்த்துவிட்டு, அதிமுக-வை ஆட்சியில் உட்காரவைத்து, நமது ஆதரவைக் கொடுப்போம் என்ற நிலைக்குச் சென்றுவிட்டார்கள்.
இ.யூ.மு.லீ கூட்டணி வைத்திருக்கும் தவெக, பா.ஜ.க-வுடன் ரகசிய பேரம் நடத்துகின்ற இழிவான செயலில் தவெக விஜய் கூட்டம் ஈடுபடவில்லை...ஈடுபடவும் செய்யாது.

என்னுடைய நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழைக் கொண்டுபோய்க் கொடுத்தேன். அவர் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிபர். சிறிது நேரம் அரசியலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னார், `இதற்கு முன்பு ஆட்சி இருந்தபோது, மாதம் ஒன்றரை கோடி ரூபாய் நாங்கள் கப்பம் கட்டினோம். ஐந்து ஆண்டுகள் மாதம் ஒன்றரை கோடி ரூபாய் கட்டியிருக்கிறோம். ஆனால், இப்பொழுது பத்து பைசாகூடக் கொடுக்கவேண்டிய அவசியம் கிடையாது.
இதுபோன்று என்னிடம் நூறு பேராவது சொல்லியிருப்பார்கள். இந்த அரசு வந்து என்ன சாதித்தது என்று கேள்விக் கணைகளைத் தொடுக்கின்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்குச் சொல்கிறேன். ஊழலை ஒழிப்பது என்பது ஒரு பிரமாண்டமான சாதனை. ஊழலை ஒழிப்பதில் விஜய் உறுதியாக நிற்கிறார். கமிஷனை ஒழித்துவிட்டார், ஊழலை ஒழித்துவிட்டார்.
ஆனால், இந்தக் கமிஷன் வாங்கிப் பழகிப்போன அதிகாரிகளாக இருக்கிறார்களே, அவர்கள் எந்தக் கோப்பையும் நகர்த்துவதில்லை. அவர்கள் இந்த அரசை முடக்க நினைக்கிறார்கள். நேர்மையான அதிகாரிகளும் இருக்கிறார்கள். எல்லோரையும் நான் குறை சொல்லவில்லை.

ஊழலை ஒழிப்பது எளிதல்ல, இத்தனை சவால்களையும் சந்தித்துதான் ஆக வேண்டும். அதற்குள்ளாகவே ஆறு மாதத்திற்குள் தேர்தல் வந்துவிடும், இந்த ஆட்சி நீடிக்காது என்று சபித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியை நீடிக்க விடமாட்டோம் என்றும் கூறுகிறார்கள். நான் ஒன்று சொல்கிறேன். இந்துத்துவ சக்திகளை, நாசகார பாசிச சக்திகளை, பா.ஜ.க-வின் பின்னணியில் இருக்கிற சக்திகளை எதிர்ப்பதுதான் திராவிட இயக்கத்தின் உயிர்க் கொள்கை!
நான் திராவிட இயக்கத்தால் வார்ப்பிக்கப்பட்டவன். அந்த உணர்வில், இந்தப் பாசிச சக்திகளை, இந்துத்துவ சக்திகளைத் தமிழகத்திற்குள் பிரவேசிக்க விடமாட்டேன்!
அப்படியானால் நீ வாஜ்பாயோடு கூட்டு வைத்திருந்தாயே? என்று கேள்வி கேட்கலாம். வாஜ்பாய் தலைமையில் அரசு அமைந்தபோது, 'பொது தேசிய நிகழ்ச்சிநிரல்' தயார் செய்தோம். அதில் முரசொலி மாறனும் கையெழுத்திட்டிருந்தார், நானும் கையெழுத்திட்டிருந்தேன்.
அதில் மதச்சார்பின்மை இடம்பெற்றிருந்தது. காஷ்மீர் பிரச்னை இடம்பெறவில்லை. இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவைப் பற்றிய குறிப்பே கிடையாது. 'இந்திதான் ஒரே மொழி' என்ற பேச்சும் கிடையாது.

அந்தத் தேசிய நிகழ்ச்சிநிரலில் இந்துத்துவக் கொள்கை எதுவும் கிடையாது. நாங்கள் எல்லோரும் சேர்ந்து கையெழுத்திட்டுதான் அந்தத் தேசிய நிகழ்ச்சிநிரல் வாஜ்பாய் காலத்தில் வந்தது.
பாசிசத்தை எதிர்க்க முழு பலம் நம்மிடம் இல்லை. நமக்கு இருக்கிற சொற்ப பலத்தையும் தி.மு.க-வுடன் இணைத்தோம். அதற்குப் பிறகு ஏற்பட்ட பல நிலைகளில், எங்கள் சுயமரியாதையையும் தன்மானத்தையும் காத்துக்கொள்ள அந்தக் கூட்டணியிலிருந்து வெளிவர வேண்டிய சூழல் ஏற்பட்டது" என்றார்.















