அமித்ஷா சந்திப்பு: ``கூட்டணி குறித்து பேசவில்லை; இதற்கு தான் டெல்லி சென்றேன்'' -...
``கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாஜக பற்றி பேசாதாது ஏன்?'' - CPIM பெ.சண்முகம் கேள்வி
கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு 40 நாள்களுக்கு மேல் பொதுவெளிக்கு வராமல் இருந்த விஜய், கடந்த நவம்பர் மாதம் முதல் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளார்.
செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததை அடுத்து, விஜய் வரும் டிசம்பர் 18-ம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்தித்து தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறார். கரூர் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் தமிழ்நாட்டில் நடத்தும் முதல் மக்கள் சந்திப்பு இது.
இதற்கிடையில் SIR, திருப்பரங்குன்ற விவகாரம் என பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துவிட்டன. திமுகவை அரசியல் எதிரி என தொடர்ந்து விமர்சிக்கும் விஜய், பாஜக பற்றி ஏதும் பேசாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், "கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக எனக் கூறிய விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு எந்த இடத்திலும் கொள்கை எதிரியைப் பற்றி குறிப்பிடவில்லை.
கரூருக்கு முன், கரூருக்கு பின் என கொள்கை எதிரி யார் என்பதில் விஜயின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது" என்று விஜய்யை விமர்சித்து பேசியுள்ளார்.
விஜய்யின் அரசியல் செயல்பாடு குறித்து கரூர் சம்பவத்தின்போதே கருத்துத் தெரிவித்திருந்த பெ. சண்முகம், "கரூர் விவகாரத்தை பயன்படுத்தி, நடிகர் விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிப்பதாக" கூறியிருந்தார்.
மேலும், செங்கோட்டையன் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், "வாச்சாத்தி கொடூரம் நடந்தபோது, அன்றைய வனத்துறை அமைச்சரான செங்கோட்டையன் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சட்டமன்றத்திலே பொய் பேசினார்.
அதிமுக அரசின் அட்டூழியங்களை நாங்கள்தான் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினோம். அப்போதுதான் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அம்மா ரொம்ப ஃபீல் பண்றாங்க.. விபத்து ஏற்படுத்தி, பெ. சண்முகம், அண்ணாமலை ஆகியோரின் கதையை முடித்துவிடுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது செங்கோட்டையன் தான். இமயமலையை இலைச் சேரத்தில் மறைக்க முடியாது" என்று கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


















