TVK Vijay வேட்புமனு குழப்பம் : தேர்தல் விதிகள் சொல்வதென்ன? | Explained | TN Elec...
காட்டி கொடுத்த டாட்டூ, மதுபாட்டில்: உறவுக்கு தடையாக இருந்ததால் காதலன் மூலம் கணவனை எரித்துகொன்ற மனைவி
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் இருக்கும் சையான் என்ற இடத்தில் கடந்த ஒன்றாம் தேதி முகம் எரிந்த நிலையில் அடையாளம் காணமுடியாத ஒருவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த நபரின் உடலை மீட்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காண முடியவில்லை என்றாலும், அவரது கையில் இருந்த ஒரு டாட்டூ அவரை யார் என்று அடையாளம் காட்டியது. கொலை செய்யப்பட்டவர் பெயர் லோகேந்திரா என்று தெரிய வந்தது. லோகேந்திராவை காணவில்லை என்று கூறி அவரது சகோதரரும் போலீஸில் புகார் கொடுத்து இருந்தார்.

எரித்து கொலை செய்யப்பட்ட இடத்தில் சில மது பாட்டில்களும், சில பேப்பர்களும் கிடந்தது. அதனை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அதோடு அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். குற்றம் நடந்த இடத்தில் கிடந்த மது பாட்டில்களில் கியூ.ஆர். கோடு இருந்தது. அந்த கோடை பயன்படுத்தி அது எங்கிருந்து வாங்கப்பட்டது என்பதை கண்டுபிடித்து அதனை யார் வாங்கினர் என்ற விபரத்தை கண்காணிப்பு கேமரா மூலம் தெரிந்து கொண்டனர். அதோடு சம்பவ இடத்தில் இருந்த மொபைல் போன் சிக்னல்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட லோகேந்திராவின் மனைவி மற்றும் மனைவியின் நண்பர் மகேஷ் ஆகியோரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். இதில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இது குறித்து ஆக்ரா துணை கமிஷனர் ஆதித்ய குமார் கூறுகையில்,''மகேஷ் லோகேந்திராவின் மனைவியுடன் நீண்ட நாட்களாக திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளார். இது சமீபத்தில் லோகேந்திராவிற்கு தெரிய வந்தது. உடனே அவர் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து காதலர்கள் இருவரும் லோகேந்திராவை கொலை செய்ய திட்டமிட்டனர்.
லோகேந்திரா காணாமல் போன அன்று லோகேந்திரா தனது வீட்டை விட்டு வெளியில் சென்றதும், அவரது மனைவி தனது காதலன் மகேஷுக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து மகேஷ் லோகேந்திராவை சந்தித்துள்ளார். அவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள். அவர்களுடன் மகேஷ் நண்பர் ஒருவரும் சேர்ந்து கொண்டார். மூவரும் சேர்ந்து தோட்டம் ஒன்றில் அமர்ந்து மது அருந்தினர்.
அவர்கள் மது அருந்திக்கொண்டிருந்தபோது மகேஷும் அவரது நண்பரும் சேர்ந்து லோகேந்திராவை கழுத்தை நெரித்தனர். லோகேந்திரா மயங்கியவுடன் அவர் மீது பெட்ரோல் ஊற்றினர். அதோடு கோதுமை வைக்கோலை எடுத்து போட்டு தீவைத்துவிட்டு சென்றுவிட்டனர். இக்கொலைக்காக தற்போது லோகேந்திராவின் மனைவி, மகேஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.





















