``என் மகன் அல்ல, நானே வேட்பாளர்; நாளை மனு தாக்கல் செய்கிறேன்’’ - ராணிப்பேட்டை கா...
தத்தளித்த ஹைதராபாத்; தட்டித்தூக்கிய லக்னோ! - எப்படி வென்றது பண்ட் & கோ?
இந்த மேட்ச்சும் தோற்றால் ஓனரிடம் கைகட்டி பதில் சொல்ல வேண்டும் என்ற நெருக்கடி ஒரு பக்கம், சொந்த மண்ணில் எப்படியாவது இரண்டு புள்ளிகளைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் இன்னொரு பக்கம் என, லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதின.

டாஸ் வென்றால் பந்துவீச்சை மட்டும்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கேப்டன்களுக்கெல்லாம் யார் சொன்னார்களோ தெரியவில்லை, எல்லாப் போட்டிகளிலும் பந்துவீச்சை மட்டும்தான் தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோலத்தான் இன்றும் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார் கேப்டன் ரிஷப் பண்ட்.
"நாங்கள் பவர் பிளே முடிவதற்குள் 150 ரன்னாவது அடிப்போம்" என்று வந்த ஹைதராபாத் அணியை, "எங்களுக்கு அடுத்த மேட்ச்சிற்கு நேரமாகிவிட்டது, அதனால் சீக்கிரம் அவுட் ஆகிவிட்டு கிளம்புங்கள்" என்று சொல்வது போல லக்னோ அணி பந்துவீசியது. முகமது ஷமி வீசிய பந்தை 'அடிப்போமா வேண்டாமா' என்ற தயக்கத்தோடு அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அடிக்க, அந்தப் பந்துகளைப் பாய்ந்து பாய்ந்து பிடித்துப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள் லக்னோ அணி ஃபீல்டர்கள்.
"தொடக்க வீரர்கள் போனால் என்ன, நான் அடிப்பேன்" என்று களமிறங்கிய இஷான் கிஷன், அடுத்த ஓவரிலேயே பிரின்ஸ் யாதவ் வீசிய இன்-ஸ்விங் பந்தை ஆட முடியாமல் போல்ட் ஆகிச் சொற்ப ரன்களில் வெளியேற, மைதானமே மயான அமைதியில் ஆழ்ந்தது. 10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ப்ராஜெக்ட் ஸ்கோர் வெறும் 75 ரன்கள் எனக் காட்டியதைப் பார்த்து, "எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா?" என ஸ்டாண்ட்ஸில் இருந்த காவ்யா மாறன் வருந்தியது யாருக்குக் கேட்டதோ இல்லையோ, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹென்றி கிளாசனுக்குக் கேட்டிருக்கும் போல!

அடுத்து வந்த பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தது இந்த ஜோடி. கொஞ்சம் கொஞ்சமாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடியவர்களை எப்படியாவது அவுட் ஆக்க வேண்டும் என்ற நோக்கில் 13-வது ஓவரை சித்தார்த் வீச, கிளாசன் ஒரு கேட்ச் வாய்ப்பை அளித்தார். ஆனால், அதையும் லக்னோ அணி தவறவிட்டது.
சிறுத்தை சிக்கும், சிறுவண்டு சிக்காது" என்பதைப் போல, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கிளாசன், சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாகப் பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். மறுபக்கம், "நான் மட்டும் என்ன சும்மாவா?" என்பது போல நிதிஷ் குமார் ரெட்டியும் தன் பங்குக்கு அரைசதம் விளாசினார். துவண்டு கிடந்த ஹைதராபாத் ரசிகர்களிடம் 'புஷ்பா' ஸ்டைல் செலிப்ரேஷன் மூலம் ஒரு சின்ன நம்பிக்கையைக் கொண்டு வந்தார் நிதிஷ்.

100 ரன்களைக் கடக்குமா என எதிர்பார்க்கப்பட்ட ஸ்கோர், இவர்களின் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் 18-வது ஓவரில் 142 ரன்களைக் கடந்தது. ஆனால், விட்டதைப் பிடித்தே ஆக வேண்டும் என்று மீண்டும் வந்த சித்தார்த் பந்துவீச்சில் நிதிஷ் குமார் ரெட்டி ஆட்டமிழந்தார். "சரி, நானும் கிளம்புகிறேன்" என்பது போல அடுத்த ஓவரிலேயே கிளாசனும் வெளியேற, ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களில் முடிவுக்கு வந்தது.
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய மார்க்ரம் மற்றும் மார்ஷ், "இந்த ஸ்கோர் எங்களுக்குப் பத்தாதே" என்பது போல் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். ஆனால், ஐந்தாவது ஓவரை வீசிய மலிங்கா பந்தை மார்ஷ் ஓங்கி அடிக்க, அந்தப் பந்து நிதிஷ் குமார் ரெட்டியின் கையிலேயே தஞ்சமடைந்தது. பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட், அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த மார்க்ரமிற்கு மட்டும் ஸ்ட்ரைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
சீக்கிரமாகப் போட்டியை முடிப்போம் என்ற நோக்கில் ஆடிய மார்க்ரம், ஷிவாங் சர்மா வீசிய பந்தில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த பதோனியும் 12 ரன்களுக்கு அவுட் ஆக, பூரான் மட்டும் கொஞ்சம் மாறுதலாக, எல்லாரும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும்போது இவர் மட்டும் கிரீஸில் கபடி விளையாடியதால் ஸ்டம்பிங் மூலம் இஷான் கிஷனால் அவுட் ஆக்கப்பட்டார். "விக்கெட் விடாமல் ஆடினாலே வெற்றி நிச்சயம்" என்ற நிலையில் இருந்த போட்டியை, "ஒரு விக்கெட் விட்டால் அவ்வளவுதான்" என்ற நிலைக்கு மாற்றிய பெருமை லக்னோ அணிக்கே சேரும்.
போட்டியின் நிலையை அறிந்து, "இது சரிப்பட்டு வராது; நான் அடித்தால் மட்டும்தான் உண்டு" எனத் தேவையான நேரத்தில் பவுண்டரிகள், சிக்ஸர்கள் எனப் பொறுப்புடன் ஆடி வந்தார் கேப்டன் ரிஷப் பண்ட். ஆனால், அவரைத் தவிர யாருக்கும் போட்டியை வெல்ல வேண்டும் என்ற அக்கறை இல்லாதது போல் ஆடினார்கள் லக்னோவின் மற்ற பேட்டர்கள். 19-வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இவரின் இந்த ஓவர் மூலம் போட்டி ஹைதராபாத் பக்கம் கொஞ்சம் சாய்ந்தது.
போட்டி கடைசி ஓவர் வரை சென்று, 6 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்ட்ரைக்கில் இருந்த ரிஷப் பண்ட், "இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமா?" என்பதைப் போல் மூன்று பவுண்டரிகள் விளாசி ஒருவழியாகப் போட்டியை முடித்துக் கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் தொடரின் முதல் வெற்றியைப் பெற்றது லக்னோ அணி.





















