இரண்டே வரிகள்தான்... உங்கள் பிள்ளைகளின் ஆயுளைக் காக்கும் சக்தி மிக்க ஆயுள் தேவ...
'கூடத்தில் தறவாட்டில் 7 மர்ம மரணங்கள்' - பல கோடி ரூபாய் சொத்துக்காகக் கொடூரக் கொலை; காரியஸ்தர் கைது
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமன பகுதியில் கூடத்தில் தறவாடு என அழைக்கப்படும் உமா மந்திரம் வீடு அமைந்துள்ளது. சுமார் 60 ஆண்டுகள் பாரம்பர்ய கேரள பாரம்பர்ய நாலுகெட்டு ஓட்டுவீடு இது.
வீடு மட்டுமே சுமார் 16 சென்ட் நிலத்தில் அமைந்துள்ளது. இந்தக் குடும்பத்திற்கு திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வீட்டில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரை 7 மர்ம மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இறுதியாக கடந்த 2017-ம் ஆண்டு ஜெயமாதவன் நாயர் என்பவர் மர்மமான முறையில் இறந்தார்.
ஜெயமாதவன் நாயரின் போஸ்ட்மார்டம் ரிப்போர்டில் அவரது மரணத்திற்குக் காரணம் என்னவென்று குறிப்பிடப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த வீட்டில் சொத்துகளைக் கவனித்துவந்த ரவீந்திரன் நாயர் என்பவருக்கு மாதவன் நாயர் ரூ.30 கோடி மதிப்பிலான தனது சொத்துக்களை எழுதிக் கொடுத்திருப்பதாக 2019-ம் ஆண்டு தகவல் வெளியானது.
ஜெயமாதவன் நாயர் குடும்பத்தில் நடந்த மரணங்களில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சொத்துக்களைக் கவனித்துவந்த சிலர் சொத்தின் சில பகுதிகளை அபகரித்திருப்பதாகவும் அவரது உறவினராக பிரசன்னகுமாரி என்பவர் 2019-ம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்திருந்தார். கூடத்தில் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த வழக்கில், பல ஆண்டுகளுக்குப் பிறகு முக்கியத் திருப்பமாக அக்குடும்பத்தின் சொத்துக்களைப் பராமரித்து வந்த (காரியஸ்தர்) ரவீந்திரன் நாயர் (60) என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்த மரணம் குறித்து போலீஸார் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடத்திவந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "கூடத்தில் குடும்பத்தின் பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையாச் சொத்துகளுக்கு வாரிசுகளாக இருந்த கோபிநாத பிள்ளை, அவரது மனைவி சுமுகியம்மா, இவர்களது பிள்ளைகளான ஜெயபாலகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், ஜெயஸ்ரீ, கோபிநாத பிள்ளையின் சகோதரர் வேலுப்பிள்ளையின் மகன் உன்னிகிருஷ்ணன் நாயர், மற்றொரு சகோதரரான நாராயண பிள்ளையின் மகன் ஜெயமாதவன் நாயர் ஆகிய 7 பேர் கடந்த 15 ஆண்டுகளில் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இந்த 7 பேரின் இறப்புக்குப் பிறகு, அவர்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான பரம்பரைச் சொத்துகள் அனைத்தும் 'தான செட்டில்மென்ட்' மற்றும் 'உயில்' மூலம் காரியஸ்தர் ரவீந்திரன் நாயர் மற்றும் சிலரது பெயருக்குக் கைமாறியது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்தே, உள்ளூரைச் சேர்ந்த அனில்குமார் மற்றும் குடும்பத்தின் உறவினரான பிரசன்னகுமாரியம்மா ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி அக்குடும்பத்தின் கடைசி வாரிசான ஜெயமாதவன் நாயர் தனது கூடத்தில் வீட்டில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டு, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த மரணம் குறித்து குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் உயிரிழந்த நேரம், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற விதம் மற்றும் அப்போது அளிக்கப்பட்ட வாக்குமூலங்களில் கடும் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் மேற்கொண்ட கள ஆய்வில், ஜெயமாதவன் நாயரின் வீட்டில் இருந்த கட்டிலிலும், அங்கிருந்த மரக்கட்டை ஒன்றிலும் ரத்தக்கறை படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜெயமாதவன் நாயரின் உறவினரின் ரத்த மாதிரியுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், அது ஜெயமாதவன் நாயரின் ரத்தம் என்பது உறுதியானது. தொடர்ந்து திசுப் பரிசோதனை அறிக்கையில், தலையில் பலமாக ஏற்பட்ட காயமே அவரது மரணத்திற்கு முக்கியக் காரணம் எனத் தெரியவந்தது. மேலும், கோழிக்கோடு என்.ஐ.டி பயோ-மெக்கானிக்ஸ் துறை நடத்திய ஆய்வில், ஜெயமாதவன் நாயரின் தலையில் ஏற்பட்ட காயம் கீழே விழுந்ததால் ஏற்பட்டது அல்ல, பலமான பொருளால் தாக்கப்பட்டதால் ஏற்பட்டது என்பதும் வெட்டவெளிச்சமானது.
மேலும், அவரது உடலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பயன்படுத்திய அனில் என்பவரது காரிலும் ஜெயமாதவன் நாயரின் ரத்தக்கறை தடய அறிவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டது. ஜெயமாதவன் நாயரின் சொத்துகளைத் தனது பெயருக்கு மாற்றுவதற்காக ரவீந்திரன் நாயர் தயாரித்த உயிலில் உள்ள கையெழுத்து போலியானது என்பதை தடய அறிவியல் ஆய்வகம் மூலம் நிரூபித்தனர்.

திருமணம் ஆகாத ஜெயமாதவன் நாயர் ஒருவேளை திருமணம் செய்துகொண்டால், தான் போலி உயில் மூலம் அபகரித்த பல கோடி சொத்துகளுக்கு வேறு நபர்கள் வாரிசாகிவிடுவார்கள் என்ற அச்சத்திலேயே அவரை ரவீந்திரன் நாயர் திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டியுள்ளார். காரியஸ்தர் ரவீந்திரன் நாயர் மரக்கட்டையால் ஜெயமாதவன் நாயரின் தலையில் பலமாகத் தாக்கியும், மூச்சுத் திணறடித்தும் கொடூரமாகக் கொலை செய்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தக் கொலையில் ரவீந்திரன் நாயரின் குற்றப் பங்களிப்பை முழுமையாக நிரூபிக்க, அவருக்கு நவீன பிரைன் எலக்ட்ரிக்கல் ஆஸிலேஷன் சிக்னேச்சர் ப்ரொஃபைலிங் எனப்படும் பிரைன் மேப்பிங் பரிசோதனை நடத்தப்பட்டது. சந்தேகப்படும் நபரின் தலையில் எலக்ட்ரோடுகள் பொருத்தப்பட்ட பிரத்யேக தொப்பி அணிவிக்கப்பட்டு, குற்றச் சம்பவம் தொடர்பான காட்சிகள், ஒலிப் பதிவுகள் மற்றும் முக்கியச் சொற்கள் வெளிப்படுத்தப்படும் போது மூளையில் ஏற்படும் மின் அதிர்வலைகள் கண்காணிக்கப்படும்.
நேரடியாக அக்குற்றத்தைச் செய்த நபருக்கு மட்டுமே இத்தகைய குறிப்பிட்ட மூளை அலைகள் தோன்றும் என்ற அறிவியல் அடிப்படையில், ரவீந்திரன் நாயரே இந்தக் கொலையைச் செய்தார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் டாக்டர் அருண் ஆர்.பி.கிருஷ்ணா உத்தரவின் பேரில் தனிப்படையினர் நேற்று முன் தினம் ரவீந்திரன் நாயரை அழைத்து விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனர்.
இவ்வழக்கில் நீதிமன்ற முன்னாள் ஊழியரும் ரவீந்திரன் நாயரின் நண்பருமான அனில் மற்றும் கார் ஓட்டுநர் சஜு ஆகியோரும் உடந்தையாக இருந்த காரணத்திற்காக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



















