``நான் முதல்வருக்கு அணிவித்த பொன்னாடை குறித்து கொச்சைப்படுத்த வேண்டாம்!" - நயினா...
சொந்த நகைகளை ஆண் நண்பரிடம் கொடுத்துவிட்டு திருட்டு நாடகமாடிய பெண்! - போலீஸாரிடம் சிக்கியது எப்படி?
நெல்லை டவுண், வ.உ.சிதம்பரனார் தெருவைச் சேர்ந்த பாத்திர வியாபாரி பாலகுருசாமி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. பாலகுருசாமி, கோயில் திருவிழாவில் பாத்திர வியாபாரம் செய்வதற்காக தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகிலுள்ள தென்மலைக்குச் சென்றார். அப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளை தென்மலையிலுள்ள தனது தங்கை வீட்டில் விட்டுச் சென்றதால் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.

வியாபாரம் முடிந்து டவுணில் உள்ள வீட்டிற்கு திரும்பிச் சென்றபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 33 சவரன் தங்கநகைகள் மாயமாகியிருந்தது. வீட்டிற்குள் மிளகாய்ப்பொடி தூவப்பட்டிருந்தது. இதுகுறித்து பாலகுருசாமி டவுண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் பாலகுருசாமி மனைவியின் செல்போன் அழைப்புகளை சேகரித்து விசாரணை நடத்தியதில், சுத்தமல்லியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், “பாலகுருசாமியின் குழந்தைகளை தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது ரேவதிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியது. சுமார் 4 மாதங்களுக்கு முன்பு ரேவதி, தன் கணவருக்குத் தெரியாமல் நகைகளை என்னிடம் கொடுத்தார். அதை விற்று பணமாக்கி இருவரும் வெளியூர்களுக்குச் சென்று வந்தோம். பாலகுருசாமி பீரோவில் உள்ள 33 சவரன் நகைகளை அடமானம் வைத்து நிலம் ஒன்றை வாங்க வேண்டும் எனக் கூறினாராம்.
பீரோவில் நகை இல்லாதது பாலகுருசாமிக்கு தெரிந்தால் பிரச்னை வரும் என்பதால் நகைகள் திருடப்பட்டதுபோல நாடகமாடினோம்.போலீஸாரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக மிளகாய்ப்பொடி தூவினோம்” எனக்கூறியுள்ளார். பாலகுருசாமியின் மனைவி ரேவதியும் திருட்டு சம்பவத்தை ஒப்புக் கொண்டார். திருட்டு வழக்கினை மோசடி வழக்காகப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். ”வீட்டின் வெளிக்கதவு மட்டும் உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவின் கதவு உடைக்கப்படாமல் சாவியால் திறக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், வீட்டில் உள்ளவர்களின் உதவியில்லாமல் சாவியை எடுத்து பீரோவை திறந்திருக்க வாய்ப்பில்லை என தடயவியல் நிபுணர்கள் கூறியதால்தான் எங்களுக்கு பாலகுருசாமியின் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவரும் பதட்டமாகவே காணப்பட்டார். நாங்கள் சந்தேகப்பட்டது போலவே ஆண் நண்பரிடம் நகைகளை கொடுத்து திருட்டு நாடகமாடியுள்ளார்.” என்றனர் போலீஸார்.



















