மகாராஷ்டிரா: 60 ஆண்டுகளில் இல்லாத வறட்சி; 5 ஹெக்டேர் ஆரஞ்ச் மரங்களை வெட்டிய விவச...
வேலூரில் தலைமுறை பேரவை மற்றும் எக்விடாஸ் நிறுவனம் இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு முகாம்
தலைமுறை பேரவை மற்றும் எக்விடாஸ் நிறுவனம் இணைந்து வேலூர் தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் வேலை வாய்ப்பு முகாமை நேற்று நடத்தின.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
முகாமிற்கு வி.ஐ.டி துணை தலைவரும், வேலூர் சர்வதேச பள்ளி தலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை தாங்கி முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது;
இயற்கையையும், பசுமையையும் நாம் விட்டுட்டு போகிறோம். அடுத்த தலைமுறைக்கு இரண்டும் தேவை.
தளம் 26 என்பது ஒரு வாய்ப்பு. இன்றைக்கு உங்களுக்கு தளம் தயார் செய்து கொடுத்திருக்கிறார்கள். ஒரு வீட்டில் ஒருவருக்கு வேலை கிடைக்கும்போது அந்த வீட்டில் விளக்கேற்றப்படுகிறது. நீங்க எல்லாரும் பட்டம் வாங்குறீங்க. பட்டம் பெறுவது என்பது ஒரு பாஸ்போர்ட் மாதிரிதான். நீங்கள் எந்த நாட்டிற்கு போக வேண்டும் என்றால் விசா வாங்குவது உங்க கையில் தான் உள்ளது. இன்று 100 கம்பெனிக்கு மேல வந்திருக்கிறார்கள்.
ஒரு பக்கம் வேலை இல்லை என்றும் மற்றொரு பக்கம், வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலை உள்ளது.இப்போது ராணிப்பேட்டை, அரக்கோணத்தில் உள்ள சிப்காட்டில் நிறைய நிறுவனங்கள் வந்துள்ளன. வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தனித் திறன் கொண்ட தொழிலாளர்களை எதிர்பார்க்கின்றனர்.
செய்யும் தொழிலே தெய்வம். அது எந்த வேலையாக இருந்தாலும் சரி. செய்யும் தொழில் நமக்கு தெரிந்து இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் தொழில் செய்ய முடியும். இது போட்டி நிறைந்த உலகம். ஒரு சர்வேயில் இன்னும் 10 ஆண்டுகளில் உலகத்தில் உள்ள 800 கோடி பேரில் 120 கோடி பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பார்கள் என்கிறார்கள்.
அவ்வளவு பேருக்கு வேலை கிடைக்குமா என்று பார்க்கும் போது நம்மிடம் கூடுதலாக தனி திறமை என்ன உள்ளது என சிந்திக்க வேண்டும். அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பு முகாமை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் கடின உழைப்பும், உண்மையும் இருந்தால் வாழ்க்கையில் உயரலாம் என பேசினார்.
சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி எம்.ரவி கலந்து கொண்டு பேசுகையில், இந்த வேலை வாய்ப்பு முகாமில் நிறைய பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். பெண்களிடம் அதிக தன்னம்பிக்கை, விடாமுயற்சி உள்ளதால் அவர்கள் ஆண்களை எல்லாவிதத்திலும் முந்தி செல்கின்றனர்.
வேலைக்கு சேருவது என்பது சம்பளத்திற்காக அல்ல அனுபவத்திற்காக. பெண்களுக்கு வேலை கிடைத்தால் அந்த குடும்பமே முன்னேற்றம் அடையும்.
இளைஞர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு ஒரு சிறந்த மாநிலமாக உருவாகியுள்ளது. தற்போது இளைஞர்களின் மாநிலமாக திகழ்கிறது. நாட்டின் எதிர்காலமே ஜென்சி இளைஞர்கள் கையில் தான் உள்ளது.
தமிழ்நாட்டில் 31.5 லட்சம் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளன. சிறு, குறு தொழில் நிறுவனங்களில் 2.6 கோடி பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்பை பாதிக்குமா என இளைஞர்களிடம் அச்சம் உள்ளது. இளைஞர்கள் தங்களுடைய பொது அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். தொழில்நுட்பங்கள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதன் கட்டுப்பாட்டில் நாம் இருப்பது போல் இருக்கக் கூடாது.
வாழ்க்கையில் ஒழுக்கம், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு தன்மை, தன்னம்பிக்கை ஆகியவை தேவை. எதை செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். இளைஞர்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் நம்மிடையே இருக்க வேண்டும் என கூறினார்.
வினோத்கண்ணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
முகாமில் வினோத் கிருஷ்ணமூர்த்தி, வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, அ.ம.மு.க வேலூர் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், தலைமுறை பேரவை நிர்வாகிகள் பூமிநாதன், கே.எஸ்.சுந்தர், சீனிவாசன், கே.சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக எம். சீனிவாசன் வரவேற்றார். முடிவில் மாறன் அசோசியேட்ஸ் உரிமையாளர் வழக்கறிஞர் பி.டி.கே.மாறன் நன்றி கூறினார்.


















