`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீ...
டித்வா புயல்: பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்ல தடை; ராமேஸ்வரத்தில் பலத்த காற்றுடன் தொடர் மழை
இலங்கை அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக உருவெடுத்துள்ளது. ‘டித்வா’ என அழைக்கப்படும் இந்த புயல், இலங்கையின் வட பகுதியில் இருந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல், வரும் 30ஆம் தேதி சென்னை மற்றும் ஆந்திரக் கடலோர பகுதிகளில் கரையை கடந்துசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. இந்த காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. காற்றுடன் இடைவிடாத மழையும் பெய்து வருகிறது. இதனால் ராமேஸ்வரம் கோயிலுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது. அதே போல் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

இவற்றை அகற்றும் பணிகளில் நகராட்சி தலைவர் நாசர்கான் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மழை நீரால் பாதிக்கப்பட்டு குண்டும் குழியாக மாறியுள்ளன.
புயல் காற்றினை தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தின் காரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்புடன் கட்டுப்படுத்து நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ராமேஸ்வரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

இதனிடையே பாம்பன் கடல் பகுதியில் மணிக்கு 63 கி.மீ. வேகத்தில் காற்று பதிவானதை தொடர்ந்து பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து செல்ல வேண்டிய மதுரை பயணிகள் ரயில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டது.
சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை ராமேஸ்வரம் வர வேண்டிய 3 ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பயணிகள் பேருந்து மூலம் ராமேஸ்வரம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

















