'ஆட்சியில் பங்கு டு வாரியங்கள்.!' - தலைமைக்கு தமிழக காங். நிர்வாகிகள் அனுப்பிய க...
தஞ்சாவூர்: ``அந்த கூட்டத்தால் யாராலும் எதுவும் சாதிக்க முடியாது" - விஜயை சாடிய உதயநிதி
திமுக-வில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் ரகுபதி, கோவி.செழியன், அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உதயநிதி பேசியதாவது, ``இளைஞர் அணி நிர்வாகிகளாகிய உங்களை எல்லாம் ஒரே இடத்தில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தஞ்சாவூருக்கு நானே நேரில் வந்து உங்களை எல்லாம் நேரில் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றுள்ளேன். நன்றி சொல்வதற்கும் வந்துள்ளேன்.

கடந்த ஜனவரி 26-ம் தேதி இதே திடலில், `வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கின்ற டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. இன்று இளைஞர் அணி சார்பாக அதே போன்ற ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ஒரு பக்கம் இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு, மறுபக்கம் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு. இந்த நிகழ்வுக்கெல்லாம் வரும் எழுச்சியான கூட்டத்தைப் பார்க்கும்போது எல்லாரும் இளைஞர்கள் எந்தப் பக்கம்? மகளிர் எந்தப் பக்கம்? என்று கேட்கிறார்கள். நான் சொல்கிறேன், இளைஞர்கள் எங்கள் பக்கம், மகளிர் அணி எங்கள் பக்கம்.
டெல்டாக்காரன்
தஞ்சாவூர் மாவட்டம், என்றைக்குமே தி.மு.க-வின் கோட்டை என்பதை, மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்ற மாவட்டம். நம்முடைய தலைவர் அடிக்கடி ``நான் ஒரு டெல்டாக்காரன்’ என்று பெருமையோடு சொல்வார். இன்று அவர் வழியில் நானும் ஒரு `டெல்டாக்காரன்’ என்ற பெருமையோடு உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.
1962-ல் திமுக சந்தித்த இரண்டாவது சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் இதே தஞ்சாவூர் தொகுதியில் நின்றுதான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அப்படிப்பட்ட பல்வேறு பெருமைகளைப் பெற்ற தஞ்சை மண்ணில் உங்களை எல்லாம் சந்திப்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.

இளைஞர் அணியில் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்துள்ளோம். கிட்டத்தட்ட 15,000 நிர்வாகிகள் இந்தக் கூட்டத்துக்கு வந்துள்ளீர்கள். 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளோம். இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சியின் சார்பு அணிக்கும் இப்படி ஒரு வலுவான கட்டமைப்பு நிச்சயம் கிடையாது.
இன்று பல கட்சிகள் வாக்குச்சாவடிக் குழு அமைப்பதற்கே போராடுகிறார்கள். ஆள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். ஆனால், நாம் இளைஞர் அணிக்கு இன்று பாகம் வரை நிர்வாகிகள் நியமித்துள்ளோம். உங்களைப் போன்ற இளைஞர் அணியினரால் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் 76 ஆண்டுகளைக் கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி, இன்று மிக மிக முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் பலர், நம்முடைய இளைஞர் அணியில் பயிற்சி எடுத்துக்கொண்டு சென்றவர்கள்தாம். இன்னும் பெருமையோடு சொல்லப்போனால், இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கொடுத்ததும் திமுக-வின் இளைஞர் அணிதான். அப்படிப்பட்ட இளைஞர் அணியில் இருப்பது நமக்கெல்லாம் பெருமை. இன்று நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்களை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்த்துப் பாராட்டிக்கொண்டு இருக்கிறது.
மகளிருக்கு விடியல் பயணம், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு, அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி கற்கச் செல்லும் மாணவிகளுக்குப் புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்குத் தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போன்று மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திட்டம். ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. மகளிருக்கு உரிமைத் தொகை சென்று சேர்வது பாசிச சக்திகளுக்கும் அடிமைகளுக்கும் பிடிக்கவில்லை. எப்படியாவது இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.
பா.ஜ.க-வைச் சேர்ந்த வழக்கறிஞரான அஷ்வினி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுத்து சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு எப்படியாவது உரிமைத் தொகையை நிறுத்த வேண்டும் என்று முயற்சித்தார். இந்தச் செய்தி தலைவருக்கு வந்த உடனே, நீ என்னுடைய தமிழ்நாட்டு மகளிருக்கு ரூ.1,000 கொடுப்பதைத் தடுக்கிறாயா? நான் 5,000 கொடுக்கிறேன்’’ என்று இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கியுள்ளார். பொங்கலுக்கு 3,000, மகளிர் உரிமைத் தொகை 1,000 என கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மொத்தம் 9,000 தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்.

பாசிசவாதிகளும் அடிமைகளும் இன்று வயிற்றெரிச்சலில் இருக்கிறார்கள், என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் தமிழ்நாட்டில் அமையப் போவது திராவிட மாடல் அரசுதான். மகளிருக்கு வழங்கும் ரூ1,000 உரிமைத் தொகையை 2,000 உயர்த்திக் கொடுப்பேன் என்று நம் முதலமைச்சர் உறுதிமொழி அளித்துள்ளார். இப்பொழுது ஒட்டுமொத்த சங்கிக் கூட்டமும் அடிமைக் கூட்டமும் கதறிக்கொண்டு இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கும் பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு செய்து கொடுத்துள்ளது.
முரட்டு அடிமையை எங்காவது பார்த்ததுண்டா?
இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத பா.ஜ.க அரசு தமிழ்நாட்டிற்கு எல்லா வகையிலும் தொல்லை கொடுக்கிறது. நிதி உரிமையைப் பறிக்கிறார்கள், மொழி உரிமையைப் பறிக்கிறார்கள், கல்வி உரிமையைத் தடுத்து நிறுத்துகிறார்கள். இந்தியையும், சமஸ்கிருதத்தையும் எப்படியாவது தமிழ்நாட்டுக்குள் திணிக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு திட்டத்தைக் கூட அறிவிக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பட்ஜெட்டை முழுமையாகப் படித்து முடிப்பதற்கு முன்னரே வாழ்த்துச் சொல்கிறார். இவரைப் போன்ற ஒரு முரட்டு அடிமையை எங்காவது பார்த்ததுண்டா?
தேர்தல் வருவதால் பா.ஜ.க-வினர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார்கள், ஆனால் நிதி வராது. மோடி, அமித் ஷா, உங்களுடைய பருப்பு வடநாட்டில் வேகலாம், ஆனால் தமிழ்நாட்டில் ஒருபோதும் வேகவே வேகாது. கூட்டணியில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் எப்படிப் புகழ்ந்தார்கள் என்று பாருங்கள். ஒரு காலத்தில் "எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதற்குத் தூக்கில் தொங்கிவிடலாம்" என்று சொன்னார்கள்.
இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டுக்கு "இரட்டை எஞ்சின்" அரசு வேண்டும் என்று மோடி சொல்கிறார். மோடி அவர்களே முதலில் உங்கள் வண்டியின் டயரைப் பாருங்கள். தமிழ்நாட்டில் நீங்கள் கூட்டணி வைத்துள்ள அனைவரும் பஞ்சரான டயர்கள். உங்கள் வண்டியின் எஞ்சினும் பழுதாகிவிட்டன. டயர்களும் பஞ்சராகிவிட்டன. அவை தமிழ்நாட்டில் என்றைக்கும் ஓடாது. எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-வின் மிகப்பெரிய அடிமையாக வலம் வருகிறார்.
இவர்கள் இப்படி என்றால், இன்னொரு பக்கம் யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. ஒரு கொள்கை, லட்சியம், கோட்பாடு எதுவுமே இல்லாமல், அப்படி என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அரசியல் என்றால் ஏதோ பொழுதுபோக்கு என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் என்பது மக்கள் பணிதான், பொழுதுபோக்கு கிடையாது, அது ஒரு அர்ப்பணிப்பு, அது ஒரு தியாகம் என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இந்த அர்ப்பணிப்பும் தியாகமும் இல்லாத அந்த கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும் எதுவும் சாதிக்க முடியாது. ஆகவே, இப்படிப் பாசிஸ்ட்டுகளையும் பழைய, புதிய அடிமைகளையும் வீழ்த்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கப்போகின்ற போர்தான் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் என்பதை நாம் மனதில் வைத்து செயல்பட வேண்டும். இந்தப் போரில் தமிழ்நாட்டைக் காக்கப் போகின்ற முன்களப் பணியாளர்கள், வீரர்கள் நீங்கள்தான். வரும் சட்டமன்றத் தேர்தல் சமூக நீதிக்கும் சமூக அநீதிக்கும் இடையில் நடக்கப் போகின்ற தேர்தல். தமிழ்மொழிக்கும் இந்தி மொழித் திணிப்புக்கும் இடையில் நடக்கப் போகின்ற ஒரு தேர்தல். தமிழ்நாடு என்றைக்குமே தலைகுனியாது என்று டெல்லிக்கு நாம் தெரிவிக்க வேண்டிய தேர்தல். தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்குக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது (Out of control) என்பதைத் தெரிவிக்க வேண்டிய தேர்தல்.
தேர்தலுக்கு இன்னும் 50 நாட்கள்தான் இருக்கின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடியாகத் திட்டமிட்டு உங்களுடைய பணிகளை நீங்கள் வகுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வீடாக ஏறி இறங்குங்கள். ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்துப் பேசுங்கள். மக்களிடம் தைரியமாகச் சென்று நம்முடைய சாதனைகளையும் வரலாற்றையும் எடுத்துச் சொல்லுங்கள். உங்களுடைய உழைப்புக்கான அங்கீகாரத்தை நம்முடைய முதலமைச்சர் நிச்சயம் உங்களுக்குத் தருவார். தமிழ்நாட்டை டெல்லியிடமிருந்து நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணப்படும் அன்று எல்லா வாக்குச்சாவடிகளிலும் நிச்சயம் உதயசூரியன் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நம்முடைய தோழமைக் கட்சிகளையும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வைக்க வேண்டும்.

மோடி வந்ததும் உதயசூரியன் மலர்ந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு பொய்யைக் கூறிக்கொண்டு இருக்கிறார். எங்களின் உதயசூரியன் என்பது ஏதோ வெறும் சுவரில் உள்ள வரைபடம் கிடையாது. எங்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் ரத்தத்திலும் ஊறிப் போன சின்னம் உதயசூரியன். அரசியல் அறிவே இல்லாத அடிமைகளும் அட்டைகளும் என்னதான் உளறினாலும் புலம்பினாலும் களத்தில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது உதயசூரியன்.
வரும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று தலைவர் நமக்கு ஓர் இலக்கு கொடுத்திருக்கிறார். அந்த இலக்கை நோக்கி ராக்கெட் வேகத்தில் உழைக்க வேண்டும். 200 தொகுதிகள் போதாது, அதைவிட அதிகமான தொகுதிகளில் திமுக நிச்சயம் வெற்றிப் பெற்று காட்டும். அதற்கான தொடக்கமாக இந்தத் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய எட்டுத் தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இந்தத் தேர்தலில் நாம் வெற்றிப் பெற்றால், தமிழ்நாடு வெற்றியடைந்ததற்கு சமம். நாம் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், நம் தலைவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்றால், நாம் அனைவரும் ஒற்றுமையோடும் உறுதியோடும் உழைப்போம்" என்றார்.


















