Padayappa Shooting-ல நடந்த மறக்க முடியாத சம்பவம்! - Ramesh Khanna | Rajinikanth ...
``தமிழ் கடவுள் முருகரை எப்படி வழிபடணும்னு எங்களுக்குச் சொல்லித் தர வேண்டாம்'' -திமுக தென்காசி எம்.பி
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்ததுபோல், இந்த ஆண்டும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
ஆனால், இந்து அமைப்புகள் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மேலும், இதுதொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிக்கந்தர் தர்காவிற்கு அருகிலுள்ள தூணில் தீபம் ஏற்றச் சொல்லி உத்தரவிட்டது சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது என்று திமுகவைச் சேர்ந்த எம்.பிக்கள் மக்களவையில் விவாதித்து வருகின்றனர். அதே நேரத்தில், பாஜக எம்.பிக்கள் இந்து அமைப்பினருக்கு ஆதரவாக விவாதித்து வருகின்றனர்.
இதுதொடர்பான விவாதங்கள் மக்களவையில் காரசாரமாக நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில், இன்றைய மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து திமுக அரசைக் கண்டித்துப் பேசிய பாஜகவின் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்,
"இந்தியாவில் ஒரு மாநில அரசு சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. நீதிமன்றம் அனுமதி கொடுத்தும், ஸ்டாலின் அரசு ஏன் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்காமல் தடுத்தது?
அன்று அயோத்தியில் ராமர் கோவிலுக்காக நீதி கேட்டு நாம் நீதிமன்றம் சென்றோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது," என்று பேசியுள்ளார்.
இதுதொடர்பாக பேசியிருக்கும் திமுக தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார்,
"எங்களின் திராவிட மாடல் அரசின் முதல்வர் ஸ்டாலின், இந்து அறநிலையத் துறைக்குப் பல நலத்திட்டங்களை மேற்கொண்டிருக்கிறார். இதுவரை 3,925 இந்து கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்குச் சொந்தமான 8,024 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
பழமையான 352 கோவில்களுக்கு மேம்பாட்டு பணிகள் செய்ய சுமார் 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொன்மையான 76 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
150 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த தேர்த் திருவிழாவும் இப்போது நடத்தப்பட்டு வருகிறது.
திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சுமார் 3 கோடியே 65 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் தங்கள் வழிபாட்டு முறையை பின்பற்றுவதற்காக இப்படிப் பல்வேறு திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த அமைதியான சூழலில் சில மதவாத சக்திகள் பொய்யான தகவல்களைப் பரப்பி, அமைதிப் பூங்காவாக இருக்கும் எங்கள் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதை தமிழ்நாட்டு மக்கள் எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டார்கள்.
திருப்பரங்குன்றத்தில் முருகர் சிரித்தால், அதன் எதிரொலி இந்த டெல்லியிலும் கேட்கும். மதவாத சக்திகளுக்கு எதிராக தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்," என்று மக்களவையில் பேசியுள்ளார்.










.jpg)





