தவெக: 'மெழுகுவர்த்தி சண்டை இல்ல; கௌரவச் சண்டை?' - சர்ச்சையான நவல்பட்டு விஜி; பின...
`தமிழ் வாசிக்க எழுத தெரியாது, ஆனா.!' - சிங்கீதம் சீனிவாச ராவிடம் பணிபுரிந்த ராசி அழகப்பன்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அறுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் தன்னுடைய 95 வது வயதில் காலமாகி விட்டார்.
தமிழ் சினிமாவுக்கு இவரைக் கூட்டி வந்தது நடிகர் கமல்ஹாசன். கமலின் ராஜபார்வை, மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா ஆகிய படங்களை இயக்கியவர் இவரே.
அபூர்வ சகோதர்கள் படத்தில் இவரிடம் துணை இயக்குநராப் பணிபுரிந்தவர் ராசி அழகப்பன். தொடர்ந்து மகளிர் மட்டும், மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களிலும் பணி புரிந்த ராசி அழகப்பனிடம் பேசினோம்.

''பூர்வீகம் தெலுங்குன்னாலும் தமிழ்நாட்டுலதான் மாநிலக் கல்லூரியில படிச்சார். கடைசி வரை இங்கதான் வாழ்ந்தார். ஆனா தமிழ் எழுத, வாசிக்க வராது. இந்தச் சூழல்ல 'அபூர்வ சகோதரர்கள்' துணை இயக்குநரா அவர்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினார் கமல் சார். அவர் டைரக்ட் பண்ற ஸ்டைலே தனி. ஒரு புரஃபரசர் மாதிரி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார். அடிப்படையில எழுத்தாளர்ங்கிறதால கையில ஸ்கிரிப்ளிங் பேட் எப்பவுமே இருக்கும்.
பதினைஞ்சு நாள் ஷூட்டிங்னா முதல் நாளே மொத்த ஷெட்யூலும் பக்காவா தயாராகிடும். மொழி தெரியாட்டாலும் சீன் சொல்லும் போது உணர்வுகளை அழகா கைப்பற்றி சீன்ல கொண்டு வந்துடுவார். ஷூட்டிங் முடிஞ்சா உதவி இயக்குநர்களை தன்னுடைய கார்லயே கொண்டு போய் விடுகிற ஒரு பழக்கத்தை வச்சிருந்தார்.

அதேபோல திரைப்பட விழாக்கள்ல பெரும்பாலும் அவரைப் பார்க்க முடியாது. முகம் காட்ட ஆசைப்பட மாட்டார். 'பேர் வச்சாலும் வெக்காமப் போனாலும் மல்லி வாசம்' பாட்டு' ரொம்ப வருஷம் கழிச்சு இப்போதைய சமூக ஊடகங்கள்ல ட்ரென்ட் ஆனப்ப ரொம்பவே ரசிச்சார்.
அப்ப அவர் சொன்ன ஒரு விஷயம் ரொம்ப முக்கியமானது. இப்போதைய தலைமுறை ரசிக்கற மாதிரியான பாடல்களை அன்னைக்கே நாம கொடுத்திருக்கோம்கிறதுல திருப்தி. ஆனா இன்றைய பாடல்கள் அடுத்த தலைமுறைக்கே போகுமாங்கிறதே கேள்வியா இருக்கே' என ஆதங்கப்பட்டார்.
மூணு படங்கள்ல அவர்கிட்ட ஒர்க் பண்ணினேன். அதன் பிறகும் தொடர்புலயேதான் இருந்தேன். ஒரு சீனியர் டைரக்டரா அவர் எனக்குச் சொன்ன ஒரு அட்வைஸ் இதுதான், சினிமா எடுக்க பெரிய பொருளாதரமோ, நடிகர் நடிகைகளோ, வியாபார உத்தியோ அவசியமே இல்ல. கதை சிறந்ததா இருக்கணும், அவ்வளவுதான்!
ஒருவேளை தமிழ் நாட்டுல பிறந்திருந்தா தமிழல்ல நிறைய சிறந்த திரைப்படங்களைக் கொடுத்திருப்பாரோ என்னவோ' என்கிறார் அழகப்பன்.














