செய்திகள் :

`தலைமைக்குப் புகார்... அனுப்பியவர் மீதே நடவடிக்கையா?' - வெடிக்கும் பெரம்பலூர் விசிக விவகாரம்

post image

"கட்சிப் பெயரைப் பயன்படுத்தி, எங்கள் கட்சி மாவட்டச் செயலாளர் கட்டப்பஞ்சாயத்து, கட்சிக்கு விரோதமான செயல், குற்றச் செயல்களில் ஈடுபட்டது பற்றித் தலைமைக்குப் புகார் அனுப்பினேன். உடனே, நான் வகித்து வந்த மாநிலப் பொறுப்பு, உறுப்பினர் பதவிகளில் இருந்து தன்னிச்சையாக என்னை நீக்கிவிட்டார். இது நியாயமா?!" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் தொகுதி மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமாருக்கு எதிராக வெடிக்கிறார், தொண்டரணி (பாதுகாப்பு) முன்னாள் மாநிலத் துணைச் செயலாளர் எம்.எஸ். சபரீஷ்.
 

'என்ன பிரச்னை?' என்று சபரீஷிடமே பேசினோம்.

sabarish

"நான் மாநிலப் பொறுப்புக்கு வந்த பிறகு, சிறப்பாகச் செயல்பட்டேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. இதனால், எனக்கு எதிராகக் கோஷ்டி அரசியல் செய்தார். தனக்குத் தெரிந்த பெண் ஒருவரிடம் இருந்து நகையை வாங்கி அடகு வைத்துச் செலவுசெய்தார். இது அவரது கணவருக்குத் தெரியவர, அந்தப் பெண்ணை விட்டு 'வழிப்பறியில் நகை பறிகொடுத்தேன்' என்று காவல் நிலையத்தில் பொய்யான புகாரைக் கொடுக்க வைத்தார். ஆனால், கிருஷ்ணகுமார் கொடுத்த ஐடியா அம்பலமாகி, அவர்மீதே திரும்பியது.

இதனால், கட்சிக்குக் கெட்ட பெயர். இதுபற்றித் தலைமைக்குப் புகார் அனுப்பியதால், என்மீது கோபமானார். அதேபோல், பெரம்பலூர் நகராட்சியில் இருந்து எங்கள் கட்சி கவுன்சிலர் ஒருவருக்குப் பேருந்து நிலையத்தில் கடை ஒன்றை ஒதுக்கினார்கள்.

 அதைக் கட்சிக்குத் தெரியாமல் கிருஷ்ணகுமார் அந்தக் கவுன்சிலரோடு சேர்ந்து ரூ. 47 லட்சத்துக்கு விற்பனை செய்து, பணத்தைத் தான் வைத்துக்கொண்டார். அதேபோல், ஆள் இல்லாத சொத்தை, ஆளே இல்லாத பெருமாள் என்ற பெயரில் போலி ஆவணங்களைத் தயாரித்து, ஒரே நாளில் அடுத்தடுத்து இருவர் பெயரில் பத்திரம் போட்டார்கள். இதில், மூளையாகச் செயல்பட்டது கிருஷ்ணகுமார்தான். ஆனால், இதில் தவறு நடந்ததைக் கண்டுபிடித்து மாவட்டப் பதிவாளர் இரண்டு பத்திரங்களையும் ரத்து செய்தார்.

இந்தச் சம்பவங்கள் பற்றியும், எப்போதும் மதுபோதையில் இருப்பதோடு, சூதாடும் கும்பல், தலித் மக்களுக்கு எதிரான மாற்றுச் சமூகப் பிரமுகர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டு மக்களுக்கு எதிராகச் செயல்படுவது குறித்தெல்லாம் தலைமைக்குப் புகார் அனுப்பியதால், என்மீது அவருக்குக் கோபம் அதிகமானது.

 இந்நிலையில்தான், பெரம்பலூர் தில்லை நகரைச் சேர்ந்த, ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் கலைவேந்தன் என்பவரை ஆட்களோடு சென்று மிரட்டி, 'கமிஷனாக எனக்கு ரூ. 12 லட்சம் பணம் தரணும்' என்று மிரட்டினார். இதனால், என் கண்முன்னாலேயே ரூ. 2 லட்சத்தைப் பணமாகவும், மீதித் தொகைக்கு இரண்டு செக்காகவும் வாங்கினார்.

இந்த விவகாரம் குறித்த கிருஷ்ணகுமாரின் மிரட்டல் ஆடியோ வெளியாகிப் பரபரப்பானது. இன்னொரு பக்கம், கலைவேந்தன் புகார் கொடுத்ததோடு, 'கிருஷ்ணகுமார் பணம் கேட்டு மிரட்டியது சபரீஷுக்குத் தெரியும்' என்று குறிப்பிட்டார். இதனால், காவல்துறை அழைத்தபோது, கிருஷ்ணகுமார் பணம் கேட்டு மிரட்டியது உண்மைதான் என்று கூறினேன். மிரட்டி வாங்கிய பணத்தைக் கிருஷ்ணகுமார் கலைவேந்தனுக்குத் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டதால், வழக்கு எதுவும் பதியப்படவில்லை.

 இந்த விவகாரமும் என் மூலம் தலைமைக்குப் போகவும், மாநிலப் பொறுப்பில் இருந்த என்னைப் பதவியில் இருந்து நீக்க அதிகாரமே இல்லாத கிருஷ்ணகுமார், தனது லெட்டர் பேடில், 'கட்சிக்கு விரோதமாகச் செயல்படும் சபரீஷைக் கட்சிப் பொறுப்பு, உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதாக' குறிப்பிட்டு அறிவித்திருக்கிறார்.

letter

ஆனால், நான் வகித்துவரும் மாநிலப் பொறுப்பின் செயலாளர், 'இந்த நீக்கம் செல்லாது. மாநிலப் பதவியில் தொடர்வார்' என்று கடிதம் கொடுத்ததும், கிருஷ்ணகுமார் என்னை இன்னும் பொறுப்பில் நியமிக்கவில்லை. இதுபற்றித் தலைமைக்குப் புகார் அனுப்பியிருக்கிறேன். தவறு செய்வதைத் தலைமைக்குச் சுட்டிக்காட்டினால், நடவடிக்கையா? இதை நான் சும்மா விடப்போவதில்லை" என்றார் ஆக்ரோஷமாக!

 இதுபற்றி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் தொகுதி மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமாரிடம் பேசினோம்.
 "சமூக வலைதளங்களில் கட்சியைப் பற்றித் தொடர்ந்து தவறாக எழுதி வருகிறார். பட்டியல் சமூக இளைஞர் ஒருவருக்குக் கலைவேந்தன் பணம் தரணும். அதுக்காகக் கலைவேந்தனிடம் போய்க் கேட்டோம். அவர் பணம் தர ஒப்புக்கொண்டார். ஆனால், அதை வைத்து சபரீஷ் எனக்கு எதிராகக் கேம் விளையாடிவிட்டார். என் பெயரில் எந்தச் செக்கிலும் பெயரில்லை. வாங்கிய பணத்தையும் கொடுத்துட்டாங்க. நான் கட்டப்பஞ்சாயத்து எதுவும் செய்யவில்லை.

krishnakumar

பத்திரம் விவகாரத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் ரிஜிஸ்டர் ஆபிசுக்குப் போனதேயில்லை. இதன் பின்னணியில் சபரீஷ்தான் இருப்பதாகச் சொல்றாங்க. நகை வழிப்பறி வழக்கு ஏற்கெனவே க்வாஷ் ஆகிவிட்டது. கடை விவகாரம் நான் மாவட்டச் செயலாளர் ஆவதற்கு முன்பு நடந்த விவகாரம். அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நான் 30 வருஷமாக இருக்கிறேன். சபரீஷ் மூணு மாசத்துக்கு முன்னாடி கட்சிக்கு வந்தவர். எல்லாமே பொய்க் குற்றச்சாட்டுகள். அவரைப்பற்றி விசாரித்துவிட்டு, அதன்பிறகு என்னிடம் கேளுங்க" என்கிறார் காட்டமாக!

"எனது கைக்கடிகாரத்தின் விலை ரூ.5,500 மட்டுமே" - வதந்திக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

அமைச்சர் ராஜ்மோகன் அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் விலை ரூ. 45,00,000 அளவுக்கு இருக்கும் என்றும், அது மிகவும் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் வகையைச் சேர்ந்தது என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்ட... மேலும் பார்க்க

“உண்போம், குடிப்போம், கொண்டாடுவோம் என்பது இந்தியக் கலாசாரம் அல்ல" - சேமிப்பை வலியுறுத்திய மோடி

ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மணிலா சென்று திரும்பிய இந்தியப் பிரதமர் மோடி, நேற்று (நவம்பர் 18) உடனடியாக மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசுச் செயலாளர்களுடன் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அ... மேலும் பார்க்க