2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவை சிகிச்சைகளைக் கடந்து அப்போலோ மருத்துவமனை சாதனை!
தாளவாடி: இளைஞரை சங்கிலியில் கட்டிவைத்து சித்ரவதை; கொடூர காவல்துறையின் பதைபதைக்க வைக்கும் வீடியோ
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகில் உள்ள திகினாரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாது (எ) மாதேவா. 20 வயதான இவர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை என மாதேவாவை அழைத்துச் சென்ற தாளவாடி காவல்துறையினர், காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள காவலர் ஓய்வறை ஜன்னல் கம்பியில் சங்கிலியால் கைகளைக் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கித் துன்புறுத்தியுள்ளனர்.
மாதேவாவிற்குத் தொடர்பில்லாத மற்றொரு கொள்ளை சம்பவத்திலும் பொறுப்பேற்று ஒத்துக்கொள்ளுமாறு சித்ரவதை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் கதறும் இளைஞர் மாதேவாவை மனிதாபமற்ற முறையில் தாக்கும் கொடூர காவலர்களின் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி காண்போரைப் பதற வைக்கின்றன.

இந்தக் கொடூரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஈரோடு மாவட்ட காவல்துறை, " சம்பந்தப்பட்ட காணொளி கடந்த 2024- ம் ஆண்டு நடைபெற்ற ஒரு பழைய நிகழ்வு. இது தொடர்பாக ஏற்கனவே உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த காவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன" என விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள், "காவல் நிலைய மரணங்கள் அல்லது கொடூரத் தாக்குதல்கள் நடக்கும்போது, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வெறும் பணியிட மாற்றம் அல்லது தற்காலிக சஸ்பெண்ட் போன்ற சடங்கு ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன.
தவறு செய்யும் போலீஸார் மீது உடனடியாக குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜனநாயக நாட்டில் இத்தகைய மனித உரிமை மீறல்கள் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும். இந்தக் கொடூரம் எப்போது யாரால் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகள் ஆணையம் தலையிட வேண்டும்" என்றனர்.



















