நள்ளிரவு வரை நீண்ட பேச்சுவார்த்தை: `ஷிண்டே கட்சியிலிருந்து தலைவர்களை இழுக்கமாட்ட...
திண்டுக்கல்: `வைகை ஆற்றில் விடப்படும் ஆடைகள், கழிவுகள்; தோல் நோய்கள் ஏற்படும் அபாயம்' -மக்கள் அச்சம்
திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி வழியாக செல்லும் வைகை ஆற்றின் கரையோரத்தில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்திற்கு அடுத்தப்படியாக, இந்த கோவிலில் திதி கொடுப்பது போன்ற காரியங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.

புனித தளமாக விளங்கும் இந்த கோவிலின் அருகில் இருக்கும் வைகை ஆற்றில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திதி கொடுப்பதோடு, குளித்த பின் அவர்களின் உடைகளை ஆற்றிலேயே விடுவது வழக்கம். இதனால் ஆற்றின் கரையோரத்தில் பெருமளவில் ஆடைகள் சேர்ந்து அசுத்தமாக காட்சியளிக்கிறது.
அதுமட்டுமல்லாமல், கோவிலைச் சுற்றி உள்ள உணவகங்களில் இருந்து வரும் கழிவுகள், நெகிழிக் குப்பைகள் அனைத்தையும் ஆற்றிலேயே கொட்டி விடுகின்றனர். இதனால் அங்கு குளிக்கும் பக்தர்களுக்கு தோல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
சுகாதாரமான இந்த தண்ணீரே திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் விவசாயத்திற்கும் பயன்படுகிறது.
இதனால் இதை குடிநீராக பயன்படுத்தும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், ஆற்றில் கழிவுகளை கலக்கக் கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதன் தொடர்பாக நிலக்கோட்டை வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்டோம். “இன்னும் ஒரு வாரத்தில் ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் குப்பைகளையும் துணிகளையும் அகற்றிவிட்டு, உணவகங்களில் இருந்து கொட்டப்படும் கழிவு பொருள்கள் இனிமேல் ஆற்றில் கொட்டப்படாதபடி நடவடிக்கை எடுப்போம்” என அவர் உறுதி அளித்துள்ளார்.

















