KH x RK: ரஜினி கமலின் `12-07' சென்டிமென்ட்; நெல்சனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ரஜின...
திருப்பத்தூர் மாவட்டப் பறவையாக இந்திய `சாம்பல் நிற இருவாச்சி' அறிவிப்பு!
திருப்பத்தூர் மாவட்டத்தின் ' மாவட்டப் பறவையாக சாம்பல் நிற இருவாச்சி' பறவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது, திருப்பத்தூர் மாவட்டத்தின் உயிரியல் அடையாளத்தை வலுப்படுத்தும் முயற்சியாகவும், மாவட்டச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் நோக்கத்தை அடிப்படையாகவும் கொண்டது.

மாவட்டப் பறவை என்ற அறிவிப்பு இந்தியா முழுவதும் கட்டாயமாக சட்ட நடைமுறையில் இல்லை. இது பெரும்பாலும் உள்ளூர் நிர்வாகம், வனத்துறை, கல்வி நிறுவனங்கள் அல்லது சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து மேற்கொள்ளும் விழிப்புணர்வு முயற்சியாக இருந்து வருகிறது.
அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் 75-வது பவளவிழாவை முன்னிட்டு (16.02.2026) நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், கடந்த ஜனவரி 15 முதல் பிப்ரவரி 10 வரை நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் பெற்ற பறவை மாவட்ட நிர்வாக அலுவலர்களால் அதிகாரப்பூர்வமாக திருப்பத்தூர் மாவட்டப் பறவையாக அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் 30க்கும் மேற்பட்ட கலை, அறிவியல், பொறியியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த முயற்சியால் 1,53,386 வாக்குகள் பதிவாகியதில், 45,333 வாக்குகள் பெற்று இந்திய சாம்பல் நிற இருவாச்சி முதன்மை பெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள், வனத்துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அல்லாத பறவை நல தொண்டு அமைப்புகள் உள்ளிட்ட 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மாணவர்களை இயற்கை காப்புக்கான செயல்களில் ஈடுபடுத்துதல் மற்றும் மாவட்டத்தின் உயிரியல் அடையாளத்தை உருவாக்குதலேயாகும். தமிழகத்தில் இதற்கு முன் சேலம் மாவட்டம் மட்டுமே மாவட்டப் பறவையை அறிவித்து, அதற்கு பாம்புத்தாரா (Oriental Darter) என்ற பறவை தேர்ந்தெடுக்கப்பட்டது.
திருப்பத்தூரில் அறிவிக்கப்பட்ட இந்திய சாம்பல் நிற இருவாச்சி, சேலம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட பறவைக்கு ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிக வாக்குகளை பெற்றுள்ளது, இது பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்க காரணமாக உள்ளது.




வாக்கெடுப்புக்கு முன்னதாக, பறவை ஆர்வலர்கள், கல்லூரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து பறவை அறிவிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கண்காட்சி மற்றும் கல்வி முகாம்களை நடத்தினர். இவ்வாறு மாவட்ட பறவைக்காக பரிந்துரைக்கப்பட்ட பறவைகளின் பெயர்கள்:
பாறை கழுகு ஆந்தை
இந்திய சாம்பல் நிற இருவாச்சி
கருந்தோள் பருந்து
நெடுங்கால் உள்ளான்
சிறிய சீர்கை சிறகி
சிவப்புச் சிலை
கார்வெண் மீன் கொத்தி
இதில், திருப்பத்தூர் மாவட்டப் பறவையாக இந்திய சாம்பல் நிற இருவாச்சி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


















