T20 WC 2026 : "உலகக் கோப்பையை முதன்முறையாக வீட்டில் அமர்ந்து பார்ப்பது.!"- மனம் ...
துலாபாரத்தில் நாய்: நடிகையின் செயலால் வைரலான வீடியோ; பக்தர்கள் கண்டனம் - நடிகையின் விளக்கம் என்ன?
தெலுங்கில் சமீபத்தில் வெளியான 'தி கிரேட் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷோ' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை டினா ஸ்ராவ்யா. இவர் கடந்த புதன்கிழமை தெலங்கானா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற பழங்குடியின தெய்வங்களான சம்மக்கா - சாரக்கா தரிசனத்திற்காக மேடாரம் பகுதிக்குச் சென்றிருந்தார்.
கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, பக்தர்கள் தங்களின் எடைக்கு நிகராக வெல்லத்தை துலாபாரத்தில் வைத்து வழங்குவது வழக்கம். ஆனால், நடிகை டினா ஸ்ராவ்யா தனது நாயைத்துலாபாரத்தில் அமர வைத்து, அதற்கு நிகராக வெல்லத்தை வைத்து எடை போட்டு வழங்கியிருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ``நடிகை டீனா ஸ்ராவ்யாவின் செயல் புனிதமான இடத்தையும், பக்தர்களின் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கிறது" என பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகை டீனா ஸ்ராவ்யா தன் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``சமீபத்தில் எனது வளர்ப்பு நாய் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தது. அது குணமடைந்தால் அதன் எடைக்கு நிகராக வெல்லம் செலுத்துவதாக வேண்டிக்கொண்டேன். அந்த பக்தியின் காரணமாகவே நான் இந்த நேர்த்திக்கடனைச் செலுத்தினேன்.

மற்றபடி பழங்குடியின கலாச்சாரத்தையோ அல்லது பக்தர்களின் உணர்வுகளையோ புண்படுத்தும் நோக்கம் எனக்கு எள்ளளவும் இல்லை. யாரேனும் வருத்தமடைந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்." என்றிருக்கிறார்.
நடிகையின் விளக்கம் வந்தபோதிலும், புனிதமான சடங்குகளில் விலங்குகளை ஈடுபடுத்துவது முறையல்ல என ஒரு தரப்பினர் இன்னும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே தெருநாய்கள் குறித்த விவாதங்கள் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பரபரக்கும் நிலையில், இந்தச் சம்பவம் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
















