திருப்பூர்: ஆடு மேய்க்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை, கொலை - பைக் மெக்கானிக் ச...
தேவி கன்னியாகுமரி அம்மன் கோயில்: நவராத்திரியில் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய அம்மன் தலம்!
சக்தி பீடங்களில் ஒன்றான கன்னியாகுமரி, திருநெல்வேலியிலிருந்து 82 கி.மீ. தூரத்திலும், நாகர்கோவிலிலிருந்து 19 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.
முன்னொரு காலத்தில் பகன், முகன் என்ற அசுரர் இருவர் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தனர். தேவர்கள், காசி விஸ்வநாதரிடம் சென்று முறையிட்டனர். அசுரர்களை அழிக்க காசி விஸ்வநாதர் இரண்டு பெண்களைப் படைத்தருளினார்.
அவர்களுள் ஒருத்தி வடக்கே (கொல்கத்தா) உள்ள காளிதேவி. மற்றொருத்தி தெற்கே கன்யாகுமரியின் பகவதியம்மன். இவர்கள் பகன் - முகனை அழித்ததுடன் பாரதத்துக்குத் தீங்கு நேராமலும் காத்தருள்கின்றனர்.

ஒருமுறை, பகவதி என்ற பெயரில் பூமிக்கு வந்து சிவபெருமானை நோக்கித் தவமிருந்தாள் அம்பிகை. அவளை மணக்க விரும்பினார் சுசீந்திரம் தாணுமாலயன். தேவர்களிடம் தமது விருப்பத்தைக் கூறினார் . அப்போது தேவர்கள் வந்து கூடிய இடமே சுசீந்திரத்தில் கன்னியம்பலம் எனப்படுகிறது.
அப்போது பாணாசுரன் என்பவனின் கொடுமைகள் உச்சத்தில் இருந்த நேரம். சுவாமி தாணுமாலயரின் விருப்பம் நிறைவேறினால் பகவதியின் தவம் தடைபடும். அம்பாளைத் தவிர வேறு எவராலும் அவனை அழிக்க முடியாது என்று கருதினார்கள் தேவர்கள். அப்போது அங்கு வந்த நாரதர், திருமணத்தை தான் முடித்து வைப்பதாகக் கூறி, தாணுமாலயரிடம் இரண்டு நிபந்தனைகள் விதித்தார்.
முதல் நிபந்தனை கண்ணில்லாத தேங்காய், காம்பில்லாத மாங்காய், நரம்பில்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு மற்றும் இதழ் இல்லாத மலர் ஆகியவை சீதனப் பொருள்களாக வேண்டும். இரண்டாவது உதயத்துக்கு ஒரு நாழிகை முன்பாக மணமகன் மணவறைக்கு வர வேண்டும்.
இதன்படி தாணுமாலயக் கடவுள் சீதனப் பொருள்களை முதலில் அனுப்பினார். ஐந்து மைல் தூரத்தைக் கடக்க நள்ளிரவிலேயே புறப்பட்டார். உடனே நாரதர் சேவல் உருவெடுத்து உதயத்துக்கு அடையாளமாகக் கூவினார். அதனால் முகூர்த்த நேரம் தவறி விட்டதாகக் கருதிய தாணுமாலயக் கடவுள், மணமேடைக்குச் செல்லாமல், சுசீந்திரத்துக்கே திரும்பிவிட்டாராம்.
திருமணம் தடைப்பட்டதால் கோபம் கொண்ட குமரி பகவதி தனக்கு வந்த சீதனப் பொருள்களை கடலில் வீசி எறிந்தாள். அவையே குமரிக் கரையில் ஏழு வண்ண மணலாகவும், குன்றுகளாகவும் பரவிக் கிடக்கின்றன என்கிறார்கள். இதன் பின்னர், ரெளத்திரமாகத் திகழ்ந்த தேவி, பாணாசுரனை வதைத்தாள் என்கிறது புராணம்!
குமரிக் கோயிலில் பகவதியம்மனின் வலக் கரத்தில் ருத்திராட்ச மாலையும், இடக் கரத்தை தொடை மீது வைத்தும் நின்றவாறு தவக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறாள். தலைக் கிரீடத்தில் பிறைச் சந்திரனும், மூக்கில் வைர மூக்குத்தியும் ஜொலிக்கின்றன.

குமரி பகவதிக்கு கன்னி தெய்வம், அபர்ணா, கன்னிகா பரமேஸ்வரி, பகவதி அம்மன் என்ற பெயர்களும் உண்டு. பண்டைய காலத்தில் இவளை சங்கரி, கௌரி, ஆர்யா, சாமரி, குமாரி, சூலி, நீலி, செய்யாள், கொற்றவை ஆகிய பெயர்களாலும் அழைத்தனராம்.
பகவதி விக்கிரகத்தின் மேல் பகுதி சொர சொரப்பாகக் காணப்படுகிறது. இதை ருத்திராட்ச விக்கிரகம் என்பர். கொடிமரம் அருகில் உள்ள கல்வெட்டு, இந்த விக்கிரகத்தை ‘ருத்திராட்ச விக்கிரகம்’ என்கிறது.
இங்கு வந்த அகத்தியர், உக்கிரமான துர்கையைச் சாந்தமான கன்னி வடிவில் தரிசிக்க விரும்பினார். அதை உணர்ந்த தேவி, கன்யாகுமரி அம்மனாக கோயில் கொண்டு அருள்கிறாள் என்பது ஐதிகம். குமரி அம்மனின் மூக்குத்தி மகிமை மிக்கது.
பனை ஏறும் தொழிலாளியான வீரமார்த்தாண்டன் என்பவர், ஒரு முறை அபூர்வமான ரத்தினக் கல் ஒன்றைக் கண்டெடுத்தாராம். அதை அவர், திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மனிடம் தர, மன்னர் அதை மூக்குத்தியாக்கி குமரி பகவதிக்குச் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
அம்மன் மூக்குத்தி கல் குறித்து மற்றொரு கதையும் உண்டு. வீரசூரன் என்பவனைத் தீண்ட வந்த நாகமொன்று, அவனை நெருங்கி நாகமணியைக் கக்கியதாம். உடனே சாணத்தால் அதை மூடினானாம் வீரசூரன். அந்த நாகமணியை அரசன் மார்த்தாண்டனிடம் ஒப்படைத்தான். மன்னர் அதை மூக்குத்தியாக்கி கன்னி பகவதிக்கு அர்ப்பணித்தாராம்.
மூக்குத்தி தொடர்பான மற்றொரு தகவல்: குமரி அம்மனின் அழகான நாகமணி மூக்குத்தியை கிழக்கு வாசல் வழியாக வந்த ஒருவன் அபகரித்துச் சென்று விட்டானாம். அதன் பிறகு திருவிதாங்கூர் மன்னர், கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கிய இரண்டு வைரங்களே அன்னையின் மூக்குத்தியில் இடம் பெற்றிருக்கின்றன என்கிறார்கள்.

ஒரு முறை கடற் கொள்ளையர்கள் அம்மனின் மூக்குத்தியைத் திருடத் திட்டமிட்டனர். ஆனால், அம்மனின் சக்தியினால் கொள்ளையர்களது கப்பல் நொறுங்கியதாம். தப்பிப் பிழைத்த கொள்ளையர்கள் கோயிலுக்குள் சென்று மூக்குத்தியை எடுக்க முயன்றபோது அவர்களது பார்வை பறிபோனதாம். அந்த இடத்திலேயே தத்தளித்தனர்.
விடிந்ததும் கோயில் சிப்பந்திகள் அவர்களை மன்னரிடம் ஒப்படைத்தனராம். அன்று முதல் மன்னனின் கட்டளைப்படி கிழக்குக் கதவை மூடினர்; அதற்கு பதிலாக அந்தக் கதவில் அமைக்கப்பட்ட சிறிய துவாரத்தை இன்றும் காணலாம்.
பகவதியம்மன் கோயிலையொட்டிய வடக்கு வீதியில் சிறிய கோயில் ஒன்றில் காட்சியளிக்கும் பத்ரகாளிக்கு வழிபாடு நடந்த பிறகே குமரி பகவதி கோயிலின் எந்த விழாவையும் தொடங்குவார்களாம். இந்தப் பத்ரகாளியே சக்தி பீட நாயகி என்றும் சிலர் சொல்கிறார்கள்.
நவராத்திரிகாலத்தில் அன்னை பகவதியை வழிபட்டால் வாழ்வில் நலமும் வளமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.


















