F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற கென்ய வீரர் ஷேன் சந்தா...
நிதின் நபின்: `பணிவு, கடின உழைப்பு, எல்லை மீற மாட்டார்' - இளம் வயதில் பாஜக செயல் தலைவரானது எப்படி?
பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும் திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வந்தது. அதற்கு முன்பாக கட்சிக்கு உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டியிருந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக பா.ஜ.க செயல் தலைவராக பீகாரைச் சேர்ந்த நிதின் நபின் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க-விற்கு நியமிக்கப்பட்டுள்ள இளம் தலைவராகக் கருதப்படும் நிதினுக்கு வயது 45 ஆகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி-யில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய நிதினின் தந்தையும் சங்க் பரிவார் குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.
கட்சியின் தலைமையை எதிர்கால இளம் தலைமுறையிடம் ஒப்படைக்கும் நோக்கில் நிதின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். கடந்த 20 ஆண்டுகளாக கட்சி பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள நிதின், கட்சியின் இளைஞர் அணியிலிருந்து படிப்படியாக முன்னேறி வந்துள்ளார்.

கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது நிதினுக்கு அந்தப் பதவி தேடி வந்தது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில், நிதின் கட்சியின் அடிமட்டத்தில் சென்று தேர்தல் பணியாற்றியது; இரண்டாவதாக, கட்சி தலைமை செயல்படும் விதத்தைப் புரிந்து கொண்டு தன்னையும் அதில் ஈடுபடுத்திக் கொண்டது; மூன்றாவதாக, தனக்கு கொடுக்கப்படும் கடுமையான அரசியல் பணிகளை திறம்பட செய்து முடிப்பது போன்ற காரணங்கள்தான் அவரை இந்த அளவுக்கு முன்னுக்கு கொண்டு வந்திருக்கின்றன.
அதோடு, கட்சி தலைமை அவருக்கு சத்தீஷ்கரில் தேர்தல் பணியாற்ற வாய்ப்பு வழங்கியது. அந்தப் பணியை திறம்பட செய்து கட்சியை வெற்றி பெற வைத்தார். டெல்லியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியை வெற்றி பெறச் செய்ததிலும் நிதின் முக்கிய பங்கு வகித்தார். டெல்லி சட்டமன்ற தேர்தல் பணியை நிதின் தான் முன்னின்று செய்தார்.

இது குறித்து பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நிதின் கட்சி தலைவர்கள் செயல்படும் விதத்தைப் புரிந்து கொண்டு அதற்கு தக்கபடி செயல்படுகிறார். அதேசமயம், தனக்கு கொடுக்கப்பட்டுள்ள எல்லையை மீறாமல் நடந்து கொள்வதில் கவனமாக இருக்கிறார். தனக்கு வழங்கப்படும் பணிகளையும் திறம்பட செய்து வருகிறார்
அதோடு, கட்சி பணிக்காக எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யத் தயாராக இருக்கிறார். மேலும், கட்சியில் உள்ள மூத்த தலைவர்களை அரவணைத்து செல்வதிலும் திறமையாக செயல்படுகிறார்” என்றார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய அமைச்சர் அமித் ஷா பாட்னாவில் உள்ள நிதின் வீட்டிற்கு சென்று அவரது கட்சி பணியை பாராட்டினார். அதோடு, தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதிலும், கூட்டணி கட்சிகளை ஒற்றுமையாக வைத்துக்கொள்வதிலும் நிதின் முக்கிய பங்கு வகித்தார்.
சத்தீஷ்கர் மாநில தேர்தல் பொறுப்பாளர் பதவியை நிதினுக்கு வழங்கியபோது அவர் ஆற்றிய பணியைக் கண்டு கட்சி தலைமை ஆச்சரியப்பட்டது. தேர்தல் பணியை தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுக்குள் தொடங்கிய நிதின் வாரத்தில் நான்கு நாட்களை சத்தீஷ்கரில் தேர்தல் பணிக்காக ஒதுக்கியுள்ளார். அவரது அரசியல் அனுபவமும், நிர்வாக திறனும் அவருக்கு கட்சியில் புதிய இடத்தை தேடிக் கொடுத்து இருப்பதாக கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் செயல் தலைவராக நியமிக்கப்படுவது அவருக்கு கடைசி வரை தெரியவில்லை. வழக்கமான கட்சி பணியில் ஈடுபட்டிருந்த அவர், செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கட்சி தலைமை செய்தி வெளியிட்ட பிறகு மற்றவர்களிடமிருந்து தெரிய வந்தது.
45 வயதில் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் அடுத்து கட்சி தலைவராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. இதற்கு முன்பு ஜெ.பி. நட்டா முதலில் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு கட்சி தலைவராக உயர்வு பெற்றார். காங்கிரஸ் 84 வயதான மல்லிகார்ஜுன் கார்கேயை தலைவராக வைத்திருக்கும் நிலையில், 45 வயதான நிதினை பா.ஜ.க தலைவராக்கியுள்ளது.



















