நிலக்கடலை, வெல்லம், ஏலக்காய் விலையேற்றம்; கோவில்பட்டி கடலைமிட்டாயின் விலை 25% உய...
நிலக்கடலை, வெல்லம், ஏலக்காய் விலையேற்றம்; கோவில்பட்டி கடலைமிட்டாயின் விலை 25% உயர்வு!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வானம் பார்த்த பூமியாகும். சுத்த கரிசல் மண்ணில் விளைவிக்கப்படும் நிலக்கடலைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இயற்கையாகவே இனிப்பு சுவையுடன் உள்ள இந்த நிலக்கடலைகளை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் கடலைமிட்டாய்கள் உலக பிரசித்தி பெற்றது. இந்தக் கடலை மிட்டாய்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

பிரசித்தி பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு கடந்த 2020-ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. அதன் பின்னர் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு மக்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில், தற்போது கடலைமிட்டாய் தயாரிப்பின் மூலப்பொருள்களான நிலக்கடலை, வெல்லம், ஏலக்காய் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக கடலைமிட்டாய் குறுங்குழும கட்டடம் கட்டப்பட்டு வரும் இடத்தில் கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கார்த்திக் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மூலப்பொருள்கள் விலை உயர்வு காரணமாக கடலைமிட்டாய் விற்பனை விலையை 25 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து சங்க செயலாளர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடலை மிட்டாய் உற்பத்திக்கான முக்கிய மூலப்பொருளான நிலக்கடலை, வெல்லம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. மேலும் பேக்கிங் கவர்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதாவது 80 கிலோ கொண்ட நிலக்கடலை மூட்டை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.9,680 என விற்பனையானது. இது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது ரூ.12,500 என விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், 3 மாதங்களுக்கு முன்பு ரூ.1,300 என இருந்த 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லத்தின் விலை, தற்போது ரூ.2,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏலக்காயின் விலையும் ரூ.2,200-ல் இருந்து ரூ.3,600 என உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு கடலை மிட்டாய் தயாரிப்பதையே கேள்விக்குறியாக்கி உள்ளது. இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். மூலப்பொருள்களின் விலை ஏற்றத்தை சமாளிப்பது தொடர்பாக கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் ஆலோசனை நடத்தினோம்.

இதில், கடலை மிட்டாயின் தற்போதைய விலையிலிருந்து 25 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுத்துள்ளோம். ஒரு கிலோ கடலைமிட்டாயின் விலை 220 ரூபாய் என்பதை 275 ஆக உயர்த்தியுள்ளோம். நிலக்கடலையின் விலை குறைந்தால் கடலைமிட்டாயின் விலை குறைக்கவும் முடிவு செய்துள்ளோம். இந்த விலை ஏற்றம் தடுக்க முடியாத ஒன்று. இதனை பொதுமக்களும் வியாபாரிகளும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்,” என்றார்.




















