செய்திகள் :

நெல், கோதுமை ஊக்கத்தொகை நீக்கம்... அரசு, அரசியல் கட்சிகளின் தேர்தல் கணக்குகள் அம்பலம்!

post image

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ‘நெல்லுக்குத் தமிழக அரசு வழங்கி வரும் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு, மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இது தொடர்பாக, மத்திய நிதித்துறை அமைச்சகம், தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், விவசாயிகளை பாதிக்கும் எந்த நடவடிக்கைக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம்’ எனச் சூளுரைத்தார். இது அரசியல் கட்சிகளிடையே கடும் கருத்து மோதல்களையும், விவசாயச் சங்கத் தலைவர்களிடையே அனல் பறக்கும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘முதல்வர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என்று பதிலளித்துள்ளார்.

விவசாயிகள் சங்கத் தலைவர்களில் ஒரு தரப்பினர், மத்திய பா.ஜ.க அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்கள். மற்றொரு தரப்பினரோ, தமிழக முதல்வரின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக வாதங்களை முன்வைத்து வருகிறார்கள். நடுநிலை வகிக்கும் விவசாயிகளோ தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்களின் முகத்திரையைக் கிழிக்கும் விதமாகக் கேள்விக்கணைகளை வீசி வருகிறார்கள்.

“நெல் மற்றும் கோதுமைக்கான ஊக்கத்தொகை நீக்கம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம், கடந்த ஜனவரி 9-ம் தேதியே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகளுக்குக் கடிதம் அனுப்பிவிட்டது. இது, விவசாயத்துக்குச் சாவுமணி. அந்தக் கடிதம் வந்தவுடனேயே, தமிழக முதல்வர் ஸ்டாலின் கொந்தளித்து எதிர்வினையாற்றியிருக்க வேண்டும். ஏன் மூன்று மாதங்களாக அமைதி காத்தார்?” என்று கேள்வி எழுப்பும் விவசாயிகள்,

“இந்தக் கடிதம் தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டோஸ் கடந்த மார்ச் மாதம், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய பிறகுதான் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பிறகுகூட, தமிழக முதல்வரோ, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களோ பொதுவெளியில் தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்யவில்லை. தேர்தல் நெருங்கிய தருணத்தில் தி.மு.க இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருப்பது, விவசாயிகளின் வாக்குகளுக்களுக்கான கபட நாடகம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நெல்லுக்கான ஊக்கத்தொகை நீட்டிப்பு குறித்து ஏன் உத்தரவாதம் கொடுக்கவில்லை? பா.ஜ.க ஆட்சி செய்யும் சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தியாவிலேயே மிக அதிகமாக, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.600 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதார விலையுடன் சேர்த்துக் கணக்கிட்டால், குவிண்டாலுக்கு ரூ.3,100 வழங்கப்படுகிறது. அதேசமயம். அந்த மாநிலங் களின் முதல்வர்களும் நெல் ஊக்கத்தொகை நீக்கம் தொடர்பாக மௌனம் காக்கிறார்கள்” என்று கேட்கிறார்கள்.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், தேர்தல் நெருங்கிய நேரத்தில்தான் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தன. இதிலிருந்து, அரசியல் கட்சிகளுக்கு விவசாயிகள் நலன் முக்கியமில்லை, அவர்கள் வாக்குகள்தான் வேண்டும் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

விவசாயிகளைத் தேர்தல் பகடைக்காய்களாக நினைக்கும் கட்சிகளுக்குக் கடுமையான கண்டனங்கள்.

- ஆசிரியர்

திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் | Photo Album

திருப்பூரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்திருப்பூரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்திருப்பூரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்திருப்பூரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்திருப்பூரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்... மேலும் பார்க்க

ஈரோட்டில் கிழக்கு சட்டமன்ற தொகுதி போட்டியிட வேட்புமனு வாங்க குவிந்த பொதுமக்கள்! | Album

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு பெற குவிந்த மக்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு பெற குவிந்த மக்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு பெற குவிந்த மக்கள் ஈரோடு கி... மேலும் பார்க்க