நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்?- வெளிப்படையாக சொன்ன அமர்க்களம் இயக்கு...
“வீட்டில் எல்லாரும் முடிவு எடுக்குறாங்க… நானோ என்னை இழந்து நிற்கிறேன்” - பேசும் மனசு - 7
“எனக்குத் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. புதிய குடும்பம், புதிய மனிதர்கள், புதிய சூழல் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, பழகிக்கொள்ள நான் முயற்சி செய்தேன். ஆனால், காலப்போக்கில் ஒரு விஷயம் என்னை மிகவும் பாதிக்க ஆரம்பித்தது.
என்னுடைய வாழ்க்கையில் எடுக்கப்படும் பெரும்பாலான முடிவுகள் என்னைக் கேட்காமலேயே எடுக்கப்படுகின்றன.

வீட்டில் நான் என்ன சமைக்க வேண்டும், நான் எங்கே போக வேண்டும்?, யாருடைய நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும்?, எப்போது போக வேண்டும்?என்பதை மற்றவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். சில விஷயங்களில் என் கணவர், மாமியார், மாமனார் பேசி ஏற்கெனவே முடிவு எடுத்திருப்பார்கள்...அந்த முடிவு எனக்கு தகவலாக மட்டும் சொல்லப்படும். நான் சார்ந்த விஷயத்தைக் கூட என்னிடம் பேச மாட்டார்கள்.
ஆரம்பத்தில் இதை நான் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. குடும்பத்திற்கு விட்டுக்கொடுப்பது தவறில்லை என்று நினைத்தேன். ஆனா இப்போது அந்த விட்டுக்கொடுத்ததால் நான் என்னை இழந்தது போன்று உணர்கிறேன். எனக்கு என்ன பிடிக்கும், என்ன விருப்பம், என்ன பிளான் இது எதற்குமே என் வீட்டில் முக்கியத்துவமில்லை.
என் கரியரிலும் இதே நிலைமை தான். திருமணத்திற்கு முன்பு 75,000 ஊதியத்தில் சுதந்திரமாக இருந்தவள் நான். ஆனால் இப்போது ஒரு புடவை எடுக்க வேண்டும் என்றாலும், ஆயிரம் முறை யோசிக்க வேண்டியிருக்கிறது. ' இத வாங்கித்தாங்க' என தயக்கத்துடன் கேட்க வேண்டியிருக்கிறது. அப்படி நான் கேட்கும் பொருள்கள் எல்லாம் வாங்கியும் தரப்படுவதில்லை. இந்த மாசம் ரொம்ப கஷ்டமா இருக்கு...அடுத்த மாசம் பார்க்கலாம்'என்று சொல்லி விடுகிறார் என் கணவர்.
வேலைக்குப் போக வேண்டும் என்பது என் ஆசை. 'வேலைக்குப் போகிறேன்' என்று வீட்டில் என் விருப்பத்தை சொன்னேன்.ஆனால் ‘இப்போ அவசியமில்லை’, ‘குழந்தை கொஞ்சம் பெரியவளாக வளரட்டும், வீட்டையே முதலில் பாரு’ என்று சிம்பிளாக சொல்லி தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் நான் எதிர்ப்பை தெரிவிக்க நினைப்பேன். சில நேரம் தெரிவித்தும் இருக்கேன். ‘நாங்க உன் நல்லதுக்காத்தான் சொல்கிறோம்' என்று சொல்லி பேச வந்ததை பேச விடாமல் செய்து முடித்து விடுவார்கள்.

இது போன்ற சூழல்களால் என் வாழ்க்கையிலேயே நான் ஒரு பார்வையாளர் போன்று ஃபீல் பண்றேன். என் வாழ்க்கைப் பற்றி மற்றவர்கள் பேசுகிறார்கள்… முடிவு எடுக்கிறார்கள்… நான் அதை ஃபாலோ பண்ணுறேன். என் வாழ்க்கையில் எதுவுமே என் கையில் இல்லை. இது எனக்குள் ஒரு பெரிய மனஅழுத்தம் மாறியிருக்கிறது. சில நேரங்களில் என் மீதே எனக்கு கோபம் வருகிறது. எரிச்சல் வருகிறது. எனக்காக நான் கூட நிற்கவில்லையே என்ற குற்ற உணர்வு வருகிறது.
நான் பேச ஆரம்பித்தால், 'சுயநலவாதியாக இருக்கானு' சொல்லிடுவாங்களோனு பயமா இருக்கு. இத்தனை நாள் அமைதியாக இருந்த நான் பேச ஆரம்பித்தால் வீட்டில் பிரச்னை வருமோ என்ற எண்ணம் வருகிறது.
நான் குடும்பத்துக்காக அட்ஜெஸ்ட் பண்றேனா? இல்லை என்னையே நான் இழக்க ஆரம்பிச்சுட்டேனா? என் வாழ்க்கை பற்றி முடிவு எடுக்க என்னால முடியாத இந்த நிலைமையை எப்படிக் கையாள வேண்டும்?" என்று விகடன் வாசகி ஒருவர் கடிதம் எழுப்பியிருந்ததார்.
உளவியல் ஆலோசகர் ப்ரீனுவிடம் இது குறித்துப் பேசினோம்.
"ஒரு குடும்பத்தில் வாழ்வது என்றால், விட்டுக்கொடுத்தலும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதும் அவசியம். ஆனால், அந்த விட்டுக்கொடுத்தல் ஒரு கட்டத்தில் உங்களுக்கு ஸ்ட்ரெஸ்ஸாக மாறினால் அது ‘ஒத்துழைப்பு’ இல்லை, ‘இழப்பு’.
இந்த வாசகி பகிர்ந்திருக்கும் அனுபவமும் அதைத்தான் சொல்லுகிறது.
வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களில் சிறிய முடிவுகளிலிருந்து பெரிய முடிவுகள் வரை ஒருவரிடம் கேட்காமல் மற்றவர்கள் முடிவு எடுத்து விடும் போது, அது மெதுவாக ஒரு சுயத்தை இழக்கும் உணர்வை உருவாக்கும்.
ஆரம்பத்தில் இது கவனிப்பு போன்றும், அக்கறையும் போன்று தோன்றலாம். 'நாங்கள் உனக்காக நல்லதைத்தான் நினைக்கிறோம்' என்ற வார்த்தைகள் நம்மை அமைதியாக இருக்க வைக்கும். ஆனால், அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் நம்முடைய கருத்துக்கு இடமில்லாத நிலை உருவாகும்போது, அது மனதிற்குள் ஒரு வெற்றிடத்தை உருவாக்க ஆரம்பிக்கும்.

'பரவாயில்லை' என்று ஆரம்பத்தில் விட்டுக்கொடுத்த ஒவ்வொரு முடிவும், பிறருக்கு ஒரு சிக்னலாக ஆக மாறும். ஒரு கட்டத்தில் , உங்களைக் கேட்காமல் முடிவு எடுத்தாலும் பரவாயில்லை... 'அவர் ஒன்றும் சொல்லமாட்டார்' என்று உங்களைப் பற்றிய எண்ணம் மற்றவர்களுக்கு வரும்.
இது போன்ற சூழலில், சண்டை வேண்டாம், உறவு கெடக்கூடாது என்ற எண்ணத்தில், உங்களுடைய கருத்தை வெளிப்படுத்தாமல் இருப்பீர்கள். இந்த அமைதி கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ட்ரெஸ்ஸாக மாறும்.
இதை அட்ஜெண்ட்மென்ட் என்று சொல்வதைவிட, உங்களின் அடையாளத்தை தொலைக்கும் நிலை என்று சொன்னால் பொறுத்தமாக இருக்கும். இது உங்களின் நம்பிக்கையை குலைக்கும். உங்களின் விருப்பங்களைப் பற்றியும், முடிவுகளைப் பற்றியும் பேசுவதற்கே தயக்கம் வரும்.
சில நேரங்களில், 'நான் முக்கியமில்லையா?' என்ற கேள்வி கூட உங்களிந் மனதிற்குள் உருவாகும். இந்தக் கேள்வி உங்கள் மனதில் வந்திருக்கிறது என்றால்,அதற்கு தீர்வு காணும் இடத்தில் நீங்கள் நிற்கிறீர்கள் என்று அர்த்தம்.
தீர்வு
முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, உங்கள் கருத்தை பேசுவது சண்டை அல்ல. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது தவறு அல்ல. ஆனால் அதை எப்படி சொல்லுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். நீண்ட நாள் அமைதியாக இருந்த நீங்கள் திடீரென்று ரியாக்ட் செய்தால் அது பிரச்னையாக மாறலாம்.
' முடிவு எடுக்கும் முன் என்னைக் கேட்கவே மாட்டீங்களா?' என்று கேட்பது ஒரு குற்றச்சாட்டு போன்று தோன்றலாம்.
அதற்குப் பதிலாக, 'இந்த விஷயத்தில் என் கருத்தையும் சேர்த்துக்கிட்டா நல்லா இருக்கும்' என்று உங்கள் கருத்தை மெதுவாக வெளிப்படுத்த தொடங்கலாம். இந்த மாதிரியான சிறிய மாற்றங்களே பெரிய மாற்றங்களுக்கு ஆரம்பமாக அமையும்.
அதே நேரத்தில், ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது. சிறிய விஷயங்களிலிருந்து ஆரம்பிக்கலாம். 'நாளைக்கு நான் இதைச் சமைக்கிறேன்', 'இந்த வாரம் நான் என் வீட்டுக்கு போயிட்டு வரணும்' இப்படி மெதுவாக உங்கள் முடிவுகளை வெளிப்படுத்த ஆரம்பியுங்கள்.
இது,' நீங்களும் முடிவு எடுக்கும் இடத்தில் உள்ளவர்' என்று நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு தெளிவான சிக்னலை கொடுக்கும் முயற்சியாக இருக்கும். இந்தப் பயணத்தில் உங்கள் கணவரின் பங்கு மிகவும் முக்கியமானது. அவரிடம் பேசும்போது, குற்றம் சாட்டாமல், உங்கள் உணர்வுகளைப் பகிருங்கள்.
இதில் மற்றொரு முக்கியமான விஷயம் உங்களின் கரியர். 'பிறகு பார்க்கலாம்' என்று தொடர்ந்து தள்ளிப்போட்டால், வேலைக்குச் செல்லும் சூழலே இல்லாமல் போய்விடும். வேலைக்குப் போக நினைப்பது சுயநலமான முடிவு அல்ல. எனவே அதில் உங்களின் உறுதியான கருத்தைப் பதிவு செய்வது அவசியம்.
ஒரு குடும்பத்தில் இருக்கிறீர்கள் என்பதற்காக, உங்கள் குரல் இல்லாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கருத்து, உங்கள் விருப்பம், உங்கள் முடிவு இவையும் அந்த குடும்பத்தின் ஒரு பகுதிதான்.
மாற்றம் ஒரே நாளில் வராது. ஆனால், நீங்கள் உங்கள் கருத்தை மெதுவாக பேச ஆரம்பித்தால் உங்கள் வாழ்க்கை மீண்டும் உங்கள் கையில் வர ஆரம்பிக்கும்" என்று விரிவாக ஆலோசனைகள் வழங்கினார்.



















