Muslim மதத்தைச் சேர்ந்த முன்னாள் MP-ஐ Hindu ஆக்கிய SIR Draft |Adani -க்காக மாற்ற...
பன்முக கலைஞர்: திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், பிரபல நடிகர் ஶ்ரீனிவாசன் காலமானார்
மூத்த மலையாள நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் (69) இன்று காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலமின்மையால் சிகிச்சையில் இருந்த நடிகர் ஶ்ரீனிவாசன், உதயம்பெரூரில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை திடீரென மோசமானதைத் தொடர்ந்து அவர் திருப்புனித்துறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று (சனிக்கிழமை) காலை காலமானார்.

யார் இந்த ஶ்ரீனிவாசன்?
கேரளாவின் தலச்சேரிக்கு அருகிலுள்ள பாட்டியம் கிராமத்தில் 1956-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி பிறந்தார் ஸ்ரீனிவாசன். தனது பள்ளிப் படிப்பை கதிரூரில் முடித்தார். பின்னர் மட்டனூரில் உள்ள பி.ஆர்.என்.எஸ்.எஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு, சென்னை, தமிழ்நாட்டுத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் முறையான திரைப்படத் துறையில் பயிற்சி பெற்றார்.
ஸ்ரீனிவாசன் 1977-ல் பி.ஏ. பேக்கரின் 'மணிமுழக்கம்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் மலையாளத் திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார். ஏறக்குறைய 50 ஆண்டுகளாக, 225-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
சமூகத்தின் மீதும் அவருக்கு ஆழ்ந்த கருத்து இருந்திருக்கிறது. கூர்மையான சமூக விமர்சனங்களுக்காகவும், அவரின் நடிப்புக்காகவும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர். நடிப்புக்கு அப்பாற்பட்டு, அவர் ஒரு புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும் திகழ்ந்தார். இன்றும் நினைவுகூறப்படும் பல வெற்றிப் படங்களுக்குத் திரைக்கதை எழுதியதுடன், மாநில மற்றும் தேசிய விருதுகளை வென்ற பல படங்களையும் இயக்கியிருக்கிறார்.

நடிகர் ஶ்ரீனிவாசன்தன் படைப்புகளில் பெரும்பாலும் நகைச்சுவையையும் சமூக விமர்சனத்தையும் இணைத்து, நிஜ வாழ்க்கைச் சிக்கல்களைப் பேசும் படைப்பாளராக இருக்க வேண்டும் என விரும்பினார். ஒருகட்டத்தில் தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்து, பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.
நடிகர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்பு நவீன மலையாளத் திரையுலகை வடிவமைக்க உதவியதுடன், பல தலைமுறை நடிகர்கள் மற்றும் இயக்குநர்களையும் உத்வேகப்படுத்தியிருக்கிறது.
தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றிருக்கிறார்.
நடிகர் ஶ்ரீனிவாசனின் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
















