SISU Road To Revenge: `ஆடின்னே இருப்பேன்' - மிரட்டும் ஆக்ஷன் காட்சிகள்! படமாக வ...
பி.டி.உஷா, எழுத்தாளர் ஜெயமோகனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய தட்சசீலா பல்கலைக்கழகம்!
விழுப்புரம் மாவட்டம், ஓங்கூர் பகுதியில் அமைந்திருக்கும் தட்சசீலா பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கடந்த நவம்பர் 20-ம் தேதி பல்கலைக்கழகத்தின் கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது.
தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஸ்ரீமணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவருமான தனசேகரன், பதிவாளர் செந்தில் கலந்து கொண்ட அந்த விழாவில், 2003-ம் ஆண்டு லைபீரியா நாட்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போரை வன்முறையற்ற போராட்டங்களின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக நோபல் பரிசு பெற்ற, லேமா குபோவீ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதேபோல பிஜி குடியரசின் இந்திய உயர் கமிஷனர் ஜகன்நாத் சாமியும் பங்கேற்றார்.

துணைவேந்தர் தனசேகரன் 154 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதில் 17 மாணவர்கள் தங்கப் பதக்கம் பெற்றனர். அதையடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் இந்திய தடகள விளையாட்டு வீராங்கனையுமான பி.டி.உஷா மற்றும், எழுத்தாளர் ஜெயமோகனுக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.
அப்போது பேசிய பி.டி.உஷா, ``இது எனக்கு வழங்கப்படும் 8-வது கௌரவ டாக்டர் பட்டம். எனக்கு கிடைத்திருக்கும் இந்த கௌரவத்தை இந்தியாவில் உள்ள அனைத்து இளம் தடகள வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். ஆரம்ப காலகட்டங்களில் நான் பயிற்சியில் ஈடுபட்டபோது எனக்கு எந்த வசதிகளும் கிடைக்கவில்லை. பல தடைகளைத் தாண்டி கடின முயற்சிகளால் மட்டுமே நான் வெற்றி பெற்றேன்.
தற்போது இந்திய விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் பயிற்சிகளை முறையாகப் பயன்படுத்தி, வெற்றிகளை குவித்து வருகின்றனர். குறிப்பாக, துப்பாக்கி சுடுதல், குத்துச் சண்டை, பேட்மிண்டன் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியர்கள் சாதிப்பது பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மாணவர்களும் தனித்திறன் படைத்தவர்கள்.
சரியான பாதையில் உறுதியாக பயனித்தால் அவர்கள் அசாத்தியமாக வெற்றிபெறலாம்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய எழுத்தாளர் ஜெயமோகன், ``இந்த கௌரவம் எனக்கானது இல்லை. முழு நவீன தமிழ் இலக்கிய இயக்கத்திற்கு சொந்தமானது.
நவீன தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலும் புறநில மனிதர்களாகவே பார்க்கப்படும் சூழலில், இப்படியான கௌரவங்கள் அரிதாகவே கிடைக்கும். அந்த வகையில் இந்த அங்கீகாரம் மிகவும் அர்த்தம் வாய்ந்தது” என்றார்.

இதுகுறித்துப் பேசிய பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் செந்தில், ``எங்கள் ஸ்ரீமணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை சார்பில் கடந்த ஆண்டு தட்சசீலா பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் முக்கியமான இருவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் அளிக்க முடிவு செய்தோம்.
அதன்படி எழுத்தாளரும் தத்துவார்த்தவாதியுமான ஜெயமோகன் அவர்களையும், இந்திய தடகள வீரர்களின் நம்பிக்கை நட்சத்திரமான பி.டி.உஷா அவர்களையும் இறுதி செய்தோம். இருபெரும் ஆளுமைகளுக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியது எங்கள் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த கௌரவம்” என்றார்.














