செய்திகள் :

"பெண்கள் கரு முட்டைகளை சேமிக்க வேண்டும்"- விவாதம் தூண்டிய ராம் சரண் மனைவியின் கருத்து; பின்னணி என்ன?

post image

அப்போலோ மருத்துவமனை நிறுவனரின் பேத்தியும், அதே மருத்துவமனையின் CSR (Corporate Social Responsibility) துறையின் துணைத் தலைவரும், தொழில்முனைவோரும், நடிகர் ராம் சரணின் மனைவியுமான உபாசனா கொனிடேலா இந்த வார தொடக்கத்தில் இளம் பெண்களுக்கு தெரிவித்த கருத்து ஒன்று இணையதளத்தில் பெரும் விவாதத்தைத் தூண்டியிருக்கிறது.

கடந்த திங்களன்று (நவம்பர் 17) ஹைதராபாத் ஐ.ஐ.டி-யில் கரியர் கவுன்சிலிங் செக்ஷனில் மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றிய உபாசனா, ``பெண்களுக்கு மிகப்பெரிய இன்சூரன்ஸ், கரு முட்டைகளை சேமித்து வைப்பது.

ஏனெனில், பொருளாதார ரீதியாக நீங்கள் சுதந்திரமாக இருக்கும்போது உங்களின் விருப்பப்படி எப்போது திருமணம் செய்ய வேண்டும், எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.

உபாசனா - ராம் சரண்
உபாசனா - ராம் சரண்

இன்று எனது சொந்தக் காலில் நான் நிற்கிறேன். என்னுடைய வாழ்க்கைக்கு நான் சம்பாதிக்கிறேன். பொருளாதார ரீதியாக நான் சுதந்திரமாக இருக்கிறேன்.

இது என்னுடைய வாழ்க்கையில் துணிச்சலான முடிவுகளை எடுக்க வைக்கிறது. 30 வயதைத் தொடுவதற்குள் உங்களின் இலக்குகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கரியருக்கான பாதையை அமைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதிக்கப்போகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வாழ்வில் உங்களின் ரோல் என்ன, இலக்கு என்ன, தொலைநோக்குப் பார்வை என்ன என்பதை தெரிந்துகொண்டால் யாரும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது" என்று கூறினார்.

தன்னுடைய இந்த உரையை உபாசனா தனது இன்ஸ்டாகிராம், எக்ஸ் ஆகிய சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு, ``ஹைதராபாத் ஐ.ஐ.டி மாணவர்களுடன் ஒரு அற்புதமான உரையாடல்.

`உங்களில் எத்தனை பேர் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்கள்' என மாணவர்களிடத்தில் கேட்டபோது, பெண்களை விட நிறைய ஆண்கள் கைகளை உயர்த்தினர்.

அப்போது, பெண்கள் தங்களின் கரியர் மீது அதிக கவனம் செலுத்துவதாகத் தோன்றியது. இது புதிய முற்போக்கு இந்தியா" என்று பதிவிட்டிருந்தார்.

இதில், பெண்கள் தங்களின் கரு முட்டைகளை சேமித்து வைக்க வேண்டும் என்று உபாசனா கூறியது பெரும் விவாதப்பொருளானது.

இதை மேலும் பெரிதாக்கும் விதமாக ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு ஒரு கருத்தைத் தெரிவித்தார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் உபாசனாவின் சமூக வலைத்தளப் பதிவைக் குறிப்பிட்டு ஶ்ரீதர் வேம்பு , ``ஆண்கள், பெண்கள் என நான் சந்திக்கும் இளம் தொழில்முனைவோர்களிடம் திருமணம் செய்துகொண்டு 20 களில் குழந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள், தள்ளிப்போடாதீர்கள் என்று கூறுவேன்.

மேலும் அவர்களிடம், தங்கள் சமூகத்துக்கும், மூதாதையர்களுக்கும் தங்களின் மக்கள் தொகை அதிகரிக்கும் கடமையைச் செய்ய வேண்டும் என்பேன்.

இந்தக் கருத்துக்கள் விசித்திரமாகவோ அல்லது பழமையானதாகவோ தோன்றலாம். ஆனால் இவை மீண்டும் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்." என்று பதிவிட்டார்.

தொடர்ந்து இந்த விவாதத்தில், மகப்பேறு மருத்துவரும், மகளிர் மருத்துவ நிபுணருமான ராஜேஷ் பாரிக், ``உங்கள் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருக்கும்போது கரு முட்டை சேமிப்பது பற்றி ஆலோசனை வழங்குவது மிகவும் எளிதானது.

IVF-ல் (In Vitro Fertilization) ஒரு சுழற்சிக்கு லட்சங்களில் செலவாகும். கரு முட்டை சேமிக்க லட்ச ரூபாய் ஆகும். கூடவே, வருடாந்திர பராமரிப்பு கட்டணம் உண்டு.

உங்கள் (உபாசனா) பேச்சைக் கேட்கும் பெரும்பாலான இளம் பெண்களால் ஒரு சுழற்சியைக் கூட செய்ய முடியாது" என்று கரு முட்டை சேமிப்பதில் பொருளாதார ரீதியாக உள்ள சிக்கலை எடுத்துரைத்தார்.

அதேபோல் ஹைதராபாத்தைச் சேர்ந்த மற்றொரு மருத்துவர் சுனிதா சாயம்மகரு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் உபாசனாவின் பதிவைக் குறிப்பிட்டு, ``ஒரு பெண் தனது முட்டையை சேமித்து வைத்தாலும் அது வெற்றிகரமான கருவுறுதலுக்கும், கர்ப்பத்திற்கும் வழிவகுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" என்று வயதான பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களைச் சுட்டிக்காட்டினார்.

அதோடு ராஜேஷ் பாரிக், ``ராம்சரணை மணந்தபோது 23 வயது பெண்ணாக இருந்த அவருக்கு என்ன கரியர் இருந்தது? திருமணத்திற்குப் பிறகு அவர் தனது கரியரை உருவாக்கினார்.

அவர் சராசரி பெண் அல்ல. சராசரி பெண்கள் இந்தப் பணக்காரர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றக்கூடாது.

கரியர் இலக்குகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. அதுவொரு கானல் நீர் போன்றது. ஒரு இலக்கை அடைந்தவுடன் மற்றொரு இலக்கு தோன்றும்.

தனது கரியருக்காக தன் பெர்சனல் ரிலேஷன்ஷிப்பை நிறுத்திவைக்கக் கூடாது. கரியரில் முன்னேறுவதற்கு முழு வாழ்க்கையும் இருக்கிறது. ஆனால், உறவுகளைக் கண்டடைவதற்கும், தாய்மையை அனுபவிப்பதற்கும் நமக்கு ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே உள்ளது" என்று தெரிவித்தார்.

இவ்வாறு பல தரப்பிலிருந்தும் பல்வேறு கேள்விகளும், கருத்துக்களும் உபாசனா கருத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தன்னுடைய கருத்துக்கெதிரான கருத்துக்களுக்கும், கேள்விகளுக்கும் உபாசனா தனது ட்வீட் மூலம் விளக்கத்தையும், கேள்விகளையும் முன்வைத்திருக்கிறார்.

உபாசனா தனது பதிவில், ``ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தூண்டியதில் எனக்கு மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டு 4 கேள்விகளை முன்வைத்தார்.

அதில், ``ஒரு பெண் சமூக அழுத்தத்திற்கு அடிபணிவதற்குப் பதில், காதலுக்காக திருமணம் செய்து கொள்வது தவறா?

தனக்குச் சரியான துணையைக் கண்டுபிடிக்கும் ஒரு பெண் காத்திருப்பது தவறா?

தன் சூழ்நிலைகளைப் பொறுத்து தான் எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு பெண் விரும்புவது தவறா?

ஒரு பெண் தனக்கான இலக்குகளை நிர்ணயித்து, திருமணம் மற்றும் குழந்தைப் பெற்றுக்கொள்வது பற்றி மட்டும் சிந்திக்காமல் தனது கரியரில் கவனம் செலுத்துவது தவறா?" என்ற கேள்விகளை உபாசனா முன்வைத்தார்.

ராம் சரண் - உபாசனா
ராம் சரண் - உபாசனா

மேலும், ``என்னுடைய 29 வயதில் என் தனிப்பட்ட மற்றும் உடல்நலக் காரணங்களுக்காக என் கரு முட்டையை சேமிக்க முடிவு செய்தேன்.

36 வயதில் எனது முதல் குழந்தையைப் பெற்றேன். இப்போது 39 வயதில் இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்க்கிறேன்.

எனக்குத் திருமண வாழ்க்கையும், கரியரும் போட்டி அல்ல, வாழ்வின் நிறைவான அர்த்தமுள்ள பகுதிகள்.

ஆனால், எப்போது எனும் டைம்லைனை நான்தான் முடிவு செய்கிறேன். அது என் சலுகை அல்ல, என் உரிமை" என்று தன் மீதான தனிப்பட்ட கருத்துக்களுக்குப் பதிலளித்தார்.

உபாசனாவின் கருமுட்டை சேமித்தல் கருத்து மற்றும் அதைத்தொடர்ந்து எழுந்த பதில் கருத்துக்களுக்கு அவர் முன்வைத்த கேள்விகள் மீதான உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

'அதிபருக்கே நடக்குமென்றால், சாமானியப் பெண்ணின் நிலை?' - பாலின சமத்துவமும் அரசின் கடமையும் #Hersafety

பெண்களின் பாதுகாப்பு பற்றிய உரையாடல் நடக்க, ஒவ்வொரு முறையும் ஒரு பெண் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. சென்ற வாரம் கோவையில் நடந்த கூட்டுப் பாலியல் வல்லுறவு மீண்டும் தமிழ்நாட்டில்... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்... உங்களின் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்யுங்கள்! #HerSafety

கோயம்புத்தூரில் அண்மையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்வது, நம் ச... மேலும் பார்க்க