செவிலியர்கள் போராட்டம்: ``ஈவு இரக்கமின்றி கைது செய்ய எப்படி மனம் வந்ததோ?" - ஸ்டா...
போலி உத்தரவில் ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்க கைதி மனைவியுடன் உறவு? கர்நாடக சிறை அதிகாரி கைது பின்னணி
கர்நாடகா மாநிலம் பெங்களூரு மத்திய சிறையின் முன்னாள் தலைமை கண்காணிப்பாளரும், தற்போது சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறையில் டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றி வருபவர் சோமசேகர்.
இவர் பெங்களூரு மத்திய சிறையில் தலைமை கண்காணிப்பாளராக இருந்தபோது ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சங்கர் என்ற கைதி உச்ச நீதிமன்றத்தின் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு உத்தரவின் அடிப்படையில் 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரு மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இது குறித்து தெரிய வந்தவுடன் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையின் போது சங்கர் மனைவியை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சோமசேகர், கைதி சங்கரை சிறையில் இருந்து விடுவிக்க சங்கரின் மனைவியுடன் பாலியல் உறவு க்கொண்டுள்ளார். இதனை சங்கர் மனைவி விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

மேலும் சிறையில் தண்டனை பெற்ற கைதிகள் பிரிவில் பணியாற்றி வந்த சிறைத்துறை ஊழியரான ஸ்ரீகாந்த் என்பவர், சங்கருக்கு விடுதலை அளிக்கப்பட்டதாகக் காட்டும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்று கூறப்படும் ஆவணத்தைப் போலியாகத் தயாரித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
சங்கர் விடுதலையில் சோமசேகர் எந்த மாதிரியான உதவிகளை செய்தார் என்று விசாரித்து வந்த நிலையில் புதிய தகவலை சங்கர் மனைவி தெரிவித்துள்ளார். சங்கர் மனைவியின் புகார் குறித்தும் இப்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது சோமசேகர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். பரப்பன அக்ரஹார போலீஸாரால் சோமசேகர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றும், வழக்கு தொடர்பான தகவல்களை மறைத்தார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக அவரை போலீஸ் காவலில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 2004-ஆம் ஆண்டு விரைவு நீதிமன்றம் வழக்கு ஒன்றில் சங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர், அவரது தண்டனை உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.















