"நன்றி திருவனந்தபுரம்"- சிபிஎம் கோட்டையைக் கைப்பற்றிய பாஜக; வாழ்த்து தெரிவித்த ப...
மகாராஷ்டிரா: கர்ப்ப பரிசோதனைக்கு கட்டாயப்படுத்தப்படும் மாணவிகள்; அரசு பழங்குடி விடுதிகளில் அதிர்ச்சி
மகாராஷ்டிராவில் தானே, நாசிக், கட்சிரோலி, புனே உட்பட சில மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்களின் குழந்தைகளுக்காக பழங்குடியின நலத்துறை சார்பாக மாநிலம் முழுவதும் விடுதிகள் நடத்தப்பட்டு வருகிறது. இது ஆசிரம பள்ளிகள் என்று அழைக்கப்படுகிறது. சில இடங்களில் விடுதியுடன் கூடிய பள்ளிகளும் இருக்கிறது. இந்த விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு வரும்போது அவர்களுக்கு விடுதி நிர்வாகம் கொடுக்கும் இன்னல்களை கண்டு மாணவிகள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி இருக்கின்றனர்.
பருவம் அடைந்த பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் இது போன்ற மாணவிகள் விடுமுறை முடிந்து விடுதிக்கு வரும்போது அவர்களிடம் கர்ப்ப பரிசோதனை அறிக்கை கொடுக்கும்படி விடுதி நிர்வாகம் கேட்கிறது.

அதாவது மாணவிகளிடம் கர்ப்ப பரிசோதனை கிட் வாங்கி அதனை சிறுநீரகத்தில் சோதித்து உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள டாக்டரிடம் காட்டி, தான் கர்ப்பம் இல்லை என்று சான்றிதழ் வாங்கி வரச்சொல்கிறார்களாம். இதனால் மாணவிகள் தேவையில்லாமல் மன உலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
மாணவிகள் தங்களது சொந்த பணம் ரூ.150 முதல் 200 ருபாய் செலவு செய்து கர்ப்ப பரிசோதனை கிட்களை வாங்கி இச்சோதனையை செய்ய வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இது போன்ற சோதனைகளை செய்ய சொல்லி மாணவிகளை தேவையில்லாமல் அலையவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டாலும் திருமணமாகாத மாணவிகளிடம் இது போன்ற ஒரு சோதனையை செய்து கொள்ளும்படி கூறுவது மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
புனேயில் ஒரு பழங்குடியின மாணவிகள் விடுதியில் இது போன்ற சோதனைகளால் பாதிக்கப்பட்ட மாணவிகள் கொதித்து எழுந்துள்ளனர். இது குறித்து ஒரு மாணவி கூறுகையில்,''நாங்கள் விடுமுறை முடிந்து உற்சாகமாக விடுதி திரும்பினோம். ஆனால் எங்களை குற்றவாளிகளைப்போல் நடத்துகின்றனர்''என்று குறைபட்டுக்கொண்டார்.
இது குறித்து நாசிக் ஆசிரம பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரின் தந்தை கூறுகையில்,''விடுதியின் செயலால் எனது மகள் உடைந்துவிட்டாள். உங்கள் அமைப்பு ஆரோக்கியமற்றது என்பதற்காக அவர்களை ஏன் இத்தகைய உணர்ச்சிப்பூர்வமான அதிர்ச்சியால் தண்டிக்க வேண்டும்?"என்றார். இது போன்ற நடைமுறை மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பழங்குடியினர் நலத்துறையால் நடத்தப்படும் ஆசிரம பள்ளியில் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக இருக்கும் இந்த நடைமுறை குறித்து பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தாங்கள் அது போன்ற எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று ஒதுங்கிக்கொண்டனர்.
இது தொடர்பாக அத்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,'' இது போன்ற உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அத்தகைய அங்கீகரிக்கப்படாத கர்ப்ப பரிசோதனையை ஒரு போதும் அனுமதிப்பதும் இல்லை. இது போன்ற செயலில் ஈடுபடும். பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்."என்று தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதமே இது தொடர்பாக குற்றச்சாட்டு வந்தது. ஆனால் அப்போது அரசு பெண்கள் கமிஷன் நடவடிக்கை எடுத்தது. இப்போது மீண்டும் அதே பிரச்னை தலைதூக்கி இருக்கிறது. பெண்கள் நல உரிமையாளர்கள் இது குறித்து கூறுகையில்,''இது ஆணாதிக்க அத்துமீறல்களுக்கு சிறந்த உதாரணம். இந்த நடைமுறைகள் பழங்குடியினப் பெண்களை மேம்படுத்துவதற்கு உள்ள அரசு விடுதிகளின் நோக்கத்தையே குழிதோண்டிப் புதைப்பதாக இருக்கிறது''என்று தெரிவித்தனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டங்கள் எழுந்துள்ளது.



















