அயலக உயர்கல்வித் திட்டம்: "மாணவர்களை மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?" - ஸ...
மதுரை நகைக்கடையில் தனியாளாகக் கொள்ளை; அதிர வைத்த திருடன்; 9 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் தனிஷ் நகைக் கடை கடந்த மாதம் 14 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை நகைக் கடையைத் திறந்து பார்த்தபோது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக எஸ்.எஸ். காலனி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நகைக் கடைக்குள் சென்று சோதனை செய்தபோது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அப்போது அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில் தனி ஒரு நபராக இளைஞர் ஒருவர் உடல் முழுவதிலும் கருப்பு துணி முகமுடி அணிந்தவாறு லிப்ட் பணிகள் நடைபெற்றபடி இருந்த கதவை கைகளால் திறந்து லிப்ட் பணிக்காகப் போடப்பட்ட கயிறு வழியாக தரைத்தளத்திற்குள் உள்ள கடைக்குள் இறங்கிசென்று ஆங்கிலப் படத்தில் வரும் கொள்ளையனைப் போல ஒவ்வொரு நகைகளாகப் பதற்றமின்றி சாக்கு மூட்டை ஒன்றில் எடுத்து வைத்து திருடிய காட்சிகள் பதிவாகியுள்ளது.
இதையடுத்து கொள்ளையனின் முகம் பதிவாகாத நிலையில் உடல் அமைப்பு மற்றும் முக அமைப்பை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் தற்போது மாநகர காவல்துறை துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் குறித்து சிசிடிவி கேமிராக்களைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
3 தளங்களாக உள்ள நகைக்கடை அமைந்த கட்டிடத்தில் கீழ் தளத்தில் நகை விற்பனை நடைபெற்று வந்துள்ளது. இரண்டாவது தளத்தில் காலியாகவுள்ள நிலையில் மூன்றாவது மாடியில் நகைகளைப் பாதுகாப்பதற்கான லாக்கர் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே கடை திறக்கப்பட்டது. தரைத்தளத்தில் விற்பனை நடைபெற்றுவந்துள்ளது. இந்நிலையில் நகைக் கடைக்கான லிப்ட் பெயிண்டிங், எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவந்துள்ளன.
இதற்காக கட்டடத்தின் பின்புறப் பகுதியில் இரும்பு சாரம் அமைக்கப்பட்டிருந்துள்ளது. அந்தச் சாரம் வழியாக கொள்ளையன் ஏறிசென்றுள்ளான். பின்னர் தனி ஒருவனாக நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையன் நகைகளைப் பதற்றமின்றி ஒரு மணி நேரமாக அமர்ந்து கற்கள் பதிக்காத நகைகளாகத் தேர்வுசெய்து ஒவ்வொன்றாக எடுத்துவைத்து கொள்ளையடித்து சென்றுள்ளான்.

இதனையடுத்து கொள்ளையடித்த நகைகளை மூட்டையாகத் தூக்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள நேதாஜி மெயின் ரோடு வழியாகச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கொள்ளை சம்பவம் நடைபெற்ற நகைக்கடையில் பணிபுரிந்த ஊழியர்கள், மேலாளர்கள் விற்பனையாளர்கள் மற்றும் கட்டடப் பணிகளில் ஈடுபட்டு வந்த கட்டட தொழிலாளர்கள் எலக்ட்ரீசியன், பிளம்பர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் கைரேகைகளைச் சேகரித்து வருகின்றனர்.
தனி ஒருவனாக வந்து கொள்ளை அடித்த நபர் முழுவதிலும் கையுறை அணிந்து எந்தவித தடயமும் கிடைக்காமல் காலில் ஷூ சாக்ஸ் அணிந்து முழுவதிலும் எந்த அடையாளமும் தெரியாத வகையில் நகைக்கடைக்குள் புகுந்து பதற்றமின்றி கொள்ளையடித்து சென்றுள்ளான்.
நகைக்கடையில் வைக்கப்பட்ட சில நகைகள் சென்சார் மூலமாக ஒலி எழுப்பும் என்பதால் அந்த நகைகளை விடுத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகளை மட்டும் கொள்ளையன் எடுத்து சென்றுள்ளதும், சில வைர நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
விசாரணையின் முதற்கட்டமாகப் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பான புகைப்படங்களை சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளோடு ஒப்பிட்டு காவல்துறையின் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்தப் பகுதியில் அதிகாலை 3 மணி முதல் கொள்ளை சம்பவம் நடைபெற்ற நேரத்தில் சென்ற வாகனங்கள் மற்றும் வாகனங்களின் உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாடக்குளம், நேரு நகர், பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கொள்ளையனின் நடமாட்டம் குறித்த ஏதேனும் அடையாளம் இருக்கிறதா என்பது குறித்து தனிப்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












