பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
முதுமலை: `கூண்டுக்குள் சிக்கிய வயதான ஆண் புலி' - அடுத்தக்கட்ட நடவடிக்கையில் வனத்துறை தீவிரம்
வங்கப் புலிகளுக்கான வாழிடப் போதாமை பிரச்னைகள் அதிகரித்து வரும் நீலகிரியில் மனித - புலி எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதக்கணக்கில் கால்நடைகளை வேட்டையாடி வந்த இளம் ஆண் புலி ஒன்றை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள் அண்மையில் விடுவித்தனர்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாவநல்லா பகுதியில் கடந்த மாதம் 24- ம் தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நாகியம்மாள் என்ற பழங்குடி பெண்மணியை புலி தாக்கியதில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பிரத்யேக கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தியும் வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து வந்தனர்.
பழங்குடி பெண்ணை தாக்கிய குறிப்பிட்ட அந்த புலியை அதன் உடல் வரிகளைக் கொண்டு அடையாளம் காணும் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 3-ஆம் தேதி எதிர்பாராத விதமாக கூண்டுக்குள் சிறுத்தை ஒன்று சிக்கியது. அதே பகுதியில் அந்தச் சிறுத்தையை உடனடியாக விடுவித்துள்ளனர். தொடர்ந்து புலியைக் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
மாவநல்லா பகுதியில் அமைத்திருந்த கூண்டுக்குள் இன்று அதிகாலை வயது முதிர்ந்த ஆண் புலி ஒன்று சிக்கியிருப்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

வேட்டைத்திறன் இழப்பால் கால்நடைகளையும் பழங்குடி பெண்ணையும் இந்த புலி தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கும் வனத்துறை, அந்த புலியை அடையாளம் காண்பதுடன் அதன் உடல்நிலை, வயது போன்றவை குறித்தும் பரிசோதனை செய்து வருகின்றனர்.
வனப்பகுதிக்குள் வேட்டையாடும் உடல் திறனை அந்த புலி இழந்திருப்பதை உறுதி செய்தால் மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

















