'24 காரட் தங்க பிளேட், 3.8 லட்சம் அமெரிக்க வைரங்கள்' - பக்தர்களைக் கவரும் ஐதராபா...
மைனா : பயணம் என்ன செய்யுமோ, மைனா அதை செய்தது.! `ஒன்றின்றி ஒன்றில்லை' | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 24
மைனாவின் அம்மா குருவம்மா சுருளியிடம், ‘உன்னை மாதிரி வெறும்பயலுக்கா என் புள்ளையைக் கொடுப்பேன்?’ என்று கொதிக்கிறாள். அவளுக்குத்தான் என்னவொரு சுயநலம்?
ஒரு குட்டிப்பெண்ணாக அனாதரவாய் தெருவில் நின்ற மைனாவுக்கும், அவளது அம்மாவுக்கும் அடைக்கலம் தந்தவன் சுருளி. அதோடு காலமெல்லாம் அவர்களுக்கு உதவியவன். அந்த நன்றியணர்விலிருந்து பிறந்த அன்புதான் மைனாவுக்கும், அவனுக்குமிடையே காதலாகி மலர்ந்திருக்கிறது.
ஆனால், சுயநலத்துக்காக வாய் நிறைய ‘மருமகனே’ என்றழைத்து உறவு பூண்டுவிட்டு, சூழல் மாறியதும் சுருளியிடமிருந்து பெற்ற உதவிகளையெல்லாம் மறந்து, மைனாவின் அம்மா சுயநலமாக முடிவெடுக்கையில் நமக்கே அவள் மீது கோபம் வரத்தான் செய்கிறது.
‘குடித்துக் குடித்து நாசமாப் போய் கடைசியில் செத்தும் போய் எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டாயேடா பாவி..’ என இதே குருவம்மா தன் கணவனை திட்டிக்கொண்டிருக்கும் முதல் காட்சி நினைவுக்கு வந்து, படத்தின் ஒரு காட்சியில் கூட வந்திராத அந்த கணவர் காரெக்டர் மீது பரிதாபம்தான் தோன்றியது. இப்படிப்பட்டவளிடம் என்ன பாடுபட்டுப் போய்ச் சேர்ந்தானோ அந்த மனிதன்?

ஆனால், தன் சொந்த அப்பாவிடமே அதிரடியாய் நடந்துகொள்ளும் சுருளி தனக்குத் தெரிந்த வழியில் குருவம்மாவை எதிர்கொள்கிறான். பெண்ணென்றும் பாராமல் அவளை அடித்துத் தள்ளிவிடுகிறான், கல்லைத் தூக்கி தலையில் போடப்போகிறான். அந்தக் குற்றத்துக்காக ஜெயிலுக்கும் போகிறான். வெளியே வர அவன் நிதானமாகக் காத்திருந்தாலும், குருவம்மா காத்திருப்பதில்லை. அவன் உள்ளே இருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் அவள் மைனாவின் கல்யாண ஏற்பாட்டைச் செய்வதால், அதைத்தடுக்க சிறையிலிருந்து தப்பிக்கிறான் சுருளி. அதனால் ஏற்படுகிறது பிரச்னை! ஒரு துணைச்சிறை எஸ்.பி உட்பட 7 காவலர்களும் அந்த எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.
அதன் பின் என்னவானது என்பது கதை!
சிறார்களுக்கிடையேயான அன்பு, வளர்ந்த பின் காதல் என சாதாரணமாகத் தொடங்கும் கதை, சுருளி சிறையிலிருந்து தப்பிக்கும் இடத்திலிருந்து வேறொரு பரிமாணத்துக்குள் போகிறது. புதிய கதைக்களம், புதிய கதாபாத்திரங்கள், விறுவிறுப்பான காட்சிகள் என பயணிக்கத் தொடங்குகிறது.
சுருளியைப் பிடிப்பதற்காக புறப்பட்ட பாஸ்கரும், ராமையாவும் நினைத்தபடி அவனைப் பிடித்தும் விடுகிறார்கள். மைனாவும் சூழ்நிலை காரணமாக அவர்களோடு வருகிறாள். ஆனால், நினைத்தபடி அவர்களால், குறித்த நேரத்தில் சிறைக்குத் திரும்ப முடியவில்லை. வெவ்வேறு காரணங்களுக்காக, அந்தப் பயணம் மிக நீண்டுவிடுகிறது. காடுகளில் வழிதப்பி நடந்தும், ஆஃப்ரோடு ஜீப்பிலும், பஸ்ஸிலுமாகப் பயணிக்கிறார்கள். காடும், மலையும் கூட அவர்களோடு தொடர்ந்து நகர்வதால், இந்தப் பயணம் இன்னுமே தனித்துவமானதாகவும் ஆகிவிடுகிறது.

சுருளியாக விதார்த் நடித்திருந்தார். அதுவரை ஏராளமான படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் தோன்றியிருந்த விதார்த்தை கதாநாயகனாக்கிய முதல் படம் இந்த மைனா. அவரது திரைவாழ்வில் கேரியர் பெஸ்ட் படமாக இது அமைந்தது. அதன் பின்னர் பெரிய உயரங்களை தொடவில்லை எனினும், விதார்த் உயரங்கள் தொட்டிருக்க வேண்டிய ஒரு தேர்ந்த நடிகர்.
’பயணிகள் கவனிக்கவும்’ என்ற படத்தில் எழிலன் எனும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடித்திருப்பார். அதன் முடிவில் கருணாகரன் செய்த தவறை மன்னித்துவிட்டு, காவல் துறையினரிடம் வழக்குப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் இடத்தில் விதார்த்தின் நடிப்பு நம்மையெல்லாம் நெகிழ்த்திவிடும். ஒரு மாற்றுத்திறனாளிக்கேயுரிய கையசைவுகள், பார்வை, புன்னகை, உடைந்த குரல் என விதார்த்தின் மிகச்சிறந்த நடிப்புக்கு சான்று பகிரும் கதாபாத்திரம் அது.
மைனாவாக அமலா பால் நடித்திருந்தார். பெரிய கண்கள், துருதுரு பார்வை, மேக்கப் இல்லாத முகமென ரசிகர்களைக் கவர்ந்தார். கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த, தயாரிப்பாளர் சேது, சிறைத்துறை எஸ்பி பாஸ்கராக நடித்திருந்தார். அவரோடு படம் நெடுக அலைந்து, திரிந்து பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்குள் சிக்கி அவஸ்தைப்பட்டாலும், படத்தின் நகைச்சுவைப் பகுதிகளையும் தாங்கிப் பிடிக்கும் காவலர் ராமையாவாக தம்பி ராமையா நடித்திருந்தார். அவருக்கு சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது இந்தப் படம்.
ஒளிப்பதிவு எம். சுகுமார். கானகங்களில் நிகழும் காட்சிகளில் இயற்கையின் அழகை அள்ளிக்கொண்டு வந்திருந்தார் சுகுமார். அமலாவின் க்ளோஸப் காட்சிகளில் இவரது காமிரா தூரிகையாகியிருந்தது. இசை டி.இமான். சிறப்பான பின்னணி இசையோடு, சிறப்பான பாடல்களும் இடம்பெற்றிருந்தன. ஏக்நாத் எழுதி, பென்னி தயாள், ஷ்ரேயா கோஷல் பாடிய ‘நீயும் நானும், வானும் மண்ணும்’, யுகபாரதி எழுதி, ஷான் பாடிய, ‘மைனா மைனா’ போன்ற பாடல்கள் குறிப்பிடப்பட வேண்டியவை.

ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் படத்தைத் தயாரித்தவர் ஜான் மேக்ஸ். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தவர் பிரபு சாலமன். முன்னதாக 10 ஆண்டுகளாக கிங், லீ, லாடம் என பல படங்களை பிரபு சாலமன் இயக்கியிருந்தாலும், அவரது முதல் வெற்றிப்படமாகவும், அவருக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படமாகவும் அமைந்தது இந்த மைனா. பிரபு சாலமனின் எழுத்தில் புதிய களத்தையும், புதிய கதாபாத்திரங்களையும் நம்மால் பார்க்க முடிந்தது. குரங்கணி எனும் மேற்குத்தொடர்ச்சி மலைக் கிராமத்திலும், அதைச்சார்ந்த மலைப் பகுதிகளிலும் நடக்கும் கதை ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது. அப்படியான ரிஸர்வ்டு பகுதிகளில் படமாக்கம் செய்ய, படக்குழு கொடுத்த உழைப்பு அதீதமானது.
கதாபாத்திரங்கள் என்று எடுத்துக்கொண்டால் சுயநலமான குருவம்மா போலவே சுருளியின் அப்பா, எஸ்பி பாஸ்கரின் மனைவி, காவலர் ராமையா போன்ற தனித்துவமான கதாபாத்திரங்களை பிரபு சாலமன் உருவாக்கியிருந்தார்.
சுருளி சிறுவனாக இருக்கும்போது, பள்ளிக்குச் செல்லாமல் மூன்று மாதங்களாக ஏய்த்துக்கொண்டு திரிகிறான். அதை கண்டுபிடிக்கும் ஆசிரியர், அதை அவனது அப்பாவிடம் சொல்ல வந்தால், ஆசிரியரின் காதைத் திருகி, ‘ஒரு சின்னப்பய மூணு மாசமா ஸ்கூலுக்கு வராம இருக்கிறதை கண்டுபிடிக்க உனக்கு இவ்வளவு தாமதமா?’ என்று ஆசிரியரைத் தண்டிக்கிறார் அந்த அப்பா. மாங்காய் தோப்புக்காரன் சுருளியைப் பற்றி குற்றம் சொல்ல வரும் போதும், அவரிடம் தன் உடமைகளை இழக்கிறான். பொறுப்பற்ற ஆனால் வேடிக்கையான ஒரு பாத்திரம்.
எஸ்.பி பாஸ்கரின் மனைவி சுதா பாத்திரமும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்று. ஒரு சாதாரண விசாரணைக் குற்றவாளி தப்பினால் கூட அதற்குப் பொறுப்பேற்கவேண்டிய ஜெயில் சூப்பரிண்டெண்ட் மற்றும் சிறைக் காவலர்கள், அதனால் என்னென்ன பாதிப்புகளையெல்லாம் சந்திக்கவேண்டியது வரும் என்ற பகுதிகள் நமக்குப் புதிதாக இருந்தன. கிடைக்கும் ஒரு நாள் விடுமுறைக்குள் தகுந்த ஆவணங்கள் இல்லாமலேயே அவனை மீண்டும் பிடித்துவர கிளம்புகிறார்கள். ஒரு போலீஸ்காரர், அந்த பதவிக்குரிய எந்த உரிமையையும் இந்தச் சூழலில் பயன்படுத்தமுடியாது. நமக்கே இந்த பரிதாபமான நிலை புரிகிறது. ஆனால், தலை தீபாவளிக்காக கோபத்துடன் காத்திருக்கும் அந்த மனைவிக்கு அது புரியவில்லை.

அவளோ அப்பா, அம்மா, நான்கைந்து அண்ணன்மார்கள், உறவினர்கள் என பெருங்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவளது சாதாரண தீபாவளிகளே கொண்டாட்டமாக இருந்திருக்கலாம். தலை தீபாவளியைப் பற்றிப் பெரிதான கொண்டாட்டக் கனவுகள் இருந்திருக்கலாம் அவளுக்கு. கணவர் வேலைக்குப் போனதும், இந்தக் குவார்ட்டர்ஸ் தனிமை வாழ்க்கையில் எந்தளவுக்கு மனம் பாதிக்கப்பட்டாளோ, பாஸ்கரின் சூழலைப் புரிந்துகொள்ளாத ஒரு மனைவியாக அவள் உட்பட அனைவருக்குமே பெரும் தீங்கை ஏற்படுத்திவிடுகிறாள்.
ஒரு கதையின் முடிவு என்பது கதைக்குள்ளிருந்து, அதன் இயல்பிலிருந்து, அதன் தேவையிலிருந்து, அது பேசும் தத்துவத்திலிருந்து உருவாக வேண்டும். இந்தப் படத்தின் முடிவு எல்லோரையும் அதிர்ச்சியூட்டினாலும், அது தற்செயல் நிகழ்விலிருந்து உருவாகிறது. அதை சிறப்பானதொரு முடிவு என்று சொல்லமுடியாது. அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஓர் அழகான புதிய பயண அனுபவத்தை மைனா நமக்குக் கொடுத்தது.
பயணம் மனிதர்களை அவர்களுக்குப் பழக்கமான உலகத்திலிருந்து வெளியே கொண்டுபோகிறது. அந்தப் புதிய சூழலில், புதிய மனிதர்களைச் சந்திக்கும்போது அவர்களைப் பற்றியும், தங்களைப் பற்றியும் புதிதாக அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பயணம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஒருவரை வெறும் அடையாளங்களால் —நண்பன், எதிரி, போலீஸ், குற்றவாளி என்று— பார்த்துக்கொண்டிருப்பதைவிட, அவர்களோடு பயணிக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் குணநலன்கள் தெரியத் தொடங்குகின்றன.
மனிதர்களைப் பற்றிய நம்முடைய பார்வையையும் மாறுகிறது. தொடக்கத்தில், சுருளி-மைனாவின் மீது கடுமையான கோபமும், வன்மமும் கொண்டிருக்கும் பாஸ்கர்-ராமையா இறுதியில் அவர்களின் களங்கமற்றத் தன்மையைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களைத் தம் நட்பாகவும், உறவாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
பயணம் அதைத்தான் செய்யும், மைனா அதைத்தான் செய்தது.!



















