"ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில நடிக்க பயப்படுறாங்க"- இயக்குநர் ஜீத்து ஜோசப...
விஜய் ஹசாரே விளையாட விராட் கோலி, ரோஹித் ஷர்மா நிர்பந்திக்கப்பட்டனரா? - BCCI பதில்!
இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் முதன்மையான ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் (Vijay Hazare Trophy), நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் களமிறங்க உள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு ரோஹித் ஷர்மா இந்த ஒருநாள் போட்டியில் விளையாட ஒப்புக்கொண்ட நிலையில், விராட் கோலியும் தனது சம்மதத்தைத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில், இவர்கள் இருவரும் கிரிக்கெட்டில் தற்போது ஒருநாள் போட்டி வடிவத்தை மட்டுமே விளையாடுவதால், தங்கள் ஆட்டத்தைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கான பயிற்சியாக இது இருக்கும்.

முன்னதாக, தங்கள் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர வேண்டுமெனில், இருவரும் விஜய் ஹசாரே டிராபியில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நிர்பந்தித்ததாகக் கூறப்பட்டது.
ஆனால் இதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாங்கள் இந்த நிபந்தனையை விதிக்கவில்லை என்று மறுத்துள்ளது BCCI.
'ரெவ்ஸ்போர்ட்ஸ்' (RevSportz) தளம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், "விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும்படி கோலி மற்றும் ரோஹித்துக்கு பி.சி.சி.ஐ நேரடியாக உத்தரவிடவில்லை. இது முற்றிலும் அவர்களின் தனிப்பட்ட முடிவுதான்" என்று பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பி.சி.சி.ஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் அல்லது தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் என யாராக இருந்தாலும், ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று வீரர்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நேரடி அல்லது மறைமுகமான அழுத்தம் காரணமாகத்தான், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தோல்வியைச் சந்தித்த பிறகு, கோலியும் ரோஹித்தும் ரஞ்சி டிராபியில் விளையாடினர்.
எனினும், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில், பேட்டிங் பிரிவில் ரோஹித்தும் கோலியும்தான் அணிக்கு முழுமையான நட்சத்திரங்களாகத் தொடர்ந்து பிரகாசிக்கின்றனர்.
பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூட, இந்தக் கோலியும் ரோஹித்தும் ஒருநாள் போட்டியில் அதே ஆட்டத்தைத் தொடர வேண்டும் என்று பாராட்டு தெரிவித்தார். ஆனால், 2027 ஒருநாள் உலகக் கோப்பை அணியின் அமைப்பு குறித்து எந்தக் குறிப்பையும் கொடுக்க அவர் மறுத்துவிட்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்ற பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கம்பீர், "அவர்கள் (ரோஹித் மற்றும் கோலி) உலகத் தரம் வாய்ந்த வீரர்கள், அவர்களின் அனுபவம் ஆடை மாற்றும் அறையில் (Dressing Room) மிகவும் முக்கியம். அவர்கள் நீண்ட காலமாக இதைச் செய்து வருகிறார்கள். 50 ஓவர் வடிவத்தில் அவர்கள் தொடர்ந்து அதேபோல் ஆடுவார்கள் என்று நம்புகிறேன், அது முக்கியமானதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.


















