அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை அண்ணா சாலையில் ஜன. 11-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அண்ணா சாலை-ஜிபி சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அங்கு போக்குவரத்து மாற்றம் ஜன. 11-ஆம் தேதி முதல் செய்யப்படுகிறது. இதற்காக அங்கு இரு யூ திருப்பங்கள் அமைக்கப்பட்டு, சோதனையில் அடிப்படையில் இந்த மாற்றம் அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி, தற்போது ஜிபி சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் அண்ணசாலை - ஜிபி சாலை சந்திப்பில் அனுமதிக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் அண்ணா சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படுவதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிா்க்கும் வகையில், ஜிபி சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் அண்ணா சாலையில் இடதுபுறம் திரும்பி எல்ஐசி அருகே புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள யூ திருப்பத்தில் திரும்பி, டேம்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.
அண்ணா மேம்பாலத்தில் இருந்து ஜிபி சாலையை நோக்கி வரும் அனைத்து இலகு ரக வாகனங்களும் அண்ணா சாலை மசூதி அருகே புதிதாக அமைக்கப்பட்ட யூ - திருப்பத்தில் திரும்பி ஜிபி சாலையை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.