`செளமியா அன்புமணி-ஐ தோற்கடிக்க வேண்டும்; துரோக கும்பலுக்கு..!' - ராமதாஸ் காட்டம்
அண்ணா நகரில் களமிறங்கும் ‘தளபதியின்’ நம்பிக்கைக்குரிய தளபதி! - திமுக வேட்பாளர் சிற்றரசு
சென்னை மாநகரின் ‘விஐபி’ தொகுதி என வர்ணிக்கப்படும் சட்டமன்ற தொகுதி அண்ணா நகர். இங்கு, இம்முறை திமுக ஒரு புதிய, ஆனால் தொகுதிக்கு மிகவும் பரிச்சயமான முகத்தைக் களம் இறக்கியுள்ளது. அவர்தான் நே.சிற்றரசு.
இளைஞரணி முதல் மாவட்டச் செயலாளர் வரை!
எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லாமல், ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டனாக திமுகவில் தன் பயணத்தைத் தொடங்கியவர் சிற்றரசு. ஆரம்பத்தில் சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்த இவருக்கு, கட்சியின் தலைமை மீது இருந்த விசுவாசமும், கடும் உழைப்பும் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
கடந்த 2020-ம் ஆண்டு, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த ஜே.அன்பழகன் மறைவுக்குப் பிறகு, அந்தப் பொறுப்பு யாருக்கு என்ற கேள்வி எழுந்தபோது, எத்தனையோ சீனியர்கள் வரிசையில் நின்றும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது நம்பிக்கைக்குரிய ஜூனியரான சிற்றரசுவை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தார்.

சீனியர்களை அரவணைத்துச் செல்வதிலும், இளைஞர்களை உற்சாகப்படுத்துவதிலும் இவர் காட்டிய பக்குவம், இவரை கட்சி மேலிடத்தில் ‘குட் புக்’கில் இடம் பிடிக்க வைத்தது. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலினின் ‘இளைஞர் படை’யில் மிக முக்கியமான ஒருவராகச் சிற்றரசு பார்க்கப்படுகிறார். இதுகுறித்து அவர் நம்மிடம் பகிர்கையில்,
அண்ணா நகர் தொகுதியில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது?
"வெற்றி வாய்ப்பு மிகவும் உறுதியாக உள்ளது! கடந்த 10 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் அண்ணா நகர் கண்ட வளர்ச்சி அபரிமிதமானது. தற்போது இது 'ஸ்மார்ட் அண்ணா நகர்' எனும் நிலைக்கு உயர்ந்துள்ளது. அரசின் ரூ. 8000 கூப்பன், ரூ. 2000 உரிமைத் தொகை போன்ற நலத்திட்டங்கள் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மக்கள் திராவிட மாடல் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர்".
உங்களை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுகவின் கோகுல இந்திரா பற்றி உங்கள் கருத்து என்ன?
"அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் தொகுதிக்கு போதிய எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை. அதனால்தான், கடந்த இரண்டு தேர்தல்களிலும் அதிமுகவால் இங்கு வெற்றி பெற முடியவில்லை. மக்கள் அதிமுக மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டனர்; அதற்கு அவர்களின் தொடர் தோல்விகளே சாட்சி".
தொகுதி மக்களின் பிரதான கோரிக்கைகளாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?
"கடந்த 10 ஆண்டு வளர்ச்சியால் மக்கள் பெரிய கோரிக்கைகளை முன்வைப்பதில்லை. இருப்பினும், சில பகுதிகளில் நிலத்திற்குப் பட்டா வழங்குதல், பார்க்கிங் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் அமைப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். இவை அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும்".

அண்ணா நகர் உங்களுக்கு எவ்வளவு பரிச்சயமான இடம்? மக்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறார்களா?
திமுகவில் வாய்ப்பு பெற முக்கியமான இரண்டு அம்சங்கள் உழைப்பு மற்றும் தொகுதியில் பரிச்சயமான முகமாக இருப்பது. நான் எப்போதும் மக்களால் எளிதில் அணுகக்கூடிய நபராக இருந்து வருகிறேன். மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறேன். இந்த காரணங்களால் தான் எனக்கு இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. “ என்கிறார்.













