திறப்பு விழா நேரத்தில் விபரீதம்: ராஜஸ்தான் பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் தீ - பிரதம...
ஆப்கன் வீரருக்கு இந்தியக் குடியுரிமை? - BCCI சொன்ன விஷயம்; ரஷீத் கான் அதிர்ச்சித் தகவல்!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ரஷீத் கான் தனது சுயசரிதைப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள், கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான். இவர் 'ரஷீத் கான்: தெருக்களிலிருந்து நட்சத்திர அந்தஸ்து வரை' (Rashid Khan: From Streets to Stardom) என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தனக்கு குடியுரிமை வழங்க முன்வந்ததாகவும், ஆனால் அவற்றை தான் நிராகரித்துவிட்டதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தன் புத்தகத்தில், ``கடந்த 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) மூத்த அதிகாரி ஒருவர் என்னை அணுகி, `ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அங்குள்ள பிரச்னைகள் உங்களுக்குத் தெரியும். அதனால் நீங்கள் இந்தியாவிலேயே இருந்துவிடுங்கள். உங்களுக்குத் தேவையான இந்திய ஆவணங்கள் அனைத்தையும் நாங்கள் வழங்குகிறோம், நீங்கள் இந்தியாவிற்காக கிரிக்கெட் விளையாடுங்கள்' எனக் கேட்டுக்கொண்டார்.
அந்த அதிகாரியின் பேச்சைக் கேட்டு திகைத்துப்போனேன். எப்படிப் பதிலளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. அதற்குப் பிறகு புன்னகையுடன், `மிக்க நன்றி. நான் எனது நாடான ஆப்கானிஸ்தானுக்காக மட்டுமே விளையாடுவேன். என் நாட்டிற்காக விளையாடவில்லை என்றால், வேறு எந்த நாட்டிற்காகவும் நான் விளையாட மாட்டேன்' என்று உறுதியாகக் கூறிவிட்டேன். இந்தியா மட்டுமன்றி ஆஸ்திரேலியா நாடும் இத்தகைய வாய்ப்பை வழங்கியது. ஆனால் அதையும் நான் ஏற்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ரஷீத் கான் அபாரமாகச் செயல்பட்டு வருகிறார். இந்த சீசனின் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், மீண்டும் தனது பழைய ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். இதுவரை விளையாடிய போட்டிகளில் 20 ஓவர்கள் பந்துவீசி, 154 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குஜராத் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற இவரது பந்துவீச்சு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

















