`அதே அரவணைப்பு, எளிமை...' - முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ர...
அப்பாக்களின் மௌன ராகம்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இன்றைய தலைமுறை காதலைக் கொண்டாடுகிறது; அன்பை வார்த்தைகளால் வாரி இறைக்கிறது. அணைத்துக் கொள்வதும், முத்தமிடுவதும், "ஐ லவ் யூ" என்று சொல்லிக் கொள்வதும் இன்று இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், என் அப்பாவின் தலைமுறை அப்படிப்பட்டதல்ல. அவர்கள் அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த தெரியாத, மௌனத்தை மட்டுமே ஆயுதமாகக் கொண்ட விசித்திரமான மனிதர்கள். அவர்கள் அகராதியில் அன்பிற்கு ஒரே ஒரு மாற்றுச்சொல் தான் இருந்தது, அது—கண்டிப்பு.
சிறு வயதில் நம் அப்பாக்களை நமக்கு ஒரு கடுமையான அதிகாரியாக பார்க்கத் தெரிந்திருக்கலாம். இன்றைய பிள்ளைகளைப் போல அவரிடம் ஓடிப்போய் கை கோர்த்து நடக்கவோ, இறுக்கமாக கட்டிப்பிடித்து முத்தமிடவோ அன்று அவர்களுக்கும் தெரியவில்லை, நமக்கும் துணிவில்லை. ஒருவிதமான பயமும் இடைவெளியும் எப்போதும் நமக்குள் இருந்தது.

வாழ்க்கை எனும் பெருவெளியில் கல்வி மட்டும் தான் ஒரு மனிதனை அரியாசனத்தில் அமர வைக்கும் என்பதில் அவர்கள் தீர்க்கமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் படித்துப் பேரறிஞர்களாக வேண்டும் என்ற ஒற்றை ஒளிரும் புள்ளியை நோக்கி, தங்களின் ஒட்டுமொத்த ஆயுளையும் ஓட்டப்பந்தயமாக மாற்றி, மூச்சிரைக்க ஓடிய மனிதர்கள் அவர்கள்.
அந்தக் காலத்து அப்பாக்கள் நேரத் தவறாமையைக் கடிகாரத்தின் முட்கள் வழியே அல்ல, தங்களின் மூச்சுக் காற்றின் வழியே பின் தொடர்ந்தார்கள். ஒரு இடத்திற்கு அவர்கள் ஒருபோதும் தாமதமாகச் சென்றதே இல்லை; காலம் அவர்களுக்கு கட்டுப்பட்டு நின்றது.
அவர்களின் அதே கண்டிப்பு உணவுக் கூடத்து மேசையிலும் தொடர்வதுண்டு. அவர்களில் பலர் சாப்பாட்டு பிரியர்களாக இருந்திருப்பார்கள்; அவர்கள் தனக்கென்று ஆசைப்பட்டு கேட்டு வாங்கி உண்பது உணவாக மட்டுமாகத்தான் இருந்திருக்கும்.
உணவை வீணாக்குவதை அந்தப் பழைய தலைமுறை ஒரு பாவத்தைப் போல பார்த்தது. இன்று ஆடம்பர உணவகங்களில் நாம் உணவை மீதி வைத்துப் பழகியிருக்கும் நாகரிகத்தின் முகத்தில், "சாப்பிடும் அளவை மட்டும் எடுத்துக் கொள்" என்ற அவர்களின் இந்த ஒற்றை வாக்கியம், ஆகச்சிறந்த ஒழுக்கமாகவும், பசியின் வலியாகவும் அறைகூவல் விடுக்கும்.
அதே சமயம், நம் அப்பாக்களில் பலர் தீவிரமான வாசகர்களாக இருந்தார்கள். புத்தக உலகமே அவர்களுக்குள் சுருண்டு கிடந்தது. பல்வேறு தலைப்புகளைப் பற்றி தங்கள் பிள்ளைகளோடு மணிக்கணக்காக விவாதிக்கும் அறிவுத்திறன் அவர்களிடம் இருந்தது. உணர்வுகளைப் பேசத் தெரியாத அந்தக் காலத்து அப்பாக்கள், அறிவின் வழியாகவும் கருத்துப் பரிமாற்றங்கள் வழியாகவும் நம்முடன் ஒரு ஆழமான பிணைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள்.
அவர்கள் மிகவும் கண்டிப்பானவர் களாகவே வலம் வந்தார்கள். ஆனால், இந்தப் பாசாங்கு முகமூடிக்கு பின்னால் ஒரு ரகசியக் பெருமிதம் பூத்துக் குலுங்கியது. பிள்ளைகள் வளர்ந்து, நல்ல நிலைக்கு வரும்போது, அதை அவர்கள் பிள்ளைகள் முகத்திற்கு நேரே பாராட்ட மாட்டார்கள். ஆனால், தெருமுனை டீக்கடையில் நாலைந்து பேரிடம், "என் பையன்... என் பொண்ணு..." என்று நெஞ்சு நிமிர்த்தி பெருமையோடு பேசிக்கொள்வார்கள். பிள்ளைகளின் வெற்றியைத் தங்களின் ரகசியக் கண்ணீரால் அபிஷேகம் செய்தவர்கள் அவர்கள்.
அந்தத் தலைமுறை அப்பாக்களின் காதல் மொழி மிகவும் அலாதியானது. ரோஜாக்களையோ, வாழ்த்து அட்டைகளையோ அவர்கள் ஒருபோதும் பரிமாறிக் கொண்டதில்லை. ஆனால், அவர்களின் மௌனத்தில் ஒரு பேரழகு இருந்தது.எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் மனைவியிடம் பெரிய காதல் வார்த்தைகள் பேசாவிட்டாலும், வெளியே சென்று வரும்போதெல்லாம் அவர்களுக்குப் பிடித்த தின்பண்டங்களை ஒரு சிறிய பொட்டலத்தில் வாங்கி வர ஒருபோதும் மறந்ததே இல்லை. அந்தச் சிறிய பொட்டலத்திற்குள் அத்தனை காதலும், அக்கறையும் அடங்கியிருந்தது. அதேபோல்தான், தனக்கென்று ஆடம்பரமாக எதையும் வாங்கிக் கொள்ளாத அவர்கள், தங்கள் பிள்ளைகளுக்குப் பிடித்த விஷயங்களைத் தேடிப் பிடித்துச் செய்வதில் பேரானந்தம் அடைந்தார்கள்.

காலம் உருண்டோடி, நாமும் ஒரு பெற்றோராக மாறும்போதுதான் அன்றைய கால அப்பாக்களின் இன்னொரு முகம் நமக்குத் புரிகிறது. இன்று நம் பிள்ளைகளை அவர்கள் நெஞ்சார அணைத்து கொஞ்சுவதையும், அவர்கள் கேட்கும் பிடிவாதங்களுக்குச் சிரித்துக்கொண்டே சம்மதிப்பதையும் பார்க்கும்போது நமக்குள்ளும் ஆச்சரியமும், லேசான பொறாமையும் எட்டிப் பார்ப்பது இயல்புதான். "அன்று நம்மிடம் காட்டாத இந்த மென்மையையும் அன்பையும் இன்று பேரக்குழந்தைகளிடம் எப்படி காட்டுகிறார்கள்?" என்று நம் மனம் யோசிக்கும்.
ஆனால், ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது தான் உண்மை புரிகிறது. அன்று அவர்கள் விதைத்த அன்பைத்தான், இன்று நம் பிள்ளைகளிடம் அவர்கள் பேரன்பை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்..தன் காலத்திற்குப் பிறகு தன் மனைவி வாழப்போகும் நாட்களுக்கான பாதுகாப்பை, தன் இறுதி நாட்களின் வியர்வையாலும் இரத்தத்தாலும் எழுதி வைத்துவிட்டுப் போன தீர்க்கதரிசிகள் அவர்கள்.
நாம் வளர வளரத்தான் அப்பாக்களின் முதுகின் பாரமும், அவர்கள் தேய்ந்துபோன செருப்புகளின் வலியும் நமக்குப் புரிகிறது கொடியில் தொங்கும் அவர்களின் பழைய சட்டையை தொட்டுப் பார்க்கும் போதெல்லாம், அந்தத் துணியின் நூலிழைகளில் அப்பாவின் வியர்வையின் வாசமும், அவர்களின் எல்லையற்ற பாசத்தையும் உரக்கச் சொல்கிறது .
அன்று நம்மைக் கட்டிப் பிடிக்காத அவர்களின் கைகள்தான், இன்று நம்மை இந்த பூமியில் விழாமல் தாங்கிப் பிடித்திருக்கின்றன! வார்த்தைகள் தேவையில்லை... அப்பாக்களின் மௌனமே பேரன்பின் முகவரி!
Thanks,
Akila Rajmahadev

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

















