Maruti Suzuki, Zomato ரிசல்டுகள் அவுட்: ஒன்று 'நெகட்டிவ்'; மற்றொன்று 'பாசிட்டிவ்...
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ED வழக்கு ரத்து! - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
2006 - 2011 ஆண்டு திமுக ஆட்சியின் போது தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அப்போது தமிழக அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட், மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு சென்னை திருவான்மியூரில் வீட்டுமனைகளை ஒதுக்கி உத்தரவிட்டு இருந்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி.
இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறிய லஞ்ச ஒழிப்புதுறை, அமைச்சர் ஐ. பெரியசாமி, ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
மீதமுள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி மீது 2020 ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணை நடைப்பெற்றது. அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பு வழக்கறிஞர்கள் கூறும் போது, ' லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 7 பேர் மீதும் குற்றச்சதியும் நிதி இழப்போ இல்லை என கூறி, லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை நீதிமன்றங்கள் ரத்து செய்துவிட்டது.

எனவே இந்த முறைக்கேட்டில் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல' என வாதிட்டனர்.
இதையடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
















