'3 இடியட்ஸ்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறதா? - ஆமீர் கான் சொன்ன தகவல் என்ன?
'எதிரிக்கு எதிரி நண்பன்?' பாகிஸ்தான் பயணம் முடித்த கையோடு ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர் அராக்சி
கடந்த வார இறுதியில் நடக்கவிருந்த அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்திற்கு ஈரான் தரப்பு மட்டுமே சென்றிருந்தது. அமெரிக்கா கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்துவிட்டது.
இஸ்லாமாபாத்திற்கு ஈரான் சார்பாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி சென்றிருந்தார்.
பாகிஸ்தான் மத்தியஸ்தர்களிடம் ஈரான் பேசியவை...
1. முதலில் ஈரான் மற்றும் லெபனானுக்கு எதிரான தாக்குதல்கள் நிற்க வேண்டும். எதிர்காலத்திலும் எந்தத் தாக்குதலும் நடக்காது என்கிற உத்தரவாதம் வேண்டும்.

2. அது நடந்தால், அடுத்து ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு மற்றும் நிர்வாகம் பற்றி பேசப்படும்.
3. அதுவும் நடந்துவிட்டால், கடைசியாக ஈரானின் அணு ஆயுதம் குறித்து கலந்தாலோசிக்கலாம்.
இவற்றை அமெரிக்காவிடம் தெரிவிக்கும் படி, பாகிஸ்தானிடம் ஈரான் கூறியிருக்கிறது.
இஸ்லாமாபாத் பயணத்திற்கு அடுத்து அராக்சி சென்றிறங்கிய நாடு, 'ரஷ்யா'.
அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை ஒரு பக்கம் இழுப்பறியில் இருக்க, அராக்சி ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவில் அவருக்கு தடபுடலான வரவேற்பு கிடைத்துள்ளது. இதை பார்க்கையில், 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்கிற தொனியே இருக்கிறது.
அராக்சி உடனான சந்திப்பில், 'ஈரான் நலனுக்கு என்ன உதவி வேண்டுமோ, அதை ரஷ்யா செய்யும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் ரஷ்யா தேவையான நடவடிக்கைகளை செய்யும்' என்று கூறியுள்ளார் புதின்.
அராக்சியோ ரஷ்ய பயணம் குறித்து, "மத்திய கிழக்கு மற்றும் உலக அரசியல் சூழல் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் வேளையில், ரஷ்யாவுடன் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
சமீபத்திய நிகழ்வுகள் நமது வியூகக் கூட்டாண்மையின் (strategic partnership) ஆழத்தையும் வலிமையையும் நிரூபித்துள்ளன.
நமது உறவு மென்மேலும் வளர்ந்து வரும் நிலையில், ரஷ்யா காட்டும் ஒற்றுமைக்கும், இராஜதந்திர ரீதியிலான ஆதரவிற்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரானும், ரஷ்யாவும் நண்பர்களாக இருக்கிறார்கள் என்பதை உலகத்திற்கு, முக்கியமாக, 'அமெரிக்காவிற்கு' காட்டவே அராக்சியின் இந்தப் பயணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
















