செய்திகள் :

ஆங்காரிகளின் கதை 03 : அண்ணன்களால் அடித்துக்கொல்லப்பட்ட பொண்ணு - முத்தாரம்மன் தெய்வமான கதை!

post image

‘கிட்டத்தட்ட ஒரு 150 வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது' 

``புதுப்பட்டிக்கு தெக்க இருக்க சீத்தார்க்குளத்துல கவுண்டர் ஜமீன்தாரு ஒருத்தர் இருந்தாரு. அந்த ஊருக்கிட்ட கொக்கராம்புளின்னு ஊரு இருந்தீச்சு. அங்க பால், தயிர்ன்னு வித்து வாழ்ந்திட்டு வந்த குடும்பத்துல தான் முத்தாரம்மன் பொறந்திருக்கா. ஏழு அண்ணங்களுக்கும் ஒரே தங்கச்சியா இருந்திருக்கா. அண்ணமாருக்கெல்லாம் கல்யாணம் முடிஞ்சி இவ மட்டும் கன்னிப்பொண்ணாவே இருந்திருக்கா.

புதுப்பட்டி முத்தாரம்மன்

வீட்டுல சும்மா இருக்க பிடிக்காம மையினிமார் [ அண்ணனை மணமுடித்தவர்களை சொல்லும் உறவுமுறை ] கிட்ட போய் ‘நானும் வீட்டுல சும்மா தான கிடக்கேன் உங்க கூட வாரேன’ ன்னு சொல்லவும் அவ மையினிமாரும் ‘உங்க அண்ணேமாருக்கு தெரிஞ்சா எங்கள கொன்னுப்போட்டுருவாங்களேன்னு சொல்லிருக்காவ. ஆனாலும், சரி வான்னு கூடயே கூட்டிட்டு போயிருக்காவ.

முத்தாரம்ம  பாக்கதுக்கு அவ்ளோ அழகு சிலை போல  இருப்பாளாம். அவ வீட்டை விட்டு தெருவுல நடந்து வரவும் ஜமீன்தாரு மாடில இருந்து பாத்துட்டு `இந்த பிள்ள யாரு'ன்னு கேட்டுருக்காரு. இதைப்பாத்த அவ மையினி மாருக `உடனே நீ வீட்டுக்கு போ'ன்னு சொல்லவும் அவளும் பயந்து வீட்டுக்கு வந்துட்டா. இந்தச் செய்தி அவ அண்ணங்களுக்கு தெரிஞ்சிப்போச்சு. தான் சொன்ன சொல்ல தங்கச்சி மீறிட்டாலன்னு அவளை கொல்லத் துடிச்சிருக்காங்க. அந்தப்பிள்ளை அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு புதுப்பட்டிக்கு ஓடி வந்து மண்பாண்டம் செய்யக்கூடிய வேளார் வீட்டுல வந்து ஒளிஞ்சிருக்கு.

 ‘இந்த மாதிரி என் அண்ணந்தம்பிங்க என்னை விரட்டிட்டு வர்றாங்க எனக்கு அடைக்கலம் கொடுங்கன்னு கேட்டுருக்கு’ அவங்க உடனே பெரிய தாழி பானைக்கு உள்ள போகச் சொல்லி மூடி வச்சிருந்திருக்காங்க. அவங்க வந்து தேடிப் பாக்குறாங்க இந்தப்பக்கம் யாரும் வரலயேப்பான்னு சொல்லிடுறாங்க. அந்த வீடு முழுக்க பானை தான் இருக்கிறனால நம்பி போயிடுதாங்க. அவங்களுக்கு இந்த ஊர்ல தான் யாரோ ஒளிச்சிவச்சிருக்காங்கன்னு சந்தேகப்படுதாங்க.

அப்போ ஊர் முன்னாடி நின்னு ‘எங்க தங்கச்சியை யாரோ தான் ஒளிஞ்சி வச்சிருக்கீங்க எங்களோட அனுப்புங்கன்னு’ சொல்லுருக்காங்க. அப்போ சுத்தி நின்ன ஊர்க்காரங்க என்னன்னு விசாரிச்சு ஊர்க்கூட்டம் நடத்தி கேட்டிருக்காங்க. ஊர்ப்பகை நமக்கு வேணாம் ‘இனி அவ பாடு அவ அண்ணங்க பாடுன்னு’ நினைச்சி  கொஞ்ச நேரங்கழிச்சதும் இந்தப் பொண்ணை தாழிப்பானையில வெளிய வரச்சொல்லி  வேளார் அந்த அண்ணங்களோடு முத்தாரம்மையை அனுப்பிவிடுதாரு.

அந்தப் பொண்ணு வெளியேறி போகும்போது அவ அண்ணந்தம்பிங்க குளந்தாங்கரை காட்டுவழியா விரட்டிட்டு வர்றாங்க. காட்டுவழியா விரட்டுட்டு வரும்போது, தட்டாவூரினிங்க இடத்துல சூரஞ்செடிக்குள்ள போய் ஒளிஞ்சிருக்கு. அவள வெளிய இழுத்து கம்பை வச்சி அடிச்சே கொன்னுருக்கானுங்க. இது புதுப்பட்டில யாருக்கும் தெரியாது. கொஞ்சநாள் கழிஞ்சி ஒரு வளையல் வியாபாரி வளையல் வித்துட்டு அந்தப்பக்கமா போயிருக்காரு. அந்த பொண்ணு வளையல் வியாபாரிய கூப்பிட்டு எனக்கு கொஞ்சம் வளையல் போட்டுவிடுங்கன்னு கேட்டுருக்கு.

தட்டாவூரினியில் இருக்கும் அம்மன்

வளையல் போட்டதுக்கு அப்பறம் அந்த வியாபாரி வளையலுக்கு துட்டு கேட்டுருக்காரு. இந்தமாதிரி புதுப்பட்டிக்கு போய் வேளார் வீட்டுல போய் வாங்கீங்கன்னு சொல்லிருக்கு.  வேளாரும் அந்தப்பிள்ளைக்குன்னு நினைச்சி வளையல்காரருக்கு துட்டு குடுத்துருக்காரு. அப்படியே இருக்கும் போது 3 மாசம் கழிச்சி புதுப்பட்டி அதுக்கு பக்கத்துல இருக்கிற ஊர்கள்ல வைக்கோல் படப்பு திடீர் திடீர்ன்னு தீப்பத்தி எரிஞ்சிருக்கு.

காலரா நோயும் தாக்க ஆரம்பிச்சிருக்கு. நோயெல்லாம் தாக்க ஆரம்பிச்சதும் குறி சொல்ற கோடங்கி கிட்ட கூட்டிட்டு வந்து ஊர்ல உள்ள பெரியவங்களாம் சேர்ந்து திடீர் திடீர்ன்னு வைக்கோல் படப்புலாம் தீப்பிடிச்சி எரியுது. ஆடு மாடுக்கெல்லாம் நோய் வந்து சாவுது. மனுசமார்களுக்கு காலரா வந்திடுது என்ன காரணம்ன்னு கோடாங்கிட்ட கேட்டிருக்காங்க.  அப்படி கேக்கும் போது அந்த கோடங்கி 'இந்த மாதிரி கன்னி பிள்ளை இங்க இருந்து போயி தட்டாவூரினிக்கிட்ட தெய்வமா இருக்கு. அந்த கன்னிப்பெண்ணுக்கு புதுப்பட்டியில ஒரு கோயிலை கட்டி வருசாவருசம் கொடையை குடித்தீங்கன்னா எல்லா சரியாவும்ன்னு’  சொல்லிருக்காரு. அதுக்கப்புறந்தான் புதுசா ஒரு கோயிலைக்கட்டி அந்த பொண்ணு பேரை வச்சி முத்தாரம்மன் கோயில் கட்டி கோயில் கொடை குடுத்துட்டு வர்றாங்க.”

புதுப்பட்டி அம்மன் : 

புதுப்பட்டி அம்மன் என்று சொல்லக்கூடிய முத்தாரம்மன் கோவில் திருநெல்வேலி தூத்துக்குடி நெடுஞ்சாலையில் தெய்வசெயல்புரம் கிராமத்திற்கு தெற்கே உள்ள புதுப்பட்டி என்ற ஊரில் உள்ளது. 

வழிபாட்டு முறையும் சடங்கியல் சார்பும் : 

பங்குனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை புதுப்பட்டி ஊரில் உள்ள முத்தாரம்மனுக்கு கோவில் கொடை திருவிழா கொடுக்கப்படுகிறது. 

இந்த அம்மனுக்கு பீடமோ, சிலையோ கிடையாது. கருவறையும் வட்டவடிவில் தான் அமைந்திருக்கிறது.  கோவில் திருவிழாவிற்கு முந்தைய செவ்வாய்கிழமையில் வேளார் ஒருவர் விரதம் இருந்து அம்மன் சிலையை செய்யத் தொடங்கி, ஆறுநாட்களில் செய்து முடித்த சிலையை தீயில் காட்டாமல் பச்சை மண்ணாக உலர்த்தியே வைத்திருக்கிறார்கள். பின் அதற்கு வண்ணம் பூசி அதனை ஊர்வலாக செவ்வாய்கிழமை அன்று எடுத்துச் செல்கிறார்கள்.

முத்தாரம்மன் கோவில்

பின் அந்த கோவிலின் கருவறையில் அந்த சிலையை வைத்து நேர்ச்சைகளை செய்கிறார்கள். புதன்கிழமை இரவு வரைக்கும் அந்த சிலை கோவில் கருவறையிலே இருக்கிறது. இரவு எட்டு மணிக்கு மேல் சிலையை தலைச்சுமையாய் ஊருக்கு கிழக்கே உள்ள தட்டாவூரிணிக்கு குளக்கரை வழியாக மேளத்தாளத்தோடு கொண்டு செல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட தூரத்திலே மேளக்குழுவினர் நின்று விடுகின்றனர். சிலையைச் சுமந்து செல்லும் வேளாரோடு இரண்டு காவல்காரர்கள் கம்போடு செல்கின்றனர். வேறு யாரும் அவர்களோடு செல்வதில்லை. 

திரும்பி வரும்போது சிலை இல்லாமல் அவர்கள் மட்டுமே வருகிறார்கள். அந்தக் காவல்காரர்கள் கொண்டு போன கம்பைக் கொண்டு சிலையை அழிக்கிறார்கள். அத்துடன் கொடை நிறைவு பெறுவதாக சொல்கிறார்கள். அந்த காவல்காரர்கள் நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். 

இக்கதை பல திரிபு வடிவங்களை கொண்டிருந்தாலும் இன்றும் மேற்கொள்ளப்படும் வழிபாட்டுச் சடங்கியல் முறை இந்தக் கதையின் தன்மையை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.  சிலை இல்லாமல் வெறும் கருவறையாகவே இருப்பது, அந்தப் பெண்ணை அடித்துக் கொன்றது போலவே கிடாவையும் அந்த இடத்திற்கு கொண்டு வந்து விரட்டி அடித்துக்கொல்வது போன்ற வழிபாட்டு முறைகள் கதையில் சொல்லப்படும் சம்பவங்களையே நினைவு படுத்துபவையாக இருக்கின்றன.

அதைப்போல பெண் ஒடுக்குமுறை காரணமாக தன் குடும்பத்தின் [அ] சமூகத்தின் கெளரத்தின் மீதிருந்த பயத்தின் காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இந்த அம்மனை கொலை செய்தவர்கள் அல்லாது அவளை பாதுகாத்து, பின் அவளுடைய அண்ணனோடு அனுப்பிய காரணத்திற்காக குற்றவுணர்வின் வழி வேளார் சமூகத்தினர் இத்தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர்.  

(ஆங்காரிகள் வருவார்கள்...)

பெரிய மந்து: 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தோடர் பழங்குடியினரின் கூரை வேயும் திருவிழா!

ஊட்டி முத்தநாடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.தோடர்களின் தலைமையிடமான முத்தநாடு மந்துவில் பாரம்பர்ய கோயிலான "முன்போ தேக்சி அம்மன்" கோயில் உள்ளது. 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை,... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: திருக்கோயில் வளாகத்தில் ட்ரோன், ரீல்ஸ் எடுக்க தடை! - திருக்கோயில் நிர்வாகம்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை நாட்கள், விஷேச மற்றும் ... மேலும் பார்க்க

ஆங்காரிகளின் கதை 02: ‘துடிக்க துடிக்க எங்களை சங்கறுக்கைல என்ன செஞ்சிங்க?' - தொட்டிச்சியம்மை கதை!

நாட்டார் தெய்வங்களின் தோற்றக்கதையில் பல்வேறு மாறுதல்கள் தோன்றினாலும், இன்றும் நெல்குதிருக்குள்ளும், தெரடுக்குள்ளும் புதைக்கப்பட்டிருக்கிற தெய்வங்களை கட்டியெழுப்பி அவைகளின் அவலங்களையும், கொடூரங்களையும்... மேலும் பார்க்க

புதுச்சேரி: ஆரோவில்லில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி

ஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிஆரோவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிஆரோவில் மஞ்சுவிரட்டு... மேலும் பார்க்க

சபரிமலை: நாளை வரை திருவாபரண தரிசனம்... 20-ம் தேதி சாத்தப்படும் நடை!

சபரிமலை ஐய்யப்ப சுவாமி கோயிலில் கடந்த 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.மண்டல கால, மகரவிளக்கு பூஜைகள் வரும் 20-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 19-ம் தேதி இரவு நடை அடைக்கும் வரை பக்தர்கள் தரிசனத்துக... மேலும் பார்க்க

மகரவிளக்கு தரிசிக்க காட்டில் குடியிருக்கும் பக்தர்கள்; ஐயப்ப சுவாமியின் திருவாபரண யாத்திரை! - Album

சபரிமலை: மகரவிளக்கு தரிசிக்க காட்டில் விரி வைத்து பக்தர்கள் தங்கியிருக்கிறார்கள். ஐயப்ப சுவாமிக்கு சார்த்தப்படும் திருவாபரணம் யாத்திரையாக செல்லும் காட்சி. Photo Album மேலும் பார்க்க