Notary Portal: "தமிழ்நாடே இல்லையா?" - மத்திய அரசின் நோட்டரி இணையதளத்தில் நிலவும்...
நகை அடமானம்... ஒற்றை வளையலை வாங்க மறுக்கும் வங்கிகள்; காரணம் என்ன?
அவசரத் தேவைகளுக்கென 'எமெர்ஜென்சி ஃபண்டு' சேர்த்து வைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனாலும், ஓர் அவசர பணத் தேவைக்கு சாமானியர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் தங்க நகைக் கடன்தான்.
பணத் தேவையின் அளவைப் பொறுத்து, தங்களிடம் இருக்கும் நகைகளை எடுத்துச் சென்று அடகு வைத்து தங்க நகைக் கடன் பெறுகிறார்கள். அரும்பாடுபட்டு வாங்கிய நகைகளைப் பாதுகாப்பாக அடகு வைக்க வேண்டும் என்பதற்காக, நிறைய பேர் வங்கிகளில் நகைகளை அடகு வைக்கிறார்கள்.

இந்நிலையில் சில வங்கிகளில் ஒற்றை வளையலை அடகு வைக்க அனுமதிப்பதில்லை. ஜோடி வளையலையும் சேர்த்துக்கொண்டு வந்தால்தான் அடகு வைக்க வங்கிகள் அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வங்கியாளர் மணியன் கலியமூர்த்தியிடம் பேசியபோது, "வங்கிகளில் குறிப்பிட்ட சில நகைகளை அடகு வைக்க வாங்கக்கூடாது என விதிமுறைகள் உண்டு. அதாவது, கோவில் சார்ந்த நகைகள், தட்டு, விளக்கு போன்ற பொருள்கள், தாலி போன்றவை இதில் வரும்.
அதே போல ஒற்றைக் கம்மலையும் அடகு வைக்க வாங்கமாட்டார்கள். திருடப்பட்டவையாக இருக்கலாம் என்பதால், இதுபோன்றவற்றை வங்கிகளில் அடகுக்கு வைக்க வாங்க மாட்டார்கள்.
ஆனால், ஒற்றை வளையலை அடமானம் வைக்கக்கூடாது என எந்த விதிமுறையும் இல்லை. சில நேரங்களில் குடும்பத்தினருக்குத் தெரியாமல், குடும்பத்தைச் சேர்ந்த மற்றொருவர் அதாவது மனைவிக்குத் தெரியாமல் கணவர், பெற்றோருக்குத் தெரியாமல் பிள்ளைகள் இதுபோல ஒற்றைக் கம்மல், ஒற்றை வளையலை அடமானம் வைத்துவிடலாம்.
விஷயம் தெரிந்ததும், நகையின் உரிமையாளர் வந்து தங்களுக்குத் தெரியாமல் இந்த நகை அடகு வைக்கப்பட்டிருக்கிறது எனக் கேட்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக சில வங்கிகள் ஒற்றை வளையல் அடமானத்துக்கு அனுமதிப்பதில்லை.

உடைந்த நகைகளுக்கும் மறுப்பு
சிலர் உடைந்த, அறுந்த செயின் போன்வற்றை அடகு வைக்க எடுத்து வருவார்கள். அவசரத்தில் அடகுவைக்கும்போது அது உடைந்திருப்பதையோ, அறுந்திருப்பதையோ கவனித்திருக்கமாட்டார்கள்.
நகையை மீட்க வரும்போது, 'அடகு வைக்கும்போது உடையவில்லை, செயின் அறுந்துபோகாமல் நன்றாக இருந்தது' என்று வாக்குவாதம் செய்வார்கள். இதுபோன்ற சூழல்களைத் தவிர்க்க சில வங்கிகள் உடைந்த நிலையில் இருக்கும் நகைகள், அறுந்த செயின் போன்றவற்றையும் வங்கிகளில் அடமானத்துக்கு வாங்குவதில்லை.
மூழ்கிப் போகும் நகை
ஒற்றை வளையலை அடகு வைப்பவர்கள், அதற்கு சரியாக வட்டி கட்ட முடியவில்லை என்றால் பல நேரங்களில் அதை மீட்பதில்லை. வங்கிகளில் அடகு வைக்கப்படும் நகைகள் மீட்கப்படாமல் (Non Performing Assests -NPA) போகும்போது, அது வங்கியின் நற்பெயரையும் கெடுக்கும் என்பதால், பல வங்கிகள் அதுபோன்ற நகைகளை அடமானத்துக்கு வாங்குவதில்லை. வங்கிகளுக்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறை தணிக்கை (ஆடிட்டிங்) நடக்கும்.

ஒருவேளை வங்கியின் மீது ஏதேனும் புகார் இருந்தால், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வந்து ஆடிட்டிங் நடத்துவார்கள். அப்போது ஒற்றை வளையல், உடைந்த நகைகள் பற்றிய அதிகாரிகள் ஏதேனும் கேள்விகள் எழுப்பினால் அதற்கு வங்கி கிளை மேலாளர் பதில் சொல்லியாக வேண்டும். தேவையில்லாத இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கவே விரும்புவார்கள்.
அதே போல எந்த வங்கிக் கிளையில் நகை ஏலத்துக்கு வரவில்லையோ, அப்போது அது சரியாக இயங்குகிறது என்று அர்த்தம். ஒற்றை வளையலை அடகு வைப்பவர்கள் அதனை மீட்காமல் விட்டுவிட்டால், அதனால் கிளையின் நற்பெயர் கெட்டுவிடும் என்பற்காவும் இதைத் தவிர்ப்பார்கள்.
வட்டி கட்டாமல் மூழ்கிப் போன நகைகளை ஏலம்விடும்போது, இதுபோன்ற ஒற்றை வளையலை வாங்குவதற்கும் பெரும்பாலானவர்கள் முன்வருவதில்லை. காரணம், ஜோடி வளையலாக இருந்தால் அதை அப்படியே மறுபடியும் விற்பனை செய்ய முடியும். தனி வளையலாக விற்பனை செய்வது கடினம். அதுபோன்ற சூழலில் நகையை உருக்கித்தான் ஆக வேண்டும். அது அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம்.

ஒற்றை வளையலை வைக்க விரும்பினால்...
ஒருவேளை ஒற்றை வளையலை வைக்க வங்கிக்குச் செல்லும்போது அங்கே அதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், வங்கி கிளை மேலாளரிடம் தகவலைத் தெரிவிக்க வேண்டும். அந்த வங்கியில் அந்த நபர் எத்தனை ஆண்டுகளாக வாடிக்கையாளராக இருக்கிறார், அவர் வங்கிப் பரிவர்த்தனை எப்படி இருக்கிறது, தேவைப்பட்டால் சிபில் ஸ்கோர் வரை செக் செய்து, மேலாளர் அனுமதி கொடுப்பார். கிளை மேலாளர் அனுமதி கொடுக்கும்பட்சத்தில், அடமானம் வைப்பதற்கு அதை அப்ரைசர் எடுத்துக்கொள்வார்" என்கிறார் மணியன் கலியமூர்த்தி.












