செய்திகள் :

"பாக். வீரர் ஒப்பந்தம்; பற்றி எரியும் சர்ச்சை - காவ்யா மாறனை சீண்டிய லலித் மோடி! - பின்னனி என்ன?

post image

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

ஐபிஎல், பிபிஎல், சிபிஎல் போன்று டி20 லீக் போட்டிகளுக்கு மாற்றாக நூறு பந்துகளைக் கொண்ட 'தி ஹண்ட்ரட் லீக்' போட்டிகள் பிரிட்டனில் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் பர்மிங்காம் பீனிக்ஸ், லண்டன் ஸ்பிரிட், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ், சன்ரைசர்ஸ் லீட்ஸ், ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் வெல்ஷ் ஃபயர் உள்ளிட்ட 8 அணிகள் இருக்கின்றன.

'தி ஹண்ட்ரட் லீக்'
'தி ஹண்ட்ரட் லீக்'

தி ஹண்ட்ரட் லீக் ஏலம்

இதில், நான்கு அணிகளை இந்தியாவை மையமாகக் கொண்டுள்ள ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பங்குகளை வைத்துள்ளனர்.

ஜூலை மாதம் இந்தத் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் வீரர்களுக்கான ஏலம் மார்ச் 12 ஆம் தேதி லண்டனின் பிகாட்லி லைட்ஸில் நடைபெற்றது.

சன்ரைசர்ஸ் அணிக்காக உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் டேனில் வெட்டோரி உள்ளிட்டோர் ஏலத்தில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். இந்த அணிக்கு கேப்டனாக ஹாரி ப்ரூக் செயல்பட்டு வருகிறார்.

அப்ரார் அகமது

இந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதை 1.90 லட்சம் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் ரூ.2.34 கோடி) ஏலத்தில் வாங்கியது.

27 வயதான அப்ரார் அகமது, கடந்த 2024 ஆம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 38 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 52 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் எதுவும் நடைபெறவில்லை.

அப்ரார் அகமது
அப்ரார் அகமது

#BoycottSunrisers - நெட்டிசன்கள்

மேலும், 2009 ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் சன்ரைசர்ஸ் அணி தரப்பில் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதை ஏலத்தில் ஒப்பந்தம் செய்ததற்கு எதிராக இந்தியாவில் எதிர்ப்புகள் கிளம்பின.

மேலும் அப்ரார் அகமது கடந்த காலங்களில் இந்திய ராணுவம் மற்றும் விங் கமாண்டர் அபிநந்தன் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார் என்று குறிப்பிட்டு #ShameOnSRH, #BoycottSunrisers போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக காவியா மாறனுக்கு எதிராக கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர். தொடர்ந்து சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கம் செய்யபட்டது.

ராஜிவ் சுக்லா கருத்து

இந்த விமர்சனங்கள் குறித்து பேசியிருந்த பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா, “அது எங்கள் அதிகார வரம்பில் கீழ் இல்லை. அதை வெளிநாட்டு லீக் கிரிக்கெட்டில் அவர்கள் செய்துள்ளனர். அதில் நாங்கள் எதுவும் செய்வதற்கு இல்லை. அதனால் அது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

டேனியல் வெட்டோரி
டேனியல் வெட்டோரி

டேனியல் வெட்டோரி விளக்கம்

அப்ரார் அகமதின் தேர்வு குறித்து பேசிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, " அப்ரார் அகமதின் பந்து வீச்சில் நிறைய நுணுக்கங்கள் இருந்தன. சர்வதேச அணிகளில் இருந்து பல சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் எங்களின் முன்னுரிமையாக அப்ரார் அகமது தான் இருந்தார்" என்று கூறியிருந்தார்.

சுனில் கவாஸ்கர் விமர்சனம்

இதனைத்தொடர்ந்து தான் அப்ரார் அகமதுவின் ஒப்பந்தம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடியிருந்தார்.

“பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்படும் தொகை, இறுதியில் வருமானவரி மூலம் அந்நாட்டு அரசாங்கத்துக்குச் செல்கிறது. அந்தப் பணம், ஆயுதங்களை வாங்குவதற்கு வழிவகை செய்கிறது.

பாகிஸ்தான் வீரர்களுக்குக் கொடுக்கப்படும் தொகையானது மறைமுகமாக இந்திய வீரர்கள் மற்றும் பொதுமக்களின் மரணத்திற்கு பங்களிக்கிறது.

கவாஸ்கர்
கவாஸ்கர்

உயிர்களைவிட முக்கியமானதா?

'தி ஹண்ட்ரட்' அணியின் பயிற்சியாளரான நியூசிலாந்தைச் சேர்ந்த வெட்டோரிக்கு இந்த நிலைப்பாடு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம் என்றாலும், இந்திய உரிமையாளர்கள் இந்நிலையைப் புரிந்துகொண்டு பாகிஸ்தான் வீரர்களை ஒப்பந்தம் செய்வதைத் தவிர்த்திருக்க வேண்டும்.

வேறு எந்த நாடும் விளையாடாத ஒரு தொடரில் வெற்றி பெறுவது, இந்திய உயிர்களைவிட முக்கியமானதா?” என கடுமையாகச் சாடியிருந்தார்.

காவியா மாறனை சாடிய லலித் மோடி

இந்நிலையில் தற்போது அப்ரார் அகமதுவை ஒப்பந்தம் செய்த விவகாரத்தில், ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி காவியா மாறனை சாடியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மக்கள் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் நிலையில், ஒரு பாகிஸ்தான் வீரருக்காக 2.34 கோடி ரூபாய் முதலீடு செய்வதா? ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குவது எப்படி, பொதுமக்களின் பார்வையை எப்படி கையாளுவது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்" என்று காவியா மாறனை சாடியிருக்கிறார்.

லலித் மோடி
லலித் மோடி

அப்ரார் அகமது விளையாடுவாரா?

தொடர்ந்து சமூக வலைதளங்களில் அப்ரார் அகமதை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்துகொண்டே தான் இருக்கின்றன. ஆனால் அணி நிர்வாகம் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவும் இல்லை. அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுதொடர்பாக அளிக்கவில்லை. வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள இத்தொடரில் அப்ரார் அகமது விளையாடுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

``கம்பீர் நினைத்தால், நானும், விராட், ரோஹித்தும் விலகுவது தப்பில்லை" - அஷ்வின் ஓப்பன் டாக்

கடந்த 2024 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நடுவே, ரவிச்சந்திரன் அஷ்வின் அறிவித்த ஓய்வு முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அனில் கும்ப்ளேவின் (619 வி... மேலும் பார்க்க

சர்வதேச போட்டிகளை விட IPL-ல் அதிக சம்பளம் வாங்கும் அம்பயர்கள்! - ஏன் தெரியுமா?

கிரிக்கெட்டில் வீரர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவையும் கூர்மையாகக் கவனித்து, மைதானத்தின் அழுத்தங்களுக்கு நடுவே சரியான தீர்ப்புகளை வழங்கும் அம்பயர்களின் பங்கும் ஆட்டத... மேலும் பார்க்க

CSK: `தோனி சொன்ன அட்வைஸ்; நான் அடுத்த ஜடேஜாவா?' - ரூ.14.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பிரசாந்த் வீர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சமீபத்தில் நடைபெற்ற 2026 ஐபிஎல் ஏலத்தில் 20 வயதுடைய இளம் வீரர் பிரசாந்த் வீரை சுமார் 14.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரசாந்த் வ... மேலும் பார்க்க

IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த சஞ்சு சாம்சன்

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. சிஎஸ்கே அணி மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்குகிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டனாக இருந்த சஞ்சு ... மேலும் பார்க்க

IPL 2026: `தலையாகவோ, வாலாகவோ இருக்க நான் சிஎஸ்கேவுக்கு போகலை, அங்க..!' - தோனி குறித்து சஞ்சு சாம்சன்

2026 ஆம் ஆண்டிற்கான ஐபில் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி தனது முதல் போட்டியை மார்ச் 30... மேலும் பார்க்க

காபூல் தாக்குதல்: "இது போர்க்குற்றம்; ரமலான் மாதத்தில் நடந்த இந்தத் தாக்குதல்.!"- ரஷீத் கான் வேதனை

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று (மார்ச். 17) பாகிஸ்தான் கொடூரத் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர... மேலும் பார்க்க