இனி 10 இல்லை; 4 மட்டுமே.! மியூச்சுவல் ஃபண்டில் நாமினி பற்றி செபி கொண்டுவரும் அதி...
என் ரோஜா நீயா: `மணிரத்னம் சார் அனுப்பிய ஸ்மைலிதான் பெரிய பாராட்டு!' - மதன் கார்க்கி | வரித்துணையே 10
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'.

இன்றைய பகுதிக்கு, விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படத்தில் வரும் 'என் ரோஜா நீயா' பாடல் பற்றி, பாடலாசிரியர் மதன் கார்க்கியிடம் பேசினோம். இயக்குநர் மணி ரத்னமிற்கு டிரிப்யூட் செலுத்து வகையில், பாடல் வரிகளில் அவர் இயக்கிய அனைத்து பட தலைப்புகளையும் இப்பாடல் வரிகளில் அமர வைத்திருப்பார். இந்தப் பாடலுக்குப் பின்னிருக்கும் சுவாரஸ்ய கதைகளைக் கேட்டோம்.
மதன் கார்க்கியிடம் பேசுகையில், "என்னிடம் 'குஷி' படத்தின் இயக்குநர் அப்பாடலுக்கான சூழலைச் சொல்லும்போதே, காஷ்மீரில் மணி ரத்னம் ரசிகராக இருக்கும் நாயகனுக்கு காதல் வருகிறது என்பதைத் தான் என்னிடம் சொன்னார். 'ரோஜா' படத்தின் தீம்தான் அதுவும்!
இந்தப் பாடலின் தெலுங்கு வெர்ஷனை இயக்குநரே எழுதியிருந்தார். தமிழில் இந்தப் பாடலை நான் எழுதும்போது, மணி ரத்னம் சார் படத்தின் டைட்டில்களைக் கோத்து எழுதினேன். பாடல் வெளிவந்ததும், மணி ரத்னம் சாருக்கு, 'உங்களின் ரசிகராக காஷ்மீரில் இருக்கும் நாயகனுக்கு நாயகி மீது காதல் ஏற்படுகிறது' என்ற சூழலை இயக்குநர் சொன்னார்.

அதற்கேற்றபடி நான் இந்தப் பாடலை எழுதியிருக்கிறேன்' என மெசேஜுடன் இந்தப் பாடலையும் அனுப்பினேன். அவர் அழகாக ஒரு ஸ்மைலி எமோஜியை மட்டும் அனுப்பினார். அந்த ஸ்மைலியைதான் இந்தப் பாடலுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகவும் நான் கருதுகிறேன்." என லேசாக புன்னகை தந்தவர்,
"அப்பா இந்தப் பாடலைக் கேட்ட பிறகு, அவருக்கு குறிப்பிட்ட ஒரு வரி மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னார். நான் எழுதிய பாடல்களில் மொத்தமாக 6 பாடல்களுக்கு மட்டுமே அப்பா பாராட்டியிருக்கிறார்.
'என் ரோஜா'வில், 'நான் ராவணன் ஆனால், என் ஈழமே நீ தானே!' என்கிற வரியைக் குறிப்பிட்டு அப்பா என்னிடம் பேசினார். 'இந்த வரி மிகவும் அழகாக இருந்தது. வழக்கமாக ஈழம் என்கிற வார்த்தையை யாரும் பயன்படுத்தமாட்டார்கள். 'நீ ராவணன் என எழுதிய பிறகு வேறு என்ன வேண்டுமானாலும் எழுதியிருக்கலாம். அடுத்தாக ஈழம் எனச் சொன்னது மிகவும் அழகாய் இருந்தது' எனப் பாராட்டு தந்தார். பல்லவி மற்றும் முதல் இரண்டு சரணங்களுக்கு மணி சார் படத்தின் டைட்டில்களை மட்டுமே வைத்து எழுத வேண்டும் என நினைத்தேன்.

அப்படியே நான் எழுதியும் விட்டேன். பிறகு, இன்னொரு வெர்ஷனிலும் இந்தப் பாடலை எழுதினேன். இரண்டாவதாக எழுதிய வெர்ஷனில் 'மணிரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான் - அப்பா' காம்போவில் வந்த பாடல்களின் பல்லவியை வைத்து நான் எழுதினேன். ஆனால், இயக்குநர் பட தலைப்புகளைக் கொண்ட வெர்ஷனை பாடலாக்கலாம். அதுதான் அனைவருக்கும் புரியும் என்றார். 3 முதல் நான்கு மணி நேரத்திற்குள் இந்தப் பாடல் முழுவதையும் நான் எழுதி முடித்துவிட்டேன்." என்றார்.
"மணி சார் படங்களை ரசித்துப் பார்த்து வளர்ந்தவன் நான். அவருடைய படங்களும், அதில் வரும் பாடல்களும், நான் எழுதிய காதல் பாடல்களுக்கு பெரும் உதவிகளைச் செய்திருக்கின்றன. நான் அதில் அப்பா எழுதிய பாடல்களை மட்டும் சொல்லவில்லை. மணி சார் படத்தின் அனைத்து பாடல்களும் என்னுள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

முதல் முறையாக நான் மணி சார் படத்திற்கு பாடல் எழுதும்போது, எனக்கு பயமெதுவும் இல்லை. அவர் என்னென்ன விஷயங்கள் எதிர்பார்ப்பார் என தெரிந்ததால் எனக்கு பயமில்லை. ஆனால், அப்போது ரஹ்மான் சார் - அப்பா - மணி ரத்னம் சார் காம்போவை நாம் உடைத்துவிட வேண்டாம் என்கிற யோசனை மட்டும் என்னிடம் இருந்தது. பிறகு, அவருக்கு டிரிப்யூட்டாக எழுதிய இந்தப் பாடலையும் நான் அத்தனை மகிழ்ச்சியுடன் எழுதினேன்." என்றார்.












.jpeg)





