'மஞ்சும்மல் பாய்ஸ்' சிதம்பரத்துடன் கைகோர்த்த டொவினோ, சூர்யா பட இயக்குநர் - 'பாலன...
`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!
ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக-வில் இருந்து விலகி 5 இடங்களை வென்ற காங்கிரஸ் தவெக-விற்கு ஆதரவு அளித்திருக்கிறது.
இன்னும் ஆறு இடங்கள் தேவை என்பதால் தவெக சிக்கலில் தவித்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே தவெக தலைவர் விஜய் நேற்று (மே. 6) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.
பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையோடு வாருங்கள் என ஆளுநர் அனுப்பி வைத்த நிலையில், த.வெ.க தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா ரத்தானது.
இன்று கேரளா செல்லவிருந்த ஆளுநரை விஜய் மீண்டும் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார். ஆட்சியமைத்துவிட்டு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என த.வெ.க விஜய் தரப்பு ஆளுநரிடம் முறையிட்டதாகக் கூறப்பட்டது.
அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் அழைப்புவிடுத்ததாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியானாலும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஆளுநர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழக ஆளுநர் மாண்புமிகு திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு இன்று (07.05.2026) சென்னை லோக் பவனுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இல்லை என்பதை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் விளக்கிக் கூறினார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.















