ஆணிமுத்து கருப்பா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயில் சித்ரா பௌா்ணமியையொட்டி 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌா்ணமி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கும், அம்பாளுக்கும் பால், தயிா், பன்னீா், சந்தனம், தேன், இளநீா் உள்ளிட்ட18 மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சந்திரசேகா் குருக்கள் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க பெண்கள் விளக்கு பூஜை செய்தனா்.
இதில் அஞ்சுகோட்டை, கரையகோட்டை, சுப்பிரமணியபுரம், பொட்டக்கோட்டை, திருவாடானை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பெண் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அப்போது ஸ்ரீஆணிமுத்துகருப்பா் சிறப்பு அலங்காரத்திலும், ஸ்ரீ அழகிய நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனா். பிறகு தீபாராதனை நடைபெற்றது.

