ஒரேநாளில் 11% வீழ்ச்சி; வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறார்களா? நீங்கள் அடுத்து ...
"தமிழ் சினிமா வரலாற்றிலேயே இது மோசமான ஆண்டு!" - எப்படி இருந்திருக்கிறது 2025 கோலிவுட்? | ஒரு பார்வை
ஆண்டின் இறுதி நாட்கள் வந்துவிட்டது! ஒவ்வொரு வருடமும், சினிமாவில் பல எதிர்பாராத அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
சற்று, இந்தாண்டின் சினிமாக்களையும் திரும்பிப் பார்த்தால், வருடந்தோறும் நிகழும் அதே அற்புதம் இந்தாண்டும் வெகு சிறப்பாகவே நிகழ்ந்திருக்கிறது.
ஆம், இந்தாண்டு பல சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் நம் விஷ் லிஸ்டில் இடம் பிடித்ததோடு பாக்ஸ் ஆஃபீஸிலும் பெரும் வசூலை ஈட்டியிருக்கிறது.
இது ஒரு புறமிருந்தாலும், இந்த வருடம் பாதி முடிவடைந்த நேரத்திலேயே திரையரங்கு உரிமையாளர்கள், ``இந்தாண்டு மிக மோசமானதாக தொடர்ந்து வருகிறது. பெரிய படங்கள் நாங்கள் கணித்ததைப் போல எங்களுக்கு கைகொடுக்கவில்லை!" என அவர்களுடைய வருத்தங்களைச் சொல்லத் தொடங்கினர்.
இந்தாண்டு வெளியாவதற்கு திட்டமிட்டிருந்த அத்தனை படங்களும் வெளியாகி விட்டன. கடைசியாக டிசம்பர் 25-ம் தேதி 'ரெட்ட தல' படமும், 'சிறை' திரைப்படமும் ரிலீஸ் ஆகியிருந்தன. இந்த வருடத்தின் ரிலீஸ் கணக்குகள் அத்தோடு முடிவடைந்துவிட்டன.
இப்படியான சமயத்தில், 2025-ம் ஆண்டு கோலிவுட்டுக்கு எப்படியான வருடமாக அமைந்திருக்கிறது என்ற கேள்வியோடு முதலில் தயாரிப்பாளர் மற்றும் சினிமா வணிக ஆய்வாளரான தனஞ்செயனைத் தொடர்புக் கொண்டோம்.
''இந்தாண்டு எத்தனை படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தந்தன? எப்படியான வகைகளில் அவை லாபம் தந்தன? இந்தாண்டு தயாரிப்பாளர்களுக்கு எப்படியானதாக இருந்திருக்கிறது?" என அனைத்துக் கேள்விகளுக்கும் விரிவான பதிலை நம்மிடையே பகிர்ந்து கொண்ட தனஞ்செயன், "இந்தாண்டு மட்டும் தமிழ் சினிமாவில் மொத்தமாக 285 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதிகமான திரைப்படங்கள் வெளியான ஆண்டு என இந்த வருடத்தை நாம் குறிப்பிடலாம்.

அந்த 285-ல், 35 திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமானதாக அமைந்திருக்கிறது. இந்த 35 படங்களில் சிலவற்றுக்குத் திரையரங்குகளில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்காது.
ஆனால், அவை ஓடிடி, டிஜிட்டல் உள்ளிட்ட பிசினஸ் மூலம் லாபத்தை தொட்டிருக்கின்றன. சினிமாவில் வணிக ரீதியான வெற்றி என்பதே மிக முக்கியமானது. கடந்தாண்டு 25 திரைப்படங்கள் மட்டுமே லாபங்களை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தன.
இந்தாண்டு அந்தக் கணக்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், 2023, 2024-ம் ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்தாண்டில் திரையரங்க வசூல் குறைந்திருக்கிறது.
இதற்கு கன்டென்ட்தான் முக்கியமான காரணம். சில திரைப்படங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபகரமான இடத்தை அடைந்துவிடுகிறது.
ஆனால், தியேட்டரில் ஒரு படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு என்பது மிக முக்கியமானது. அதே சமயம் தயாரிப்பாளருக்கு வணிக ரீதியான வெற்றி என்பது பிரதானமானது.
ஒன்றை நம்பித்தான் தயாரிப்பாளர் எப்போதும் செயல்படுவார். முதலீடு செய்யும் தயாரிப்பாளருக்கு மீண்டும் பணம் கிடைக்க வேண்டும். இன்றைய தேதியில், ஒரு தயாரிப்பாளருக்கு தியேட்டர் 20 சதவீத வருவாயை ஈட்டித் தருகிறது.
கிட்டத்தட்ட 38 சதவீத வருவாயை ஓடிடி பிசினஸ் மூலம் அவர்கள் எடுக்கிறார்கள்." என்றவர், "அடுத்த வருடம் இந்த லாபத்தை தொடும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்!" எனப் பேசினார்.

'2025-ம் ஆண்டு திரையரங்க உரிமையாளர்களுக்கு எப்படியான ஆண்டாக அமைந்திருக்கிறது?' என்ற கேள்வியுடன் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினோம்.
நம்மிடையே பேசியவர், "சொல்லப்போனால், திரையரங்க உரிமையாளர்களுக்கு 2025 மிக மோசமான ஆண்டு. கடந்த 100 ஆண்டுக்கால தமிழ் சினிமா வரலாற்றிலேயே இந்த 2025-தான் மோசமான ஆண்டாக எங்களுக்கு அமைந்திருக்கிறது.
திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் (Footfall) பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.
இந்தாண்டு வெளியான பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் நாங்கள் நினைத்தப்படி சோபிக்காததுதான் இந்த வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம்.
'டூரிஸ்ட் ஃபேமிலி', 'மாமன்', 'தலைவன் தலைவி', 'டிராகன்' போன்ற படங்கள்தான் இந்த வருடம் திரையரங்குகளைக் காப்பாற்றி இருக்கின்றன.
இந்த வருடத்தில் இருந்தது போன்ற ஃபுட்ஃபால் இருந்தால் உரிமையாளர்கள் திரையரங்கத்தை நடத்துவது மிகக் கடினம்.
2023, 2024-ம் ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தாண்டு கிட்டத்தட்ட 40 சதவீத ஃபுட்ஃபால் குறைந்திருக்கிறது.
ஓடிடி தளங்களில் மிகக் குறுகிய இடைவெளிகளில் படம் வெளியாவது, நல்ல கண்டென்ட் கொண்ட திரைப்படங்கள் பெரியளவில் வராததுதான் இந்த சரிவுக்கு முக்கியமான காரணங்களாக நான் சொல்வேன்.
தனி மனித தாக்குதல் செய்யப்படுவது மாதிரியான மோசமான விமர்சனங்கள் முதல் நாளிலேயே வருவதும் இதற்கொரு காரணம்." என்றவர், " திரையரங்கிற்கு வெளியே எடுக்கப்படும் விமர்சனங்களில் நிறை, குறைகளை சொல்லும் விதத்தில் சொல்லலாம்.
ஒரு உணவகத்திற்கு வெளியே நின்றுக் கொண்டு 'இந்த ஹோட்டலில் உணவு தரமாக இல்லை. உணவகத்தில் சுகாதாரம் கிடையாது' எனச் சொன்னால், சாப்பிடுவதற்கு யார் வருவார்கள்?! அதே ஃபார்முலாதான் இங்கும்." என்றார்.
தொடர்ந்து பேசியவர், "அடுத்தாண்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசியிருக்கிறோம். பெரிய நட்சத்திரங்களின் படங்களில் கண்டென்ட் இல்லையென்றால் நாங்கள் திரையரங்கிற்கு வரமாட்டோம் என 2025-ம் ஆண்டில் மக்கள் நிரூபித்துவிட்டார்கள்.
மக்கள் விரும்பும் விஷயங்களை தயாரிப்பாளர்கள் புரிந்துக் கொண்டால் 2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு ஆண்டாக அமையும். மலையாளத்திலும், இந்தியிலும் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியாகிறது.
ஆனால், இங்கு நான்கு வாரத்திற்கு உள்ளாகவே ஓடிடி தளங்களுக்கு வந்துவிடுதால், திரையரங்கிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஓடிடி ரிலீஸை தள்ளி வைக்கவும் பேசி வருகிறோம். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் சினிமாவும் நன்றாக இருக்கும்.
இந்த வருடத்தில் பெரும் நஷ்டங்களை அவர்கள் சந்தித்துவிட்டார்கள்." என்றார் வருத்தத்துடன்.

இவரைத் தொடர்ந்து நம்மிடையே பேசிய சென்னை ரோகிணி திரையரங்கத்தின் உரிமையாளர் ரேவந்த், "வருடத்திற்கு வருடம், மற்ற மொழி படங்களுக்கு தமிழகத்தில் கிடைக்கும் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதனை நாங்கள் நேர்மறையான விஷயமாகப் பார்க்கிறோம். இந்தாண்டு, 'காந்தாரா', 'லோகா' போன்ற படங்களுக்கு இங்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்தது.
இப்போதுதான் தமிழ் ஆடியன்ஸ், தமிழை தாண்டி மற்ற தென்னிந்திய சினிமாக்களை பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தி படங்களும் 'காந்தாரா', 'லோகா' படங்களைப் போல அதிரடியான வரவேற்பை பெறுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும்."என்றவர், " 'அவதார்' திரைப்படம் இந்த டிசம்பர் மாதத்தில் எங்களுக்கு ஆடியன்ஸைக் திரையரங்குகளுக்கு கொண்டு வந்திருக்கிறது.
ஆனால், நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த மற்ற ஹாலிவுட் படங்கள் இந்தாண்டு பெரியளவில் வசூல் ஈட்டவில்லை. அதுபோல, இந்தாண்டு சில ரீ-ரிலீஸ் படங்களும் எங்களுக்கு கைக் கொடுத்திருக்கிறது எனலாம்.
சில பெரிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்த்தோம். அதில் இந்தாண்டு எங்களுக்கு ஏமாற்றம்தான்.

இந்த வருடம் விஜய் சாரின் படம் வெளியாகாததையும் குறையாகப் பார்க்கிறோம். வருடந்தோறும் அவருடைய படம் வெளியாகி நல்லதொரு லாபத்தை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.
அது இந்த வருடம் தவறிவிட்டது. இந்தாண்டு பல சின்ன திரைப்படங்கள் மேஜிக்குகளை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தாண்டும் இது தொடர வேண்டும் என்பதே எங்களின் ஆசை.
அதுபோல, இந்தாண்டைப் போலில்லாமல் அடுத்தாண்டு அனைத்து பெரிய திரைப்படங்களும் சோபிக்க வேண்டும்." எனக் கூறினார்.


















