திருவள்ளூர்: கொடூரமாகத் தாக்கப்படும் வடமாநில இளைஞர்; சர்ச்சையைக் கிளப்பும் வீடிய...
"என் அரசியல் ஒதுக்கிவிட்டு 'நமது சமூகத்தைச் சேர்ந்தவன்' என்றால், எனக்கு உடன்பாடில்லை" - மாரி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயக்குநர் மாரி செல்வராஜ்-க்கு அவரது ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் மாவட்ட கிராம மக்கள் சார்பாகப் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் 10, +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், "30 ஆண்டுக்குப் பின்பு மணத்தி கணேசன் யார் என்பதை தம்பி மாரி செல்வராஜ் வெளியுலகிற்குக் கொண்டு வந்தார். என்னுடைய விளையாட்டு கால வாழ்க்கையை மிகவும் நேர்த்தியாகப் படமாக்கியுள்ளார். எல்லா கபடி வீரர்களும் இயக்குநர் மாரி செல்வராஜை மனதார வாழ்த்தி பாராட்டுகின்றனர்.
என்னை முதலில் அனைவரும் மணத்தி கணேசன் என அழைப்பது மாதிரி தற்போது 'பைசன்' என்றுதான் என்னை அழைக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

இதில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், ரசிகர்களை அமைதியாக இருக்கச் சொன்னார். "மேடையில் பேசுபவர்களின் பேச்சைக் கேட்டால்தான் நீங்கள் நாளை மேடையில் பேச முடியும்" எனக்கூறி விட்டு, "நமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்தும், இளம் தலைமுறையினரைக் கட்டமைப்பது, கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பார்வை, அரசியல், இலக்கியம் ஆகிய விஷயங்களைக் குறித்துப் பேசுவதற்காகத்தான் கூடுகிறோம்.
சும்மா துதி பாடுவதற்கோ, கத்திக் கூப்பாடு போடுவதற்கோ கூடவில்லை. அப்படிக் கூடுவதாக இருந்தால் என்னை அழைக்காதீர்கள். எல்லா இடத்திலும் இதைத்தான் செய்கின்றனர். அமைதிதான் நம்மை வலுப்படுத்தும். சென்னையில் நடக்கும் மார்கழி மக்கள் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. எனக்கு வருத்தமாக இருக்கிறது.
எந்த நொடியிலும் உங்களை விட்டு விலகாமல் இருக்க முடியும். அம்பேத்கர், மார்க்ஸ், பெரியார் ஆகிய 3 கொள்கைகள்தான் எனது இலக்கு. மானுடத்தைத்தான் பேசுவேன். நான் சாதிக்கு எதிரான ஒருவன்தான். நான் சாகும் வரை ஜாதி ஒழியுமா என்று எனக்குத் தெரியாது. நான் அறத்தின் பக்கம்தான் நிற்பேன். ஒரு காலும் சாதியின் பின்னால் நிற்க மாட்டேன்.

ஒருவேளை நான் அரசியலுக்கு வந்து ஈடுபட்டால், ஏதேனும் ஒரு அமைப்பைத் தொடங்கினால் அப்போதும்கூட சாதி சமூகத்திற்கு எதிராகச் செயல்படுபவனே ஒழிய, எனது சமூகத்தைக் காட்ட வேண்டிய கடமை இருந்தாலும்கூட மானுட சமூகத்தின் மீது பேரன்பை நிலைநாட்டுவதுதான் முக்கியம்.
அதற்காக வாழ்நாள் முழுவதும் போராடுவேன். என்னை சாதிப் பெயரில் எடுத்துக்கொள்ளாதீர்கள். கிட்டத்தட்ட 15-20 வருட தவ வாழ்க்கை வாழ்ந்துள்ளேன். என்னை நேசிப்பவராக இருந்தால் என்னுடைய அரசியலைப் புரிந்துகொண்டு அதனைச் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது ஆசை.
எனது அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு 'நமது சமூகத்தைச் சேர்ந்தவன்' என்று சொன்னால் அதில் எனக்கு முழு உடன்பாடு கிடையாது. நான் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எனது சினிமா உங்களுக்குப் போதையைக் கொடுக்காது. கத்துவதால் ஒன்றும் கிடைக்கப்போவது இல்லை" என்று தெரிவித்தார்.



















