BB Tamil 9: "சுயநலமா பேசுற மிகப்பெரிய ஃபிராட்; அவங்க ஒரு கோழை" - திவ்யாவைக் கடும...
திமுகவை சீண்டும் தேசிய காங்கிரஸ்? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களின் பதில் என்ன?
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்த நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் எனப் பேசப்பட்டது.
அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வுக் குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி அண்மையில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தொடர்ந்து வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி, அதுவும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், திமுக எம்.பி கனிமொழி,``அ.தி.மு.க ஆட்சியை விட்டு வெளியேறியபோது தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. எந்த வளர்ச்சியும் இல்லாமல், கடன் சுமையால் சூழப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தை முன்னேறிய, வளர்ந்த மாநிலமாக திமுக அரசு மாற்றியுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதை மேற்கோள்காட்டி திமுகவை சீண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பிரவின் சக்கரவர்த்தி,``அனைத்து மாநிலங்களை விடவும் அதிக கடன் நிலுவையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. 2010-ம் ஆண்டில், உத்தர பிரதேசம் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கடனுடன் இருந்தது. இப்போது, உ.பியை விட தமிழகத்துக்கு அதிக கடன் உள்ளது.
வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு பிறகு தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், இரண்டுமே கொரோனாவிற்கு முந்தைய நிலைகளை விட இப்போது அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, ``தமிழ்நாட்டை உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு, சமூக நீதி, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் திறமையான நலத்திட்ட விநியோகம் ஆகியவற்றில் தமிழ்நாடு நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆனால் உத்தர பிரதேசம், நிறுவனமயமான ஆட்சிக்கு பதிலாக 'புல்டோசர் ராஜ்' மாடலை ஊக்குவித்து, பெரும்பாலான மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளது.
கடன் சுமையை அதன் விளைவுகளுடன் சேர்த்தே பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் கடன்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து, மின் உற்பத்தித் திறன், சமூகப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி மற்றும் மனித மூலதனத்தை வலுப்படுத்தும் நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிதி கொள்கைகளும் முக்கியம். தமிழ்நாடு அதிக வரி வருவாயை வழங்கும் மாநிலமாக இருந்தாலும், நிதிப் பகிர்வில் மிகக் குறைவாகவே பெறுகிறது.

ஆனால் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் கணிசமாக அதிக நிதியைப் பெறுகின்றன. இயற்கை சீற்றங்களின்போதும், சர்வ சிக்ஷா அபியான் போன்ற திட்டங்களின்போதும் கூட, தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நியாயமான நிதிகள் மறுக்கப்பட்டு, தாமதப்படுத்தப்பட்டுள்ளன.ஆகவே, நாம் கடன் குறித்து விவாதிப்போம். ஆனால் சரியான பின்னணியுடன். வளர்ச்சி விளைவுகள், தனிநபர் வருமானக் குறியீடுகள், வரிப் பங்களிப்பு மற்றும் நிதிப் பகிர்வு, மற்றும் ஆட்சியின் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விவாதிப்போம்.
இந்த அளவுகோல்களின்படி, தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட வெகு தூரத்தில் முன்னணியில் உள்ளது. எனவே நமது தமிழ்நாட்டை தாழ்த்த வேண்டாம்." எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், ``கடனளவை மட்டுமே வைத்து ஒரு மாநிலத்தை மதிப்பிடுவது என்பது வெறும் உடலை வைத்து ஒருவரின் உடற்தகுதியை தீர்மாணிப்பது போன்றதாகும்." என பதிலளித்திருக்கிறார்.

















