மும்பை: நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி; ஆன்லைன் நீதிமன்றத்தில் விசாரித்து ரூ.3...
மகாராஷ்டிரா தேர்தல்: பவார் குடும்பத்தை ஒன்றுசேர்த்த அதானி; சரத்பவாருடன் கூட்டணி சேரும் அஜித்பவார்
சரத்பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த நிகழ்ச்சியில் அஜித்பவாரும், சரத்பவாரும் தங்களது குடும்பத்தோடு ஒன்றாகக் கலந்து கொண்டனர்.
பாராமதியில் முதல் ஏ.ஐ. சென்டர் திறப்பு விழா நடந்தது. இதனை அதானி நிறுவனம் அமைத்துள்ளது. அதனைத் திறந்துவைக்கும் விழாவிற்கு அதானியே தனது மனைவியோடு நேரில் வந்திருந்தார். பாராமதி விமான நிலையத்திற்குச் சிறப்பு விமானத்தில் அதானி தனது மனைவியோடு வந்தபோது அவரை அஜித்பவாரும், சரத்பவாரின் பேரன் ரோஹித் பவாரும் சேர்ந்து வரவேற்றனர்.
அதானி தம்பதி பின் இருக்கையில் அமர்ந்து வர ரோஹித் பவார் கார் ஓட்டினார். அஜித்பவார் அவர் அருகில் அமர்ந்திருந்தார். பின்னர் நடந்த ஏ.ஐ. சென்டர் திறப்பு விழாவில் சரத்பவாரோடு அவரது மகள் சுப்ரியா சுலேயும் கலந்து கொண்டார். விழாவில் இரண்டு பவார் குடும்பங்களும் முழுமையாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் சுப்ரியா சுலே அதானி மனைவியைக் கௌரவிப்பதாக இருந்தது. ஆனால் சுப்ரியாவே முன்வந்து அஜித்பவார் மனைவி சுனேதிர பவாரிடம் சொல்லி அதானி மனைவி பிரீத்தி அதானியைக் கௌரவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதில் பேசிய சுப்ரியா சுலே, அதானி குடும்பத்திற்கும் பவார் குடும்பத்திற்கும் இடையேயான உறவு 30 ஆண்டு பழமையானது என்று தெரிவித்தார்.
விழாவில் பேசிய அதானி, சரத்பவாரை தனது வழிகாட்டி என்றும், இந்தியாவின் கிராமப்புற மற்றும் விவசாய வளர்ச்சிக்கான சரத்பவாரின் தொலைநோக்கு பார்வை மற்றும் பங்களிப்பு அபரீதமானது என்றும் பாராட்டினார்.
விழா முடிந்த பிறகு அதானி தம்பதியை சரத்பவார் தனது இல்லத்திற்கு அழைத்துச்சென்றார். அவர்களுடன் அஜித்பவாரும் சென்றார். அவர்கள் அனைவருக்கும் சரத்பவார் தனது இல்லத்தில் விருந்து கொடுத்து கௌரவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு இரண்டு தலைவர்களும் ஒரே நிகழ்ச்சியில் இந்த அளவுக்கு நெருக்கமாக கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
தேர்தலில் கூட்டு சேர்ந்த பவார் குடும்பம்
மகாராஷ்டிரா முழுவதும் வரும் ஜனவரி 15ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
புனே மாநகராட்சியில் சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையிலான இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் சரத்பவார் கட்சி வேட்பாளர்கள் தங்களது கடிகாரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அஜித்பவார் நிபந்தனை விதித்தார்.
இதை சரத்பவார் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதையடுத்து பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது. புனே அருகில் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சித் தேர்தலுக்கு இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் அஜித்பவார் தங்களது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சரத்பவார் கட்சிக்கு நிபந்தனை விதித்தார். ஆனால் அதனை சரத்பவார் ஏற்கவில்லை. இதையடுத்து அஜித்பவார் தனது முடிவில் இருந்து இறங்கி வந்துள்ளார்.

சரத்பவார் கட்சி வேட்பாளர்கள் அவர்களது கட்சி சின்னத்தில் போட்டியிடலாம் என்று அஜித்பவார் தெரிவித்தார். இதையடுத்து இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதை துணை முதல்வர் அஜித்பவார் பிம்ப்ரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''இது நடக்க வேண்டும் என்று பலரும் விரும்புவதால் இந்தக் குடும்பம் ஒன்று சேர்ந்திருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும்.
நாங்கள் ஒரு விவசாயி குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறோம். விவசாயம் எங்கள் ஜாதி. மகாராஷ்டிராவின் நலனுக்காக சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருக்கின்றன" என்று கூறினார்.
இத்தேர்தலில் அஜித்பவார், பா.ஜ.கவை ஓரங்கட்டிவிட்டு தனித்து போட்டியிடுகிறார். இதையடுத்து மும்பையில் போட்டியிடும் தங்களது கட்சியின் 37 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அஜித்பவார் வெளியிட்டு இருக்கிறார்.

















