ஆபாச மெசேஜ்: ``ஆட்சியருக்கு நீதி; அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"...
ஆபாச மெசேஜ்: ``ஆட்சியருக்கு நீதி; அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - மாணிக்கம் தாகூர்
சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், `` கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக - எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள்கள், செய்தித் தொலைக்காட்சிமற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமென காத்திருக்காமல் பொது வெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும்.

எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கும் உத்தரவிட வேண்டும், டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்து பத்திரப்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செய்திதாள்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு எப்படி உத்தரவிட முடியும்? மாவட்ட கலெக்டர் எதுவும் புகார் அளித்துள்ளாரா? ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு காவல்துறை தரப்பில், `இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், தலைமைச் செயலாளர் உள்பட யாரிடமும் புகார் அளிக்கவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துகளைக் கேட்டு நாளைக்குள் விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார். இதற்கிடையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) முறையான புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அந்தப் புகாரில், `தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும்' அந்த எம்.எல்.ஏ மீது ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவரும், எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், ``The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb















