செய்திகள் :

சக மாணவியைக் கொன்று தின்ற பிறகும் தண்டனையிலிருந்து தப்பிய கொடூர ஜப்பானியர்! - குருதிச் சுவடுகள் 6

post image

பாரிஸ் என்றாலே காதல், கலை, இலக்கியம் ஆகியவைதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், 1981 ஜூன் மாதத்தில் ஒரு மாலைப் பொழுதில், பாரிஸின் புகழ்பெற்ற 'பாய்ஸ் டி பொலோன்' பூங்காவில் நடைப்பயிற்சி சென்ற இருவர் கண்ட காட்சி ஒட்டுமொத்த உலகையே உறைய வைத்தது. அங்கே கிடந்த இரண்டு பெரிய சூட்கேஸ்களில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. காவல்துறையினர் வந்து அவற்றைத் திறந்தபோது, உள்ளே சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் இருந்தது. அந்தப் பெண்ணைக் கொன்றது யாரோ ஒரு தொழில்முறைக் குற்றவாளி அல்ல; அவளுடன் ஒன்றாகப் படித்த, அமைதியான, பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஜப்பானிய மாணவன்.

ஜப்பானியர் இஸ்ஸே சகாவா (Issei Sagawa)
ஜப்பானியர் இஸ்ஸே சகாவா (Issei Sagawa)

கொலையாளி யார்?

1949, ஏப்ரல் 26-ம் தேதி, ஜப்பானின் கோபே நகரில் ஒரு மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் இஸ்ஸே சகாவா (Issei Sagawa). அவரது தந்தை ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். பணத்திற்கோ வசதிக்கோ எந்தக் குறையும் இல்லாமல் வளர்ந்த சகாவாவிற்கு, சிறுவயது முதலே தனது உடல் தோற்றம் குறித்துக் கடுமையான தாழ்வு மனப்பான்மை இருந்தது. ஐந்து அடிக்கும் குறைவான உயரமும், சிறிய கைகளும் கொண்டிருந்த அவர், தன்னை மிகவும் பலவீனமானவனாகக் கருதினார். இதன் விளைவாக, சிறுவயதிலிருந்தே மனித மாமிசத்தை உண்ண வேண்டும் என்ற விசித்திரமான, கொடூரமான மனச்சிதைவு எண்ணங்கள் அவருக்குள் வளரத் தொடங்கின.

அழகான, ஆரோக்கியமான ஒரு பெண்ணின் சதையைத் தின்றால், அவளது அழகும் சக்தியும் தனக்குக் கிடைக்கும் என்ற விபரீதமான எண்ணம் அவருடைய ஆழ்மனதில் வேரூன்றியது. 1977-ம் ஆண்டு, தனது 28-வது வயதில் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற சர்போன் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் படிப்பதற்காகப் பிரான்ஸ் சென்றார். அங்குதான் அவரது கொடூர எண்ணம் நிஜமாக மாறியது.

கொடூர இரவு

சொர்போன் பல்கலைக்கழகத்தில் சகாவாவுடன் படித்தவர் ரெனீ ஹார்டெவெல்ட் (Renée Hartevelt) என்ற 25 வயது நெதர்லாந்து நாட்டு மாணவி. மிகவும் அழகான, கலகலப்பான பெண்ணான ரெனீ, சகாவாவிற்கு ஜெர்மன் மொழி கற்றுக் கொடுத்து வந்தார். 1981 ஜூன் 11-ம் தேதி, ஜெர்மன் கவிதைகளைப் படிப்பதற்கு உதவி தேவைப்படுவதாகக் கூறி, ரெனீயை தனது அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு இரவு உணவிற்கு அழைத்தார் சகாவா. ரெனீ மேஜையில் அமர்ந்து சகாவாவிற்கு முதுகு காட்டியபடி கவிதைகளைச் சத்தமாக வாசித்துக் கொண்டிருந்தபோது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரெனீயின் கழுத்தில் சுட்டார்.

ரெனீ அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அடுத்த இரண்டு நாட்களில் சகாவா செய்த செயல்கள் மனித நாகரிகத்தையே வெட்கப்பட வைத்தன. ரெனீயின் சடலத்தைப் பாலியல் வன்கொடுமை செய்த அவர், அவளது உடலின் பல பாகங்களைப் பச்சையாகவும், சமைத்தும் சாப்பிட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு உடல் அழுகத் தொடங்கியதும், மீதமுள்ள பாகங்களை இரண்டு பெரிய சூட்கேஸ்களில் அடைத்து, ஒரு டாக்ஸியை வரவழைத்து 'பாய்ஸ் டி பொலோன்' பூங்காவில் வீசிவிட்டுத் தப்பினார். ஆனால், சூட்கேஸில் வழிந்த ரத்தத்தைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுக்க, டாக்ஸி ஓட்டுநரின் உதவியோடு சகாவா உடனடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவுடன் எந்தத் தயக்கமும் இன்றித் தனது குற்றத்தை அவர் முழுமையாக ஒப்புக்கொண்டார்.

ஜப்பானியர் இஸ்ஸே சகாவா (Issei Sagawa)
ஜப்பானியர் இஸ்ஸே சகாவா (Issei Sagawa)

சட்டத்தின் ஓட்டைகளும் விடுதலையும்

இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்து, அதை அவரே ஒப்புக்கொண்ட பிறகும், சகாவா ஒரு நாள் கூடச் சிறைக்குச் செல்லாமல் தப்பினார். இங்கேதான் சர்வதேசச் சட்டங்களின் மிகப்பெரிய குளறுபடி அரங்கேறியது. சகாவாவைப் பரிசோதித்த பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள், அவர் சட்டபூர்வமாக 'மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்றும், நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளத் தகுதியற்றவர் என்றும் அறிவித்தனர். இதனால் அவருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படாமல், பிரான்ஸில் உள்ள மனநலக் காப்பகத்தில் அடைக்கப்பட்டார்.

சகாவாவின் செல்வந்தத் தந்தையின் சட்ட முயற்சிகளும், பிரான்ஸ் அரசின் முடிவும் சேர்ந்து, அவர் மீது இருந்த வழக்கை பிரான்ஸ் நீதிமன்றம் கைவிட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது சொந்த நாடான ஜப்பானுக்கு நாடு கடத்தப்பட்டார். ஜப்பானின் டோக்கியோவில் உள்ள மாட்சுசாவா மனநல மருத்துவமனையில் சகாவா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த ஜப்பானிய மருத்துவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், "சகாவாவிற்கு எந்த மனநலப் பிரச்சினையும் இல்லை; அவர் முழுமையான சுயநினைவுடன் தான் இருக்கிறார். வெறும் பாலியல் வக்கிரம் காரணமாகவே இந்தக் கொலையைச் செய்துள்ளார்" என்று அறிக்கை கொடுத்தனர்.

சகாவா மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பதால், அவரை மனநல மருத்துவமனையில் தொடர்ந்து வைத்திருக்க ஜப்பானியச் சட்டப்படி முடியாது. அதே சமயம், பிரான்ஸ் நீதிமன்றம் ஏற்கெனவே வழக்கை முடித்துவிட்டதாலும், வழக்கின் ஆவணங்களை ஜப்பானுக்கு வழங்காததாலும், ஜப்பானிய காவல்துறையால் அவர் மீது மீண்டும் புதிய வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க முடியவில்லை. இதன் விளைவாக, 1986 ஆகஸ்ட் 12-ம் தேதி சகாவா மருத்துவமனையிலிருந்து தானாகவே வெளியேறி, முழுமையான சுதந்திர மனிதனாக நடமாடத் தொடங்கினார்.

'பிரபலமாக' மாறிய கொலையாளி

விடுதலையான பிறகு சகாவா தலைமறைவாக வாழவில்லை; மாறாக, தனது கொடூரக் குற்றத்தையே முதலீடாக மாற்றிப் பணம் சம்பாதித்தார். 1980-களின் பிற்பகுதியிலும் 1990-களிலும் ஜப்பானிய ஊடகங்கள் அவனை ஒரு விசித்திரமான பிரபலமாக மாற்றின.

தான் செய்த கொலையைப் பற்றியும், மற்ற குற்றங்களைப் பற்றியும் பல புத்தகங்களை எழுதினான். இதில் உச்சகட்ட நகைமுரண் என்னவென்றால், ஜப்பானின் பிரபலமான 'ஸ்பா' என்ற பத்திரிகையில் அவர் உணவக விமர்சகராக கட்டுரைகள் எழுதினார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விருந்தினராகக் கலந்துகொண்டு பேட்டி அளித்தார். 1992-ம் ஆண்டு 'தி பெட்ரூம்' என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து 'VICE' நிறுவனம் 'Interview with a Cannibal' என்ற ஆவணப்படத்தையும், 2017-ல் 'Caniba' என்ற ஆவணப்படத்தையும் எடுத்தன. உலகப் புகழ்பெற்ற The Rolling Stones இசைக்குழுவின் "Too Much Blood" என்ற பாடலும், The Stranglers குழுவின் "La Folie" என்ற பாடலும் இவரது சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டன.

ஜப்பானியர் இஸ்ஸே சகாவா (Issei Sagawa)
ஜப்பானியர் இஸ்ஸே சகாவா (Issei Sagawa)

இறுதிக் காலம்

ஊடக வெளிச்சம் எப்போதும் நிரந்தரமல்ல. 2000-ம் ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானிய சமூகம் அவரை முற்றிலுமாகப் புறக்கணிக்கத் தொடங்கியது. 2005-ம் ஆண்டு அவரது பெற்றோர் இறந்தபோது, அவர்களது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளக் கூட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வருமானம் இன்றி வறுமையில் வாடிய அவர், அரசாங்கத்தின் உதவித்தொகையில் வாழத் தொடங்கினார். 2013-ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, அன்றாடத் தேவைகளுக்குக் கூடத் தனது தம்பியையும் உதவியாளர்களையும் நம்பி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இறுதியில், 2022 நவம்பர் 24-ஆம் தேதி, தனது 73-வது வயதில் நிமோனியா பாதிப்பால் டோக்கியோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இஸ்ஸே சகாவாவின் வாழ்க்கை வரலாறு, வெறும் ஒரு கொடூரக் குற்றத்தின் கதை மட்டுமல்ல; இரண்டு நாடுகளின் நீதித்துறைகளுக்கு இடையே இருந்த நிர்வாகக் குளறுபடிகள் எப்படி ஒரு கொலைகாரனுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தன என்பதற்கான கசப்பான சாட்சி. பாதிக்கப்பட்ட ரெனீ ஹார்டெவெல்ட்டின் குடும்பத்திற்கு இறுதிவரை நீதி கிடைக்காமல் போனது ஒருபுறம் இருக்க, கொடூரக் குற்றங்களைக் கூடப் பரபரப்புக்காகக் கொண்டாடும் சில ஊடகங்களின் போக்கையும் இந்தச் சம்பவம் உலகிற்குத் தோலுரித்துக் காட்டியது.

இருட்டைப் பயன்படுத்தி 4 கொலைகள்! உலகையே அதிர வைத்த லண்டன் தொடர் கொலை வழக்கு - குருதிச் சுவடுகள் 5

1942 பிப்ரவரி மாதம். இரண்டாம் உலகப் போரின் பதற்றம் லண்டன் வீதிகளில் நிரம்பியிருந்தது. ஜெர்மன் போர் விமானங்களின் இரவு நேரத் தாக்குதல்களுக்கு இலக்காகாமல் இருக்க, அரசாங்கம் கடுமையான 'பிளாக்-அவுட்' விதிகள... மேலும் பார்க்க

காவிரி – மேட்டூர் திட்டம்: பங்களித்து, சாத்தியமாக்கிய முக்கிய ஆளுமைகள் | மேட்டூர் அணை ஓசை 45

பிரிட்டிஷ் பொறியாளர்களின் விபரங்கள்1. கர்னல். W. M. எல்லீஸ்., C.I.E.முழுப்பெயர்: ELLIS, William Montague. ராயல் இன்ஜினியர். வடிவமைப்பாளர். இந்திய பொதுப்பணித்துறையில் முதலில் உதவி பொறியாளராக 1884-ம் ஆண... மேலும் பார்க்க

`செஸ்போர்டின் 64 கட்டங்களுக்காக 63 கொலைகள்' ரஷ்யாவை நடுங்கவைத்த சீரியல் கில்லர்! குருதிச் சுவடுகள் 4

சதுரங்கம் என்பது அறிவுக்கூர்மைக்கான விளையாட்டு. ஆனால், மாஸ்கோவின் தென்பகுதியில் அமைந்திருந்த ஒரு தனிமையான பூங்காவில், சதுரங்கப் பலகையின் 64 கட்டங்களும் மனித உயிர்களின் கணக்காக மாற்றப்பட்டன. ஒவ்வொரு மன... மேலும் பார்க்க

பிரிட்டனை அதிரவைத்த 'கொலைகார' டாக்டர்; 132 பேரைக் கொன்று சொத்துகளை அபகரித்த கதை- குருதிச் சுவடுகள் 3

இங்கிலாந்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள 'ஈஸ்ட்போர்ன்', ஓய்வுபெற்ற செல்வந்தர்கள் அமைதியாக காலத்தைக் கழிக்கும் ஒரு ரம்மியமான நகரம். 1950-களில் அந்த நகரத்தின் மிக உயரிய மரியாதைக்குரிய மனிதராக வல... மேலும் பார்க்க

மைக்ரோ லெவல் சிக்கனம்; திறன்மிகு நிர்வாகம்; அணையின் தளபதிகள் | மேட்டூர் அணை ஓசை 44

சிக்கன நடவடிக்கைகள்காவிரி-மேட்டூர் அணை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தேவைப்பட்ட அளவை அரசு ஒதுக்கினாலும், மேட்டூரில் திட்ட நிர்வாகம் சிறப்பாகவும், சிக்கனமாகவும் செயல்பட்டு செலவுகளை குறைப்பதற்கு பல முயற்சி... மேலும் பார்க்க

வால்வுகளில் ஏற்பட்ட அரிப்பு; மோட்டார் லாஞ்ச்; மனமகிழ் மன்றம் | மேட்டூர் அணை ஓசை 43

மேட்டூர் அணை திட்டம் போன்ற பெரிய திட்டங்கள் நடைபெறும் இடங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று கூடி வசிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த ஊரில் சில வருடங்கள் தொடர்ந்து வசித்து வாழ்வதற்கு உண்டா... மேலும் பார்க்க