கள்ளக்குறிச்சி: ``துணிச்சல்' மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்" - எம்.பி கன...
ஆபாச மெசேஜ்: ``பொய் சொல்வதை எவ்வளவு துணிச்சலாக சொல்கிறார்கள்?" - தமிழிசை, அண்ணாமலை காட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பானது. இந்த விவகாரம் குறித்து பேசிய அருள் விக்னேஷ், ``இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. என்னை முடக்குவதற்கு போடப்பட்ட சதித்திட்டம்." என உறுதியாக மறுத்தார்.
அதைத் தொடராக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், ``அருள் விக்னேஷ் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். முதல் பட்டதாரி, அவரே பாவம்... அவர்மீது சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை வைத்து குற்றம்சாட்டமுடியாது. அவரே இல்லை என விளக்கமளித்திருக்கிறார்." எனப் பேசியிருந்தார்.
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், ``சமூக ஊடகத்தில் யாரோ பரப்பியதை வைத்து எல்லோரும் அவர் மீது குற்றம்சுமத்துகிறார்கள். கனிமொழி இதை அரசியலாக்க வேண்டும் என்பதற்காக இதைத் தொடங்கியிருக்கிறார். வதந்திகளுக்கெல்லாம் பதில சொல்லிக்கொண்டிருக்க முடியாது." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், அதிமுக வழக்கறிஞர் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை தேவை என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது தமிழ்நாடு அரசு, ``மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தது.
இதற்கிடையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) முறையான புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு எதிராகத் த.வெ.க. (TVK) சட்டமன்ற உறுப்பினர் (MLA) மீது சுமத்தப்பட்டுள்ள தீவிரமான குற்றச்சாட்டுகளை எளிதாகப் புறந்தள்ளவோ அல்லது மூடிமறைக்கவோ முடியாது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள அதிகாரப்பூர்வ புகாரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளும், பொறுப்புடைமை மற்றும் பெண் அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்த கவலையளிக்கும் கேள்விகளை எழுப்புகின்றன.

சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், பாரபட்சமற்ற விசாரணையும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படுவது அவசியமாகும். பொதுச் சேவையில் உள்ள பெண்களுக்குக் கண்ணியமும், பாதுகாப்பும், நிறுவன ரீதியான ஆதரவும் கிடைக்க வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பில் தாங்கள் உறுதியாக இருப்பதாக அரசு தொடர்ந்து கூறிவரும் கூற்றுகள் வெறும் வார்த்தைகளாக மட்டும் நின்றுவிடாமல், செயலில் பிரதிபலிக்க வேண்டும். த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது.
அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதை விட, ஒரு பெண்ணின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் காப்பதே முக்கியம் என்பதை அரசு நிரூபிக்க வேண்டும்.
ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கே நீதி கிடைப்பதில் இத்தகைய போராட்டம் நிலவி, அவரது புகாரே இழுத்தடிக்கப்படுவதாகவோ அல்லது முடக்கப்படுவதாகவோ குற்றம் சாட்டப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள சாதாரணப் பெண்களுக்கு என்ன நம்பிக்கை மிஞ்சியிருக்கிறது? ஒரு மூத்த பெண் அதிகாரியாலேயே நிறுவன ரீதியான ஆதரவைப் பெற முடியாத சூழலில், சாமானியப் பெண்களின் நிலை என்னவாகும்?" எனத் தெரிவித்திருந்தார்.
மற்றொரு பதிவில், ``இப்பொழுது ஆட்சியரிடம் இருந்து புகார் வந்திருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது... குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று சொன்ன சட்டமன்ற உறுப்பினர் என்ன சொல்லப் போகிறார்? அமைச்சர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? ஏன் கூட்டணிக்கு பரிந்து பேசிய மாணிக்கம் தாகூர் என்ன சொல்ல போகிறார்....?.. பொய் சொல்வதை எவ்வளவு துணிச்சலாக சொல்கிறார்கள்..? மறுபடியும் சொல்கிறோம் பெண்களைப் பாதுகாப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் இப்பொழுதாவது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்...
பதவியில் இருக்கும் பெண்களே இப்படி பரிதவிக்க வேண்டி இருக்கிறது என்றால்... சாமானிய பெண்களுக்கு உதவி செய்ய இந்த அரசு எப்படி முன் வரும்?... தாமாக புகார் அளிப்பது கூட தாமதமாகத்தான் முடிகிறது என்றால் தமிழ்நாட்டின் தங்கைகளின் நிலை என்ன?... தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர் ஆகிறார்." என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக வீ தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை ``கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரில் “Inappropriate Advances” மற்றும் “Unwarranted Messages” குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ள செய்தி, தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும், நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி, வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணையும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கத் தவறினால், அரசு நிர்வாகத்தின் மீதும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb














