Q3 RESULTS: JSW Steel, Adani Green, Cipla, Indico, KVB – Important Updates | IPS...
"இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை" - இபிஎஸ் குறித்து டிடிவி தினகரன்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது.
அதிமுக, பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளும் இணைந்துகொண்டன.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.
இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், "இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை. அம்மாவின்(ஜெயலலிதா) பிள்ளைகள் நாங்கள்.
எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை. அமித்ஷா 2021-லேயே எங்களோடு கூட்டணியில் இணைந்துகொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அப்போது நடக்கவில்லை.
2026-ல் மீண்டும் கூட்டணியில் இணைய அமித்ஷா என்னிடம் பேசும்போது பழனிசாமியும், நானும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டார்.
இரண்டு பேரும் ஒப்புதல் அளித்துதான் கூட்டணி உருவாகியிருக்கிறது.

தற்போது எடப்பாடி பழனிசாமியும், நானும் அண்ணன் தம்பிகளாக ஒன்றிணைந்து விட்டோம். நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம்.
இரண்டு பேரும் ஒன்றாகப் பிரசாரத்திற்குச் செல்வோம். திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வராமல் விடமாட்டோம். அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவோம்" என்று பேசியிருக்கிறார்.














